×

பலிஜா வகுப்பினருக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்: முதல்வரிடம் பிசி மோகன் மனு

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் வாழும் பலிஜா வகுப்பினருக்கு சிறப்பு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளனர். மாநில முதல்வராக எடியூரப்பா பதவியேற்ற நாள் முதல் ஒவ்வொரு வகுப்பினரும் தங்கள் வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.
தற்போது மேல்வர்க்க பட்டியலில் உள்ள வீரசைவ-லிங்காயத்து வகுப்பினரை சிறுபான்மை வகுப்பினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
லிங்காயத்து பஞ்சமசாலி வகுப்பினரை பிற்படுத்தப்பட்டோர் 2ஏ பிரிவில் சேர்க்க வலியுறுத்தி கூடலசங்கமாவில் இருந்து பெங்களூரு வரை 37 நாட்கள் பாதயாத்திரை நடத்தியதுடன் கடந்த 20 நாட்களாக சுதந்திர பூங்காவில் மடாதிபதி பசவ மிருத்தஞ்ஜெயசுவாமி தலைமையில் தர்ணா போராட்டம் நடந்து வருகிறது.

தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை 15ல் இருந்து 20 சதவீதமாகவும் பழங்குடியின வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை 3 சதவீத்தில் இருந்து 7.5 சதவீதம் உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இதனிடையில் வால்மீகி வகுப்பினரும் தனியாக இடஒதுக்கீடு வழங்ககோரி நெருக்கடி கொடுத்து வருகிறார்கள். இந்நிலையில் அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா தலைமையில் குருப வகுப்பினரை பழங்குடியின (எஸ்டி) பிரிவில் சேர்க்ககோரி பாதயாத்திரை, மாநாடு நடத்தப்பட்டு முதல்வரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.இந்த பிரச்னைகளுக்கு எப்படி தீர்வு காண்பது என்று புரியாமல் தவிர்த்து வரும் முதல்வருக்கு தற்ேபாது பலிஜா வகுப்பினருக்கும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை சொந்த கட்சியை சேர்ந்த மக்களவை உறுப்பினர் பி.சி.மோகன் மூலம் வந்துள்ளது.

இது தொடர்பாக முதல்வரிடம் பிசி மோகன் கொடுத்துள்ள மனுவில், ``கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக போதிய இட ஒதுக்கீடு கிடைக்காமல் பலிஜா வகுப்பினர் வஞ்சிக்கப்பட்டு வருகிறோம். ஒவ்வொரு ஆட்சி காலத்திலும் எடுக்கும் விபரீதமான முடிவுகள் பலிஜா வகுப்பினரின் நலன் பறிபோகும் நிலையில் உள்ளது. இதனால் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட துறையில் முக்கியத்துவம் பறிபோய் வருகிறது.கடந்த 1984 முதல் 1994 வரை பிற்படுத்தப்பட்டோர் 2(ஏ) பிரிவில் சேர்க்கப்பட்டு கல்வி, வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது. கடந்த 1994ல் அப்ேபாது இருந்த ஜனதாதளம் அரசு அமைத்த இட ஒதுக்கீடு மாற்றம் செய்ய துணை குழு அமைக்கப்பட்டது. அக்குழு  பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்த 103 சாதிகளில் பலிஜா வகுப்பை மட்டும் 2(ஏ) பிரிவில் இருந்து நீக்கி 3(ஏ) பட்டியலில் சேர்த்துவிட்டது. மீண்டும் 2011ல் தங்கள் (எடியூரப்பா) தலைமையில் ஆட்சி அமைந்தபோது கல்வி சலுகை பெற மட்டும் 2(ஏ) பட்டியலில் சேர்க்கப்பட்டது. இதை தற்போது அனைத்து துறையிலும் சலுகை பெறும் வகையில் மாற்றியமைக்க வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.



Tags : Balija ,PC ,Mohan ,Chief Minister , For the Balija class Reservation to be provided: PC Mohan petition to the Chief Minister
× RELATED சம்மரை சமாளிப்போம்…