மே 1ம் தேதிக்குள் 18 வயதான அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி!: அமெரிக்க மக்களிடம் அதிபர் ஜோ பைடன் உறுதி..!!

வாஷிங்டன்: அமெரிக்காவில் வரும் மே 1ம் தேதிக்குள் 18 வயதிற்கும் மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுவிடும் என்று அதிபர் ஜோ பைடன் உறுதி அளித்துள்ளார். அமெரிக்காவில் கடந்த ஆண்டு இதேநாளில் வெடித்துக்கிளம்பிய வைரஸ் தொற்று தற்போது வரை அந்த நாட்டை ஆட்டி படைத்து கொண்டிருக்கிறது. கொரோனா கட்டுக்குள் வர தொடங்கியிருந்தாலும் தினசரி தொற்று 50 ஆயிரத்திற்கும் குறையாமல் இருந்து வருகிறது. இந்நிலையில் கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டு 1 வருடம் நிறைவடைந்துள்ளதை ஒட்டி நாட்டு மக்களிடம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், கண்ணுக்கு தெரியாத கிருமி ஒரே ஆண்டில், பேரிழப்புகளை ஏற்படுத்தி இருப்பதாக குறிப்பிட்டார். 2019ம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படங்களை பார்க்கும் போது, நீண்ட காலத்திற்கு முன் எடுக்கப்பட்டது போன்ற ஒரு உணர்வை தருகிறது. பலருக்கு அதுதான் கடைசி விடுமுறை, பலருக்கு அதுதான் கடைசி பொது நிகழ்ச்சி. நாம் அனைவரும் பொதுவாக எதையாவது இழந்திருக்கின்றோம். கூட்டாக நாம் துன்பத்தை உணர்ந்திருக்கிறோம், கூட்டுத் தியாகத்தை கண்டிருக்கிறோம்.

இந்த ஒரே ஆண்டு நிறைய உயிரிழப்புகளை, வாழ்வாதார இழப்புகளை நமக்கு ஏற்படுத்தியுள்ளது என்று குறிப்பிட்டார். மே 1ம் தேதிக்குள் 18 வயதிற்கும் மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுவிடும் என்றும் பைடன் உறுதி அளித்துள்ளார். கொரோனா நாட்டை முடக்கி இருந்தாலும், அந்த கொல்லுயிரிக்கு எதிரான போரில் அமெரிக்க மக்களின் பங்களிப்பு மகத்தானது என்றும் பைடன் கூறினார். அமெரிக்க அதிபராக ஜோ பைடன் போறுப்பேற்றபோது அந்நாட்டின் 50 மாநிலங்களிலும் கொரோனா தொற்று காட்டுத்தீயாக பரவி இருந்தது.

தற்போது பைடன் நிர்வாகத்தின் அதிரடி நடவடிக்கையாக கொரோனாவின் தாக்கம் குறைய தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் மட்டும் இதுவரை 2 கோடியே 99 லட்சத்து 22 ஆயிரத்து 854 பேரை பாதித்துள்ள கொரோனா கிருமி, 5 லட்சத்து 43 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிர்களை பறித்து சென்றுள்ளது.

Related Stories:

>