×

தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் இன்று வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது: வேட்பாளருடன் 2 பேர் மட்டும் வர அனுமதி; சனி, ஞாயிறு விடுமுறை

சென்னை: தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறும் சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது. வேட்பாளருடன் 2 பேர் மட்டுமே வர வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சனி, ஞாயிறு வேட்புமனு தாக்கல் செய்ய முடியாது. தமிழகம், புதுச்சேரியில் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. சட்டமன்ற தேர்தலை சந்திக்க அனைத்துக் கட்சிகளும் தயாராகி வருகின்றன. திமுக மற்றும் அதிமுக சார்பில் தொகுதி பங்கீடு மற்றும் வேட்பாளர் பட்டியல் வெளியிடும் பணிகள் ஓரளவு முடிந்துள்ளது. அதிமுகவில் பாமக, பாஜ போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதேபோல் மக்கள் நீதி மய்யம், அமமுக சார்பிலும் முதல்கட்ட வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டடுள்ளனர். இதனால் தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. இந்நிலையில், சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (12ம்தேதி) தொடங்குகிறது.

இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியதாவது: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று காலை 11 மணி முதல் வேட்பு மனு தாக்கல் செய்யலாம். 19ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். சனி, ஞாயிறு வேட்பு மனு தாக்கல் செய்ய முடியாது. அப்படி பார்க்கும்போது, 6 நாட்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய முடியும். அலுவலக நாட்களில் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். வேட்புமனு தாக்கல் செய்ய வேட்பாளருடன் 2 பேர் மட்டுமே வர அனுமதிக்கப்படுவார்கள்.

234 தொகுதிகளில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலரிடம் (ஆர்ஓ) வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும். 20ம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படுகிறது. 22ம் தேதி வேட்புமனுக்கள் திரும்ப பெற கடைசி நாளாகும். அன்றே இறுதி வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்படுகிறது. ஏப்ரல் 4ம் தேதியுடன் பிரசாரம் ஓய்கிறது. ஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஆன்லைன் மூலமும் மனு தாக்கல் செய்யும்  வசதி உள்ளது. அதன்படி ஆன்லைனில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, அதை பிரிண்ட் எடுத்துக்கொண்டு வந்து தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வழங்க வேண்டும். தேர்தலில் முதல் முறையாக மனு தாக்கலுக்கான பணமும் ஆன்லைன் மூலமே செலுத்தலாம். நேரில் பணம் வழங்கலாம். பொது தொகுதிக்கு ரூ.10 ஆயிரமும், தனி தொகுதிக்கு ரூ.5 ஆயிரமும் பணம் செலுத்தி மனு தாக்கல் செய்ய வேண்டும்.

மனு தாக்கல் செய்யும் இடத்தில் இருந்து 100 மீட்டர்  வரை 2 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். ஊர்வலம் நடத்தும்போது சமூகஇடைவெளி கடைபிடிப்பது, மாஸ்க் அணிவது உள்ளிட்ட நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். பின்பற்றாதவர்கள் மீது தமிழக அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள். தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள். அதிகம் பேர் மனு தாக்கல் செய்ய வந்தால், அவர்களுக்கு குறிப்பிட்ட ஒரு நேரம் வழங்கி அந்த நேரத்தில் வர தேர்தல் நடத்தும் அதிகாரிகள் அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இன்று (வெள்ளி) வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. நாளை (சனி), நாளை மறுதினம் (ஞாயிறு) விடுமுறை. வேட்புமனு தாக்கல் கிடையாது. அடுத்து திங்கள் முதல் வெள்ளி வரை மனு தாக்கல் செய்யலாம். அதன்படி, 6 நாட்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய முடியும். 6 நாட்களும் ஒரு நாளைக்கு 4 மணி நேரம் என 24 மணி நேரம் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

* தேர்தல் அறிவிப்பு என்ன?
12ம் தேதி வேட்புமனு தாக்கல்
19ம் தேதி மனு தாக்கல் கடைசி நாள்
20ம் தேதி வேட்புமனு பரிசீலனை
22ம் தேதி வேட்புமனு திரும்ப பெறுதல்
22ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல்

* வேட்புமனு தாக்கல் செய்வது எப்படி?
திங்கள்-வெள்ளி வரை: வேட்புமனு தாக்கல் செய்யலாம்
நேரம்: காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை
சனி, ஞாயிறு விடுமுறை
பொதுத் தொகுதிக்கு ரூ.10,000
தனித் தொகுதிக்குரூ.5,000
வேட்பாளருடன் 2 பேர் மட்டுமே அனுமதி

Tags : Tamil Nadu ,Puthuvai , Assembly elections in Tamil Nadu and Puthuvai on April 6 begin today: Only 2 candidates are allowed to accompany the candidate; Saturday and Sunday are holidays
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...