லார்ட்ஸுக்கு பதிலாக சவுத்தாம்ப்டனில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல்: உறுதி செய்தது ஐசிசி

துபாய்: கொரோனா 2வது அலை காரணமாக லார்ட்ஸ் அரங்கில் ஜூன் மாதம்  நடைபெற இருந்த ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் சவுத்தாம்ப்டனுக்கு மாற்றப்படுவதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி)அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஐசிசி அறிமுகம் செய்துள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடுவதை நியூசிலாந்து அணி உறுதி செய்துவிட்ட நிலையில், அதனுடன் மோதப்போகும் 2வது அணி எது என்பதை இந்தியா - இங்கிலாந்து அணிகளிடையே நடந்த டெஸ்ட் தொடரின் முடிவு நிர்ணயித்தது. சென்னையில் நடந்த முதல் டெஸ்டில் மோசமாகத் தோற்றாலும், பின்னர் சுதாரித்துக் கொண்டு அபாரமாக விளையாடிய இந்தியா ஹாட்ரிக் வெற்றியுடன் 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியதுடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கும் முன்னேறியது.

டெஸ்ட் போட்டிகளில் உலக சாம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்காக இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் இந்த இறுதிப் போட்டி ஜூன் 18ம் தேதி லண்டன் லார்ட்ஸ் அரங்கில் தொடங்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இங்கிலாந்தில் தற்போது கொரோனா 2வது அலை தீவிரமாகி உள்ளது. இதைத் தொடர்ந்து, லார்ட்ஸ் அரங்கில் நடைபெற இருந்த இறுதிப்போட்டி சவுத்தாம்ப்டன் நகருக்கு மாற்றப்பட உள்ளதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் லண்டன் லார்ட்ஸ் மைதானத்துக்கு பதிலாக சவுத்தாம்ப்டன் நகரில் நடைபெறும் என ஐசிசி நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Related Stories:

>