ஏற்காடு தொகுதியில் 2வது முறையாக போட்டியிடும் அதிமுக எம்.எல்.ஏ சித்ராவை கட்சியினர், கிராம மக்கள் முற்றுகை

சேலம்: சேலம் மாவட்டம் ஏற்காடு தொகுதி எம்எல்ஏ சித்ரா, 2வது முறையாக அதிமுக சார்பில் போட்டியிட வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கு ஏற்காடு மலை கிராம மக்கள் மற்றும் அப்பகுதி அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வேட்பாளரை மாற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இந்நிலையில் நேற்று மதியம், சித்ரா எம்எல்ஏ ஒண்டிக்கடை பகுதிக்கு சென்றார். அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் அவரை அப்பகுதி மக்கள் வழிமறித்து, முற்றுகையிட்டனர். வெள்ளக்கடை பஞ்சாயத்திற்கு உட்பட்ட நல்லூர் மலை கிராமத்தில் கிணறு வெட்ட சமீபத்தில் சித்ரா எம்எல்ஏ பூமி பூஜை போட்டுள்ளார். ஆனால். அங்கு இன்னும் கிணறு அமைக்கப்படவில்லை. இதனால், தங்கள் பகுதிக்கு எப்போதுதான் கிணறு ஏற்படுத்திக் கொடுப்பீர்கள், பூமிபூஜை போட்டதெல்லாம் சும்மாவா எனக்கேட்டு முற்றுகையிட்டனர்.

அதற்கு எம்எல்ஏ, \”வெள்ளக்கடை பஞ்சாயத்தில் சாலைகள் அமைத்துக் கொடுத்துள்ளேன். கிணறு வெட்ட வேண்டியது, பஞ்சாயத்து வேலை. அந்த வேலையை பஞ்சாயத்து நிர்வாகத்திடம் எடுத்துரைத்து செய்கிறேன்,’’ எனக்கூறியுள்ளார். இருப்பினும் மக்கள், பூமிபூஜை போட்ட திட்டத்தை கூட உங்களால் நிறைவேற்ற முடியாதா? எனக் கேட்டுள்ளனர். தொடர்ந்து அங்கிருந்த அதிமுகவினர், ஏற்காடு பகுதி மக்களுக்கு எந்தவித அடிப்படை வசதிகளையும் நீங்கள் செய்து தரவில்லை. கடந்த தேர்தலின் போது கூறியபடி தனியாக அரசு கலைக்கல்லூரி தொடங்கவில்லை. தற்போதும் நீங்களே எம்எல்ஏவிற்கு நிற்கிறீர்கns எனக்கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த முற்றுகை போராட்டம் பற்றி அறிந்த ஏற்காடு போலீசார், சம்பவ இடம் வந்தனர். இதையடுத்து மக்களும், கட்சியினரும் அங்கிருந்து கலைந்தனர். எம்எல்ஏ சித்ராவும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories:

More