×

நாலா பக்கம்: புதுவை - கேரளா - மேற்கு வங்கம் - அசாம்

அட! சொல்றத செய்றாங்களே…
கேரளாவில் காங்கிரசை போல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் பெண்கள், புதுமுக வேட்பாளர்களை களமிறக்குவதாகவும் அமைச்சர்கள், எம்எல்ஏ.க்களுக்கு கல்தா கொடுக்க இருப்பதாகவும் செய்தி வெளியானது. கடந்த முறை 92 இடங்களில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்த தேர்தலில் சுயேச்சைகளுக்கு அளிக்கும் ஆதரவுடன் சேர்த்து 85 இடங்களில் மட்டுமே போட்டியிடுகிறது.  நேற்று வெளியான வேட்பாளர் பட்டியலில், 5 அமைச்சர்கள், 33 எம்எல்ஏ.க்களின் பெயர் இடம் பெறவில்லை. அதே நேரம், 22 வழக்கறிஞர்கள், 30 வயதுக்குட்பட்ட 4 இளைஞர்கள், 2 டாக்டர்கள், 2 முனைவர் பட்டம் பெற்றவர்கள், 1 கட்டிடக்கலை பொறியாளர், 12 பெண் வேட்பாளர்களில் 8 புதுமுகங்கள் உள்பட 42 புதுமுகங்களுக்கு வாய்ப்பளித்து அதகளம் செய்துள்ளது. இந்த வேட்பாளர் பட்டியலை பார்த்த மக்கள் அட! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  சொல்றத தான் செய்றாங்க... என்று பேசி கொள்கிறார்கள்.

சிறையில் இருந்தபடியே அசத்தும் அகில் கோகாய்
அசாம் அரசியல் களத்தில் நன்கு அறியப்பட்டவர் அகில் கோகாய். பல்வேறு பிரச்னைகளுக்கு எதிராகப் போராட்டங்கள் நடத்தியதன் மூலம் தேசிய அளவிலும் கவனம் ஈர்த்தவர். குடியுரிமை போராட்டத்தால் உபா சட்டத்தின் கீழ் கைதாகி தற்போது சிறையில் உள்ளார். கடந்த ஆண்டின் இறுதியில், ‘ரஜோர் தால்’ என்ற கட்சியை சிறையில் இருந்தவாறே தொடங்கினார். இந்த தேர்தலில் பங்கேற்போம் என்றும் ஏற்கனவே அறிவித்திருந்தார். இதனால், காங்கிரஸ் மெகா கூட்டணியில் அவரது கட்சியை இணைக்க பெரும் முயற்சிகள் நடந்தன. ஆனால், எல்லா அழைப்புகளையும் புறக்கணித்து விட்டார். செல்வாக்கு மிகுந்த 28 தொகுதிகளைத் தேர்ந்தெடுத்து தனித்து போட்டியிடுவதாகவும் அகி்ல் சமீபத்தில் அறிவித்தார். அந்த பரபரப்பு முடிவதற்குள் தற்போது சிறையில் இருந்தவாறே 2 தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனுவும் தாக்கல் செய்துள்ளார். இதனால், அசாம் அரசியலில் மூன்றாவது புதிய அணி உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக புதிய பரபரப்பு எழுந்துள்ளது. அகில் கோகாயின் முயற்சிகள் கைகொடுத்து அவர் கிங் மேக்கராக உருவாவாரா அல்லது வாக்குகளை மட்டுமே பிரிப்பாரா என்ற எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது.

ஆதரவு கேட்டவரை வெளுத்த இல்லத்தரசி
இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற துடிக்கும்  பாஜ, புதுச்சேரி அமைச்சரவையில் பங்கேற்க ஆர்வமாக உள்ளது. இதற்காக  வாக்காளர்களை கவர புதிய யுக்தியை கையாள்கிறது. செல்போன் நம்பர் மூலம்  மக்களை தொடர்பு கொண்டு, வரும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் பாஜ.வை  ஆதரிக்க வேண்டுமென கேட்டனர். இதற்கு பதிலடி கொடுத்த குடும்ப இல்லத்தரசி  ஒருவர், ‘பாஜ என்னம்மா செஞ்சுது, முதல்ல எம்எல்ஏ.க்களை விலை கொடுத்து  வாங்காதீங்க... சுயமா ஜெயிச்சு வாங்க... கட்சியை வளர்த்து மேலே வரச்  சொல்லுங்க... அதை விட்டுட்டு பாஜ.வுக்காக நீங்க பேசுறீங்களே... உங்களுக்கு  வெட்கமா இல்லையா... ஒரு எம்எல்ஏ கூட இல்லாத கட்சிக்கு சப்போர்ட் பண்ணனுமா?’  என விளாசினார். இதை சற்றும் எதிர்பாராமல் ஆடிப்போன பாஜ தரப்பு அப்படியே  சைலன்ட் ஆகி இணைப்பை துண்டித்ததுதான் தற்போது வலைதளத்தில் டிரண்டிங் ஆகி  வருகிறது.

துரோகம் செய்த சுவேந்துவை பழிவாங்க துடிக்கும் மம்தா
மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரசில் வளர்ந்து, பெரிய தலைவராக உருவான சுவேந்து அதிகாரி, இப்போது பாஜ சேர்ந்து நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுகிறார். இவரை தோற்கடித்து தனது கோபத்தை தீர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே, இத்தொகுதியில் போட்டியிடுகிறார் மம்தா. நேற்று அத்தொகுதியில் வேட்பு மனுவும் தாக்கல் செய்தார். அப்போது அவர் அளித்த பேட்டியில், ‘இத்தொகுதியில் இப்போது எம்எல்ஏ. யாரும் இல்லை. இப்பகுதி மக்கள் என்னை ஏக்கத்துடன் பார்த்ததை பார்த்தே, நானே இத்தொகுதியில் போட்டியிட முடிவு செய்தேன்,’ என்று கூறியுள்ளார். அதே நேரம், இத்தொகுதியில் சுவேந்துக்கும், மம்தாவுக்கும் இடையே மண்ணின் மைந்தன், மண்ணின் மகள் யார் என்ற போட்டியும் உருவாகி இருக்கிறது. மம்தா நேற்று இங்கு மனுதாக்கல் செய்தபோது, அந்நியர் என்ற முத்திரை குத்தி ஊரெல்லாம் போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டு இருந்தது. எல்லாம், சுவேந்துவின் கைங்கர்யம்தான்.

Tags : Nala ,New Delhi ,Kerala ,West Bengal ,Assam , Like the Congress in Kerala, the Marxist Communist Party is women
× RELATED வாணியம்பாடி அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் புகை: பயணிகள் அதிர்ச்சி