×

எதிர்க்கட்சிகளின் கடும் அமளி காரணமாக மார்ச் 15ம் தேதி வரை நாடாளுமன்றம் ஒத்திவைப்பு: 3வது நாளாக இரு அவைகளும் முடங்கின

புதுடெல்லி: மத்திய வேளாண் சட்டங்கள் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால், 3வது நாளாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கின. இதையடுத்து, வரும் 15ம் தேதி வரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தின் 2ம் கட்ட தொடர் கடந்த திங்கட்கிழமை தொடங்கியது. முதல் 2 நாட்களும், பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வு விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இரு அவையிலும் கடும் அமளி செய்தன. இதனால், கடந்த 2 நாட்களும் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. 3ம் நாளான நேற்று மாநிலங்களவை தொடங்கியதும், எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே, திமுக எம்பி திருச்சி சிவா உள்ளிட்டோர் விதி 267ன் கீழ் அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்து விட்டு, மத்திய வேளாண் சட்டங்கள் குறித்து விவாதிக்க கோரி நோட்டீஸ் கொடுத்தனர்.

ஏற்கனவே பட்ஜெட் முதல் கட்ட தொடரில் வேளாண் சட்டங்கள் பற்றி விவாதிக்கப்பட்டு விட்டதாக அவைத்தலைவர் வெங்கையா நாயுடு கூறினார். ஆனால், மீண்டும் விவாதம் நடத்தாமல் அவையை நடத்த விடமாட்டோம் என மல்லிகார்ஜூனா கார்கே கூறினார். இதையடுத்து, காங்கிரஸ், திமுக எம்பி.க்கள் அவையின் மையப் பகுதியை முற்றுகையிட்டு, வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி கோஷமிட்டனர். இதனால், அவை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

அதன் பிறகும் அமளி தொடர்ந்ததால் பிற்பகல் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அமளி காரணமாக அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இதே போல், மக்களவையிலும் மத்திய வேளாண் சட்டங்கள் குறித்து விவாதிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் அமளி செய்தன. பிற்பகல் 2.30 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், பின்னர் நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது. இன்று மகாசிவராத்திரி என்பதால் விடுமுறை தினமாகும். நாடாளுமன்ற விதிமுறைப்படி, வியாழக்கிழமை விடுமுறை தினமாக வரும் பட்சத்தில், வார இறுதியை கருத்தில் கொண்டு வெள்ளிக்கிழமையும் விடுமுறை நாளாக கணக்கில் கொள்ளப்படும். எனவே, இரு அவைகளும் வரும் 15ம் தேதி திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

* அமளிக்கு இடையே நிறைவேறிய மசோதா
மாநிலங்களவையில் பிற்பகல் 2 மணிக்கு பிறகு அவை கூடியதும் அமளிக்கு இடையே, மத்தியஸ்தம் மற்றும் சமரச சட்ட திருத்த மசோதா மீதான குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா ஏற்கனவே கடந்த பிப்ரவரி 4ம் தேதி மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. எனவே, ஜனாதிபதி ஒப்புதலைத் தொடர்ந்து சட்டதிருத்தம் அமலுக்கு கொண்டு வரப்படும். இதே போல், மக்களவையில் அமளிக்கு இடையே டெல்லி காலனிகளை முறைப்படுத்தும் 2வது சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா ஏற்கனவே கடந்த மாதம் 9ம் தேதி மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.

* மோடியை பேச விடாத காங்கிரஸ்
நாட்டின் 75வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, மகாத்மா காந்தியின் உப்பு சத்தியாகிரகமான தண்டி யாத்திரையை நினைவுகூரும் விதமாக, நாளை குஜராத்தில் சுதந்திர அமிர்தத்தின் கொண்டாட்டம் என்ற பெயரில் சபர்மதி ஆசிரமத்தில் இருந்து அகமதாபாத் வரை பேரணி நடக்க உள்ளது. 21 நாள் நடக்கும் இப்பேரணியை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார். இதுதொடர்பாக மக்களவையில் நேற்று அவர் பேச விரும்பினார். இதற்கு சபாநாயகர் அனுமதி அளித்தார். மற்ற கட்சிகள் அனைத்தும் ஏற்றுக் கொண்ட போதிலும் காங்கிரஸ் மட்டும் தொடர் அமளியில் ஈடுபட்டது. இதனால், பிரதமர் மோடியால் பேச முடியவில்லை.

Tags : Parliament , Parliament adjourned until March 15 due to opposition protests: both adjourned for 3 days
× RELATED இந்தியா அமல்படுத்தியுள்ள...