×

171 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு 3 அமைச்சர்கள் 48 எம்எல்ஏக்கு சீட் இல்லை: பழைய ஆட்களுக்கே மீண்டும் இடம் கொடுத்ததால் தொண்டர்கள் கடும் அதிருப்தி: பாஜ, பாமக போட்டியிடும் தொகுதிகளும் அறிவிப்பு

சென்னை: அதிமுகவில் 2வது முறையாக 171 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதில் 3 அமைச்சர்கள், 48 எம்எல்ஏக்களுக்கு மீண்டும் சீட் வழங்கப்படவில்லை. மூத்த தலைவர்களை திருப்திப்படுத்த அவர்களுக்கும், அவர்களுடைய ஆட்களுக்கும் சீட் வழங்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனால், தமிழகத்தில் பல இடங்களில் வேட்பாளர் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் போராட்டம் நடத்தினர்.  அதிமுக கூட்டணியில் ஆரம்பத்தில் இருந்தே கட்சிக்குள்ளும் கூட்டணி கட்சிகளுடனும் முட்டல், மோதல்கள் ஏற்பட்டபடி இருந்தது. ஜெயலலிதா இல்லாத அதிமுக என்பதால், பாஜ தலைவர்கள் தங்கள் இஷ்டத்துக்கு அதிமுக தலைவர்களை வளைக்க ஆரம்பித்தனர். அதற்கு ஏற்றார்போல பாஜ தலைவர்களும் நடந்து கொண்டனர். ஆரம்பத்தில் அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்ட முதல்வர் வேட்பாளரையே அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. பின்னர் பல நாட்களுக்குப் பிறகுதான் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக அறிவித்தனர். பின்னர் சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜவுக்கு 60 தொகுதிகள் வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை விடுத்தார்.

பின்னர் இது தொடர்பாக அதிமுக குழுவுடன் பாஜ குழு பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது திடீரென்று டிடிவி தினகரனின் அமமுக கட்சி கடந்த மக்களவை தேர்தலில் 52 தொகுதிகளில் கணிசமான ஓட்டுக்களை வாங்கியுள்ளனர். அவர்களை கூட்டணியில் சேர்க்க வேண்டும். அதனால் தங்களுக்கு 40 தொகுதிகள் வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன. இந்த கோரிக்கையை பாஜ மத்திய அமைச்சர்களும், மாநில தலைவர்களும் வலியுறுத்தினர். கடைசியாக அமித்ஷாவும் வலியுறுத்தினார். ஆனால் எடப்பாடி பழனிசாமியோ, விடாப்பிடியாக தினகரனையோ, சசிகலாவையோ கட்சியில் சேர்க்கவே முடியாது என்று கூறிவிட்டார். இதனால் தங்களுக்கு 26 தொகுதிகள் வேண்டும். அதற்கு கீழ் குறைக்க முடியாது என்று கூறிவிட்டனர். இதனால் கடைசியாக பேசி அவர்களுக்கு 20 தொகுதிகளை ஒதுக்கினர். முன்னதாக பாமகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி 23 தொகுதிகளை வழங்கினர்.

பின்னர், தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் 20 தொகுதிகள், ஒரு எம்பி சீட் மற்றும் தேர்தல் செலவுக்கு பணம் கேட்டனர். ஆனால் அதிமுகவோ 12 தொகுதி, ஒரு எம்பி சீட் தருவதாக கூறினர். ஆனால் தேர்தல் செலவுக்கு பணம் ெகாடுக்க மறுத்து விட்டனர். இதனால் அவர்கள் 234 தொகுதியிலும் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவிக்க உள்ளனர். அதன்பின்னர் தமாகா மற்றும் சிறிய, சிறிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தமாகா 12 தொகுதிகளை கேட்டது. அதிமுகவோ 3 தொகுதிகளை மட்டுமே தருவதாக கூறியது. இதனால் வாசன் கடும் அதிருப்தி அடைந்துள்ளார். இதற்கிடையில் கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனை நேற்று முன்தினம் இரவு 9 மணி முதல் நேற்று அதிகாலை 4 மணி வரை நடந்தது. அதன்பின்னர் பாமக, பாஜ ஆகிய கட்சிகளுக்கு நேற்று மாலையில் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து, 171 பேர் கொண்ட அதிமுக வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டது. ஏற்கனவே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி(எடப்பாடி), துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்(போடி நாயக்கனூர்), அமைச்சர்கள் ஜெயக்குமார்(ராயபுரம்), சி.வி.சண்முகம்(விழுப்புரம்), சண்முகநாதன்(வைகுண்டம்), தேன்மொழி(நிலக்கோட்டை) ஆகிய 6 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் கடந்த 5ம் தேதி அறிவிக்கப்பட்டன.

இதனால் மொத்தம் 177 பேர் கொண்ட பட்டியலை அதிமுக தலைமை வெளியிட்டுள்ளது. அதிமுக வெளியிட்டுள்ள பட்டியல் கடும் குழப்பத்தையும், மோதலையும் ஏற்படுத்தியுள்ளதாக அதிமுக தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். கடந்த முறை அதிமுகவுக்கு 125 எம்எல்ஏக்கள் இருந்தனர். அதில் தற்போது வரை 177 பேர் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் மட்டும் அமைச்சர்கள் நிலோபர் கபில், பாஸ்கரன், வளர்மதி ஆகியோர் உள்பட 48 எம்எல்ஏக்களுக்கு சீட் மறுக்கப்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளராக இருந்து பின்னர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளராக மாறிய செம்மலை மேட்டூர் எம்எல்ஏவாக இருந்தார். அவரது தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்ட விட்டது. இதனால் அவருக்கு வேறு தொகுதி ஒதுக்கப்படவில்லை. சீட்டும் வழங்கவில்லை.டிடிவி தினகரனுக்கு ஆதரவு தெரிவித்த எம்எல்ஏக்கள் கள்ளக்குறிச்சி பிரபு, அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாச்சலம்  கலைச்செல்வனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதேபோல, கம்பம் தொகுதி எம்எல்ஏவாக இருந்த ஜக்கையன், டிடிவி அணியில் இருந்தார். ரயிலில் சென்னை வந்தவரை வழியிலேயே ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் பேசி தங்களது ஆதரவாளர்களாக மாற்றிக் கொண்டனர். அவருக்கும் தற்போது சீட் வழங்கப்படவில்லை. முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலத்துக்கு சீட் வழங்கப்படவில்லை.

அவருக்கும் அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பண்ணன் ஆகியோருக்கும் இடையே மோதல் இருந்து வந்தது. இதனால் அவருக்கு சீட் வழங்கவில்லை.அதேநேரத்தில், ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு கட்சியிலிருந்து ஒதுங்கி இருந்தவர், வேட்பு மனு தாக்கல் செய்யாதவர், நேர்காணலில் இடம்பெறாதவர் என்று கூறப்பட்ட சென்னை முன்னாள் மாநகராட்சி மேயர் சைதை துரைசாமிக்கு சைதாப்பேட்டை வேட்பாளராக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் தற்போதைய அமைச்சர்கள் மற்றும் செல்வாக்காக உள்ள மாவட்டச் செயலாளர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களுக்கு இந்த முறை சீட் வழங்கப்பட்டுள்ளது. இதனால் சீட் கிடைக்காத அதிருப்தி எம்எல்ஏக்கள் பலர் ஒன்று கூடி ஆலோசனை நடத்தி வருகின்றனர். விரைவில் அவர்கள் அதிரடி முடிவை அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர், பல்லடம், கும்மிடிபூண்டி, கோவை ஆகிய இடங்களில் வேட்பாளர் அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்து அதிமுக தொண்டர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதற்கிடையில் சீட் கிடைக்காத சில தலைவர்கள் முதல்வர் எடப்பாடியை சந்தித்து நேரில் முறையிட்டதாகவும், சீட் கொடுக்கவில்லை என்றால், சுயேட்சையாக போட்டியிடப் போவதாகவும் நேரில் கூறிச் சென்றதாக கூறப்படுகிறது.

3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை
அதிமுகவில் 2 பெண்கள் உள்பட 3 பேருக்கு சீட் வழங்கப்படவில்லை. தமிழக கதர் வாரிய துறை அமைச்சர் பாஸ்கரனுக்கு (சிவகங்கை) சீட் வழங்கப்படவில்லை. அங்கு முன்னான் எம்பி பி.ஆர்.செந்தில்நாதன் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கும் சீட் வழங்கப்படவில்லை. அவர் ஏற்கனவே வெற்றிபெற்ற ராமநாதபுரம் தொகுதி பாஜவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபிலுக்கு சீட் வழங்கப்படவில்லை. அவர் போட்டியிட்டு வெற்றிபெற்ற வாணியம்பாடி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக உள்ள வளர்மதிக்கும் சீட் மறுக்கப்பட்டுள்ளது. அவர் வென்ற ஸ்ரீரங்கம் முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி தற்போதுள்ள 30 அமைச்சர்களில் 3 பேருக்கு சீட் வழங்கப்படவில்லை.

ஜெயலலிதா நீக்கிய மாஜிக்களுக்கு மீண்டும் சீட்
அதிமுக பட்டியலில் இடம் பெற்றவர்களில் பலரும் முன்னாள் அமைச்சர்கள் ஆவார்கள். அதன்படி பி.வி.ரமணா (திருவள்ளூர்), மாதவரம் மூர்த்தி (மாதவரம்), எஸ்.கோகுலஇந்திரா (அண்ணாநகர்), வளர்மதி (ஆலந்தூர்), டி.கே.எம்.சின்னையா (தாம்பரம்), வி.சோமசுந்தரம் (உத்திரமேரூர்), கே.பி.முனுசாமி (வேப்பனஹள்ளி), அக்ரி கிருஷ்ணமூர்த்தி (போளூர்), கே.வி.ராமலிங்கம் (ஈரோடு மேற்கு), எம்.எஸ்.எம்.ஆனந்தன் (பல்லடம்), தாமோதரன் (கிணத்துக்கடவு), ஏ.கே.செல்வராஜ் (மேட்டுப்பாளையம்), நத்தம் விசுவநாதன் (நத்தம்), கு.ப.கிருஷ்ணன் (ஸ்ரீரங்கம்), பரஞ்சோதி (மணச்சநல்லூர்), ஆர்.வைத்திலிங்கம் (ஒரத்தநாடு), வைகைச்செல்வன் (அருப்புக்கோட்டை), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்) ஆகியோருக்கு மீண்டும் சீட் வழங்கப்பட்டுள்ளது. இதில் பல அமைச்சர்கள் ஜெயலலிதாவால் அமைச்சர் பதவிகளை இழந்தவர்கள். தற்போது, எடப்பாடி, ஓ.பன்னீர்செல்வம் தயவால் மீண்டும் சீட் வாங்கியுள்ளனர்

ெஜயலலிதா உத்தரவை மாற்றிய எடப்பாடி
முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், தொடர்ந்து நத்தம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று வந்தார். கடந்த முறை அவரை ஆத்தூர் தொகுதியில் முன்னாள் திமுக அமைச்சர் ஐ.பெரியசாமியை எதிர்த்து வெற்றி பெற்றால் மட்டுமே அமைச்சரவையில் இடம் வழங்கப்படும் என்று கூறி ஆத்தூர் தொகுதியில் நிற்க வைத்தார். அந்த தேர்தலில் எதிர்பார்த்தது போலவே பெரியசாமியிடம் தோல்வியை தழுவினார். இந்த முறை அதே தொகுதியில் போட்டியிட்டால் வெற்றி பெற முடியாது என்பதால் எடப்பாடியைப் பிடித்து மீண்டும் நத்தம் வேண்டும் என்று கேட்டு வாங்கிச் சென்றுள்ளார்.

பெண்களுக்கு 14 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கீடு
அதிமுக சார்பில் இதுவரை 177 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக தலைமை வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 14 பெண்களுக்கு மட்டுமே சீட் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, கோகுலஇந்திரா (அண்ணாநகர்), வளர்மதி (ஆலந்தூர்), மரகதம் (மதுராந்தக்), கணிதாசம்பத் (செய்யூர்), பரிதா (குடியாத்தம்), சித்ரா (ஏற்காடு), சரோஜா (ராசிபுரம், பொன்.சரஸ்வதி (திருச்செங்கோடு), இந்திராகாந்தி (துறையூர்), பாரதி (சீர்காழி), ஜெயபாரதி (கந்தர்வகோட்டை), கீர்த்திகா (முதுகுளத்தூர்), ராஜலட்சுமி (சங்கரன்கோவில்), தேன்மொழி (நிலக்கோட்டை) ஆகியவை ஆகும். பெண்களுக்கு அதிமுகவில் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று ஒவ்வொரு முறை கூறி வரும் ஆட்சியாளர்கள் 10 சதவீதம் கூட இடஒதுக்கீடு வழங்கவில்லை. ஜெயலலிதா உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கப்படும் என்று கூறினார். அந்த அறிவிப்பு உள்ளிட்ட எதுவும் தற்போதைய தலைமை கண்டுகொள்ளவில்லை என்று அதிமுகவில் உள்ள பெண்கள் ஆதங்கப்பட்டுக் கொண்டனர்.

கடந்த 4ம் தேதி தினகரனில் 5 அமைச்சர்கள், 40 எம்எல்ஏக்களுக்கு சீட் இல்லை என்று செய்தி வெளியிடப்பட்டது. அதேபோல, நேற்று அதிமுக வெளியிட்டுள்ள பட்டியலில் 48 எம்எல்ஏக்களுக்கு சீட் இல்லை என்று அறிவித்துள்ளனர். அதில் 6 எம்எல்ஏக்களுக்கான தொகுதி பாமகவுக்கும், 2 தொகுதி பாஜகவுக்கும் ஒதுக்கப்பட்டது. இதனால் அவர்களுக்கு சீட் இல்லை. ஆனால் நேரடியாக 40 எம்எல்ஏக்களுக்கு சீட் வழங்காமல் வேறு அதிமுகவினருக்கு வழங்கப்பட்டுள்ளது. இது கட்சிக்குள் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் 40 எம்எல்ஏக்களுக்கு சீட் இல்லை என்று 5 நாட்களுக்கு முன்னரே தினகரன் நாளிதழ் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : AIADMK , AIADMK releases list of candidates for 171 constituencies 3 ministers do not have seats for 48 MLAs
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...