நடைபாதை வசதி கோரி தாசில்தார் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை: தேர்தலைப் புறக்கணிக்க போவதாக முடிவு

பூந்தமல்லி: பூந்தமல்லியில் நடப்பதற்கு பாதை கேட்டு பொதுமக்கள் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.  மீட்டு தரவில்லை என்றால் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். பூந்தமல்லி நகராட்சிக்குட்பட்ட மேல்மாநகர் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்தப் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் அவசர தேவைக்கு பிரதான பகுதிக்கு  வந்து செல்ல  அப்பகுதியை ஒட்டியுள்ள கோயில்  வழியை நீண்ட காலமாக பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில்,  தற்போது அந்த வழியை சிலர் அடைத்து வைத்திருப்பதாகவும் இதனால் நீண்ட தூரம் சுற்றி நடந்து சென்று வரவேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே,  இந்த பாதையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பலமுறை வருவாய் துறையிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். ஆனால் இதுவரை எந்த ஒரு  நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட பெண்கள் பூந்தமல்லி தாசில்தார் அலுவலகத்தை நேற்று  முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், இந்த பாதையை பொதுமக்கள் செல்ல மீட்டு தரவில்லை என்றால் வருகின்ற சட்டமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு  வந்த பூந்தமல்லி இன்ஸ்பெக்டர் குமார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதையடுத்து  அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories:

More
>