×

பூந்தமல்லி தனித் தொகுதியை பாமக-விற்கு ஒதுக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக-வினர் திடீர் சாலைமறியல்..!!

சென்னை: சென்னை பூந்தமல்லி தனித்தொகுதியை பாமக-விற்கு ஒதுக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக-வினர் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சிக்கு பூந்தமல்லி தனி தொகுதியை அதிமுக ஒதுக்கியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நசரத்பேட்டை என்ற இடத்தில் அதிமுகவினர் திடீரென்று சாலைமறியலில் ஈடுபட்டனர். 2 மணி நேரத்திற்கும் மேலாக மறியல் போராட்டம் நீடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோன்று நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியை தங்களுக்கு ஒதுக்குமாறு பாரதிய ஜனதா கோரிக்கைவிடுத்தது. ஆனால் குமாரபாளையம் தொகுதியை பாஜக-விற்கு அதிமுக ஒதுக்கவில்லை. இத்தொகுதியில் அமைச்சர் தங்கமணி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதிய ஜனதாவினர் சுவரொட்டி ஒட்டியுள்ளனர். அதில் பாரதிய ஜனதா மாவட்ட செயலாளர் ஓம்.சரவணா, சுயேட்சையாக போட்டியிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

தொடர்ந்து, செங்கல்பட்டு தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கஜேந்திரனுக்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியினர் 300 பேர் மறியல் போராட்டம் செய்தனர். அமமுக-வில் இருந்து அண்மையில் அதிமுகவில் சேர்ந்த கஜேந்திரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது வேதனை அளிப்பதாக கட்சியினர் தெரிவித்துள்ளனர். இவரை மாற்றிவிட்டு கவுஸ் பாஷா அல்லது திருக்கழுக்குன்றம் ஆறுமுகத்திற்கு சீட் வழங்க வேண்டும் என்று அதிமுக-வினர் கோரிக்கைவிடுத்துள்ளனர்.


Tags : AIADMK ,Poonamallee ,Bamaka , Poonamallee Separation, Bamaka, AIADMK, Roadblock
× RELATED `பணத்தை நம்பல, ஜனத்தை நம்புறேன்’...