குருவை மிஞ்சிய சிஷ்யை மதுராந்தகம் தொகுதியை பிடித்த முன்னாள் எம்பி

திருப்போரூர்: மதுராந்தகம் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மரகதம் குமரவேல், குருவை மிஞ்சி சிஷ்யை என பெயரெடுத்து விட்டார். மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக, திருப்போரூர் ஒன்றியம், தையூர் ஊராட்சியை சேர்ந்த மரகதம் குமரவேல் அறிவிக்கப்பட்டுள்ளார். கடந்த 2014 முதல் 2019 வரை காஞ்சிபுரம் எம்பியாக இருந்தார். இவரது கணவர் குமரவேல் திருப்போரூர் ஒன்றிய செயலாளராக உள்ளார். திருப்போரூர் தொகுதியைச் சேர்ந்தவருக்கு மதுராந்தகம் தொகுதி வழங்கப்பட்டதால், அதிமுகவினருக்கு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

திருப்போரூர் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ தண்டரை மனோகரன், குமரவேலையும், அவரது மனைவி மரகதத்தையும் அதிமுகவுக்கு அழைத்து வந்தார். பின்னர் ஒன்றிய கவுன்சிலர் பதவி, ஒன்றியக்குழு தலைவர் ஆகிய பதவிகள் மரகதம் குமரவேலுக்கு கிடைத்தது. இதைதொடர்ந்து, மரகதம் குமரவேல் காஞ்சிபுரம் எம்பி ஆனார். சில மாதங்களில் தண்டரை மனோகரனுக்கு மாவட்ட செயலாளர் பதவி கிடைத்தது. அப்போது, இருவரில் யார் பெரியவர் என்ற மோதல் ஏற்பட்டு, இரு அணியாக பிரிந்தனர். தண்டரை மனோகரனிடம் இருந்த மாவட்ட செயலாளர் பதவி, திருக்கழுக்குன்றம் ஆறுமுகத்திடம் போனது. இதையடுத்து மரகதம் குமரவேலு, அவரது கணவர் குமரவேலு, ஆறுமுகத்தின் ஆதரவாளர்களாக மாறினர். இந்தமுறை தண்டரை மனோகரனுக்கு திருப்போரூர் தொகுதியை வழங்கக்கூடாது என 3 பேரும், அதிமுக தலைமையிடம் அழுத்தம் கொடுத்தனர்.

ஆனால், அதே நேரத்தில் தனக்கோ அல்லது தனது மனைவிக்கோ மதுராந்தகம் தொகுதியை கொடுக்க வேண்டும் என குமரவேல் சீட் கேட்டு தனது மனைவிக்கு தொகுதியையும் பெற்றும் விட்டார்.ஆனால், இவர்களை அரசியலுக்கு அழைத்து வந்த தண்டரை மனோகரன், இவர்களுக்கு பரிந்துரை செய்த தற்போதைய மாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம் ஆறுமுகம் ஆகியோருக்கு எம்எல்ஏ சீட் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எது எப்படியோ தண்டரை மனோகரன் மூலம் அரசியலுக்கு வந்த குமரவேல் மற்றும் மரகதம் குமரவேல் ஆகியோர் குருவை மிஞ்சிய சிஷ்யர்களாக அவரையும், தற்போதைய மாவட்ட செயலாளரையும் வீழ்த்தி சீட் பெற்றுள்ளது அதிமுகவின் சீனியர் அரசியல்வாதிகள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: