×

ஜெயங்கொண்டத்தில் சீட் கிடைக்காததால் அதிருப்தி வன்னியர் சங்க செயலாளர் விலகல் பாமக இரண்டாக உடைகிறது: மத்திய மண்டலத்தில் கூண்டோடு காலி செய்ய திட்டம்

திருச்சி: ஜெயங்கொண்டத்தில் சீட் கிடைக்காததால், வன்னியர் சங்க மாநில செயலாளர் பதவியில் இருந்து வைத்தி விலகி உள்ளார். மத்திய மண்டலத்தில் கட்சியை கூண்டோடு காலி செய்யவும் திட்டமிட்டுள்ளார். இதனால் பாமக இரண்டாக உடையும் நிலை ஏற்பட்டுள்ளது.பாமகவில் வன்னியர் சங்க மாநில செயலாளர் வைத்தி (எ) வைத்திலிங்கம். இவர், ஆண்டிமடம் அருகே பெரிய தத்தூர் கிராமத்தை சேர்ந்தவர். அதிமுக கூட்டணியில் ஜெயங்கொண்டம் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த தொகுதி தனக்கு கிடைக்கும் என வைத்தி எதிர்பார்த்திருந்தார். ஆனால் தலைமை கழக வழக்கறிஞர் பாலு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் வைத்தி கட்சி தலைமை மீது கடும் அதிருப்தி அடைந்தார்.

இதன் காரணமாக வன்னியர் சங்க செயலாளர் உள்பட பாமகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து வைத்தி விலகி உள்ளார். இதுபற்றி நேற்றுமுன்தினம் இரவு அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘‘பாமகவில் உழைப்புக்கு மரியாதை இல்லை. நடிப்புக்கு தான் மரியாதை உள்ளது’’ என்று தெரிவித்துள்ளார். பாமகவில் வன்னியர் சங்கத் தலைவராக இருந்த காடுவெட்டி குருவுக்கு வலதுகரமாக செயல்பட்டவர் வைத்தி. இவர் பாமகவின் மாநில துணை பொது செயலாளராகவும், வன்னியர் சங்க மாநில செயலாளராகவும் பதவி வகித்து வந்தார். குருவின் மறைவுக்கு பிறகு அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலுள்ள பாமகவினர் மத்தியில் அவரது செல்வாக்கும் உயர ஆரம்பித்தது. இதனால் 2020 ஜனவரியில் அவரது துணை பொதுச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. இப்போது வைத்திக்கு சீட் மறுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வைத்தி தரப்பினர் கூறுகையில்,  குரு மறைவுக்கு பிறகு கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தின் வளர்ச்சிக்காக வைத்தி அரும்பாடு பட்டார். இதற்காக தனது சொத்துக்களை கூட விற்றுள்ளார். அவருக்கு சீட் வழங்காதது, மாநிலம் முழுவதும் உள்ள வன்னியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. குருவின் மகன் கனலரசன் மஞ்சள் படை என்ற இயக்கத்தை துவக்கி நடத்தி வருகிறார். அந்த இயக்கத்தில் வைத்தி சேர வாய்ப்பு உண்டு. ஜெயங்கொண்டத்தில் சுயேச்சையாக கூட அவர் களமிறங்கலாம். அப்படி இறங்கினால், அந்த தொகுதியில் உள்ள வன்னியர்களின் ஒட்டு மொத்த ஆதரவும் இவருக்கு கிடைக்கும். மத்திய மண்டலத்தில் அரியலூர், ஜெயங்கொண்டம், குன்னம், தஞ்சை, கும்பகோணம், பாபநாசம், மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வன்னியர்களின் ஓட்டு வங்கி அதிகமாக உள்ளது. வைத்தி மீதுள்ள நம்பிக்கையால் மத்திய மண்டலத்தில் பாமக கூண்டோடு காலியாகி விடும் என்றனர்.

குருவின் மனைவியை வேட்பாளராக்கி இருக்கலாம்
வன்னியர் சங்க மாநில செயலாளர் பதவியிலிருந்து விலகிய வைத்தி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,  காடுவெட்டியாரின் பெயரைக் கூறி தொடர்ந்து பல அவமானங்களையும், இன்னல்களையும் டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணி கொடுத்து வந்தாலும் தொடர்ந்து கட்சிப்பணியாற்றி வருகிறோம். கட்சிக்காக தன்னையே அர்ப்பணித்த காடுவெட்டி குருவின் மனைவி சொர்ணாலதாவை வேட்பாளராக அறிவித்து இருக்கலாம். அல்லது எங்களை கூட அறிவித்திருக்கலாம். ஆனால், கட்சித் தொண்டர்களை பார்க்காத தொண்டர்களின் சுக துக்கங்களில் பங்கேற்காத ஒருவரை வேட்பாளராக அறிவித்தது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது என்றார்.

Tags : Jayangonda ,Vanniyar ,Sangam ,Central Zone , Dissatisfied with the unavailability of seats in Jayangonda Vanniyar Sangam Secretary resigns Bamaga breaks into two: the plan to evacuate the cage in the central zone
× RELATED அக்னி கலசத்தை மீண்டும் நிறுவிய...