×

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் போக்குவரத்து கழக ஊழியர்கள் மீது எஸ்மா பாயும்: மாநில அரசு எச்சரிக்கை

பெங்களூரு: கர்நாடக மாநில அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் எஸ்மா உள்பட பல சட்டங்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது. கர்நாடக மாநில அரசு போக்குவரத்து கழகம், வடகிழக்கு அரசு போக்குவரத்து கழகம், வடமேற்கு அரசு போக்குவரத்து கழகம் மற்றும் பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகம் ஆகிய நான்கு கழகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களை அரசு ஊழியர்களாக நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதே கோரிக்கையை வலியுறுத்தி கடந்தாண்டு டிசம்பர் மாதம் 5 நாட்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர். அப்போது அரசு ஊழியர்களாக மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை தவிர மற்ற அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றுவதாக துணைமுதல்வரும் போக்குவரத்து அமைச்சருமான லட்சுமண்சவதி கொடுத்த வாக்குறுதி ஏற்று போராட்டம் வாபஸ் பெற்று பணிக்கு திரும்பினர்.

இருப்பினும் அரசு கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றாமல் விட்டதால், கடந்த ஜனவரி மாதம் பெங்களூருவில் போராட்டம் நடத்திய போக்குவரத்து ஊழியர் சங்கத்தினர். மாநில அரசின் சார்பில் தாக்கல் செய்யப்படும் 2021-22ம் நிதியாண்டு பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பு வெளியிட வேண்டும். இல்லையெனில் மீண்டும் போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர். கடந்த 8ம் தேதி முதல்வர் எடியூரப்பா தாக்கல் செய்த பட்ஜெட்டில் போக்குவரத்து கழக ஊழியர் சங்கத்தின் கோரிக்கை மீது எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இது போக்குவரத்து கழக ஊழியர் சங்கத்திற்கு கடும் அதிருப்தி ஏற்படுத்தியது. இது குறித்து இரண்டு நாட்களுக்கு முன் போக்குவரத்து கழக ஊழியர் சங்க செயல்தலைவர் கோடிஹள்ளி சந்திரசேகர் தலைமையில் நிர்வாகிகள் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் தங்கள் கோரிக்கைகள் மீது மாநில அரசின் சார்பில் மார்ச் 15ம் தேதிக்குள் எந்த உறுதியும் கொடுக்கவில்லை எனில் 16ம் தேதி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் எந்த காரணம் கொண்டும் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடக்கூடாது. பொதுமக்களுக்கு தொல்லை ஏற்படுத்தும் வகையில் போராட்டம் நடத்தினால் அத்தியாவசிய சேவை நிர்வாக சட்டம் (எஸ்மா) மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில அரசு எச்சரித்துள்ளது. இதனிடையில் எஸ்மா சட்ட மிரட்டலை எதிர்த்து நீதிமன்றம் செல்ல ஊழியர் சங்கங்கள் முடிவு செய்துள்ளதாக தெரியவருகிறது.

Tags : ESMA ,Transport Corporation ,State Government , If involved in a strike Transport Corporation ESMA flows on employees: State government warning
× RELATED சித்திரா பௌர்ணமியை முன்னிட்டு...