×

திமுக கூட்டணியில் பார்வர்டு பிளாக் கட்சிக்கு ஒரு தொகுதி: ஒப்பந்தம் கையெழுத்தானது

சென்னை: திமுக கூட்டணியில் பார்வர்டு பிளாக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது. இதற்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. திமுக கூட்டணியில் முக்கிய கட்சிகள் இடம்பிடித்துள்ளதால், வலுவான கூட்டணியாக சட்டமன்ற தேர்தலை சந்திக்கிறது. இந்நிலையில், திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி நேற்று அண்ணா அறிவாலயம் வந்தனர். அவர்களுக்கு திமுக ஒரு தொகுதியை ஒதுக்கியுள்ளது. இதையடுத்து, தொகுதி பங்கீடு உடன்பாடு ஒப்பந்தத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பார்வர்டு பிளாக் கட்சி மாநில செயலாளர் கதிரவன் ஆகியோர் கையெழுத்திட்டனர். இதை தொடர்ந்து, திமுக கூட்டணி சார்பில் பார்வர்டு பிளாக் கட்சி உதயசூரியன் சின்னத்தில் உசிலம்பட்டி தொகுதியில் போட்டியிடுகிறது. திமுக சார்பில் இதுவரை கூட்டணி கட்சிகளுக்கு 61 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 வெளியில் வந்த அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி மாநில செயலாளர் கதிரவன் நிருபர்களிடம் கூறியதாவது:மிகவும் பிற்படுத்தப்பட்டோர் தமிழகத்தில் 45 சதவீதம் வாழ்கின்றனர். ஆனால் 20 சதவீத இடஒதுக்கீடு தான் இருந்தது. இதற்காக பலமுறை போராடியிருக்கிறோம். இந்த சூழ்நிலையில், மக்கள் ெதாகை கணக்கெடுப்பை முடித்துவிட்டு, எவ்வளவு வருகிறதோ அதன் அடிப்படையில் ஒதுக்கீட்டை எங்களுக்கு கொடுங்கள் என்று தான் கேட்டனர். ஆனால் அவசர அவசரமாக பாமக கூட்டணி வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக  10.5 சதவீத உள் ஒதுக்கீட்டை அவர்களுக்கு கொடுத்திருக்கிறார்கள். இது சமூக அநீதி. அதை சரி செய்வதற்கு திமுக வெற்றி பெற்றே தீர வேண்டும். தமிழகத்தில் வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் முதல்வராக வேண்டும். எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் என்ன திட்டத்தை எல்லாம் அறிவிக்கிறாரோ, அதை அதிமுக பின்பற்றுகிறது. கலைஞரும், ஜெயலலிதாவும் இருந்த போது, தமிழ்நாட்டுக்கு இருந்த மதிப்பை முதல்வர் பழனிசாமி முற்றிலும் குலைத்துவிட்டார். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Forward Bloc party ,DMK , A block for the Forward Bloc party in the DMK alliance: the agreement was signed
× RELATED கமுதியில் திமுக அலுவலகம் திறப்பு