டெஸ்ட் பேட்டிங் தரவரிசை 7வது இடத்தில் ரோகித், ரிஷப்: அஷ்வின் முன்னேற்றம்

துபாய்: டெஸ்ட் போட்டிகளுக்கான ஐசிசி பேட்டிங் தரவரிசை பட்டியலில் இந்தியாவின் ரோகித் ஷர்மா, ரிஷப் பன்ட் இருவரும் நியூசிலாந்து வீரர் ஹென்றி நிகோல்சுடன் 7வது இடத்தை பகிர்ந்துகொண்டுள்ளனர். ஐசிசி நேற்று வெளியிட்ட தரவரிசைப் பட்டியலில் ரோகித் ஷர்மா ஒரு இடம் முன்னேறி 747 புள்ளிகளுடன் 7வது இடத்தை பிடித்துள்ளார். ரிஷப் பன்ட் (747 புள்ளி) 7 இடங்கள் முன்னேறி முதல் முறையாக டாப் 10ல் நுழைந்ததுடன் ரோகித் ஷர்மாவுடன் 7வது இடத்தை பகிர்ந்துகொண்டுள்ளார். நியூசிலாந்தின் ஹென்றி நிகோல்ஸ் (747 புள்ளி) தொடர்ந்து 7வது இடத்தில் நீடிக்கிறார்.

மூன்று வீரர்கள் 7வது இடத்தை பிடித்துள்ளதால், டாப் 10ல் 8வது மற்றும் 9வது ரேங்க் யாருக்கும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் சுழல் நட்சத்திரம் அஷ்வின் (850 புள்ளி) ஒரு இடம் முன்னேறி 2வது ரேங்க் பெற்றுள்ளார். ஆஸ்திரேலிய வேகம் பேட் கம்மின்ஸ் (908) தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். இந்திய வேகம் பும்ரா (739 புள்ளி) 10வது இடத்தில் உள்ளார். ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசையிலும் அஷ்வின் ஒரு இடம் முன்னேறி 4வது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ரவீந்திர ஜடேஜா 1 இடன் பின்தங்கி 3வது இடத்தில் உள்ளார்.

Related Stories: