×

சாத்தான்குளம் ஒன்றியத்தில் 4 கிராமங்களில் தேர்தல் புறக்கணிப்பு: அடிப்படை வசதி இல்லாததால் பொதுமக்கள் ஆவேசம்

சாத்தான்குளம்: சாத்தான்குளம் ஒன்றியத்தில் அடிப்படை வசதி முறையாகச் செய்து தரப்படாததால் ஆவேசமடைந்த 4 கிராம மக்கள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். சாத்தான்குளம்  ஒன்றியம் அமுதுண்ணாகுடி, நெடுங்குளம், செட்டிகுளம், கொம்பன்குளம் உள்ளிட்ட  ஊராட்சிகளில் கடந்த 10 ஆண்டுகளாக  பஸ், சாலை உள்ளிட்ட எந்தவொரு அடிப்படை வசதியும் முறையாக செயது தரப்படவில்லை. சாத்தான்குளம் நெடுஞ்சாலைதுறை உட்கோட்டம் அமுதுன்னாகுடியிலிருந்து  நெடுங்குளம் வரை உள்ள சாலை. மேட்டுகுடியிருப்பு விலக்கில் இருந்து  துவர்க்குளம் விலக்கு வரை உள்ள சாலை,  துவர்க்குளம் விலக்கில்  இருந்து கொம்பன்குளம், துவர்க்குளம் ஊருக்குள் செல்லும் சாலை ஆகியன முற்றிலும் சேதமடைந்துள்ளன.

அடிப்படை வசதிகள் செய்துதரப்படாததால் ஆவேசமடைந்த 4 கிராம மக்களும் சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். சாத்தான்குளம் ஒன்றிய கவுன்சிலர் ப்ரெனிலா கார்மல், அவரது  கணவரான நெடுஞ்சாலை பாதுகாப்பு நுகர்வோர் குழு உறுப்பினர் போனிபாஸ் தலைமையில் அமுதுண்ணாகுடி, நெடுங்குளம், செட்டிகுளம், கொம்பன்குளம்  ஊராட்சிகளில் பொதுமக்கள், இளைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள்  உள்ளிட்டோர் வரும் ஏப். 6ல் நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலை  புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அப்பகுதிகளில்  தேர்தல் புறக்கணிப்பு போர்டு வைத்ததோடு வீடுகளில்  கருப்பு கொடி ஏற்றியுள்ளனர். மாநில தலைமை தேர்தல்  ஆணையருக்கும் கடிதம் அனுப்பியுள்ளனர். இதுகுறித்து கலெக்டர் நேரடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ள மக்கள், சமாதானப் பேச்சுவார்த்தைக்கு தேடி வருமாறு அதிகாரிகள் மிரட்டுவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.


Tags : Sathankulam Union , Satankulam, 4 villages, election boycott
× RELATED சாத்தான்குளம் ஒன்றியத்தில் 35பேர் வேட்பு மனு தாக்கல்