×

தஞ்சை அருகே ராஜராஜன் கால நிலக்கொடை கல்வெட்டு கண்டுபிடிப்பு

தஞ்சை: தஞ்சாவூர் அருகே ராஜராஜன் கால நிலக்கொடை கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. தஞ்சாவூர் அருகே அருண்மொழிதேவன்பேட்டை கிராமத்தில் மோகன் என்பவர் வீட்டின் கொல்லைபுரத்தில், ராஜராஜசோழன் காலத்து ஒரு துண்டுக் கல்வெட்டு கிடப்பதாக, தஞ்சாவூர் சரசுவதி மகால் நுாலகத் தமிழ்ப் பண்டிதரும், வரலாற்று ஆய்வாளருமான மணி.மாறனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மணி.மாறன், பொந்தியாகுளம் தொடக்க பள்ளி தலைமையாசிரியர் கோவிந்தராஜன், ஆசிரியர் ஜெயலெட்சுமி ஆகியோர் அங்கு சென்று ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து மணி.மாறன் கூறியதாவது: சோழர் காலத்தில் தஞ்சாவூர் கூற்றத்தின் புறம்படியாகத் திகழ்ந்த அருண்மொழிதேவன்பேட்டை, மாமன்னன் ராஜராஜனின் பெயரால் அமைந்த ஊர். இப்பகுதியில் உள்ள சமுத்திரம் ஏரியிலிருந்து பாசனத்திற்காக வெட்டப்பட்ட லோகமாதேவி மற்றும் அருண்மொழிதேவன் என்று இரண்டு வாய்க்கால்கள் உள்ளன. இதில் அருண்மொழிதேவன் வாய்க்கால் மதகு சீர்செய்யப்பட்டபோது அங்கிருந்து இக்கல்வெட்டு எடுக்கப்பெற்றது. இக்கல்வெட்டு ராஜராஜசோழனின் நிலக்கொடை பற்றிக் குறிப்பிட்டுள்ளது. மேலும், வானவன் மூவேந்த வேளாண் என்ற அதிகாரியின் பெயர் காணப்படுகிறது. இவர் ராஜராஜ சோழன் காலத்தில் உயர் பொறுப்பில் இருந்த அதிகாரியாவார்.

ராஜராஜனின் இரண்டாவது ஆட்சியாண்டு தொடங்கி ஒன்பதாவது ஆட்சியாண்டு வரையில் உள்ள திருப்புறம்பியம் கல்வெட்டிலும், பதினேழாவது ஆட்சியாண்டு கரந்தை கல்வெட்டிலும் மூவேந்த வேளாண் பெயர் குறிப்பிடப்பெற்றுள்ளது. அருண்மொழிதேவன் பேட்டையில் கண்டெடுக்கப்பெற்ற கல்வெட்டு வாசகம் கரந்தை கல்வெட்டில் காணப்படும் வாசகங்களுடன் ஒத்துத்துள்ளது. அத்துடன், அப்பகுதியில் சிவன்கோவில் ஒன்று இடிந்த நிலையில், பல சிற்பங்கள் சிதைந்துபோய் உள்ளது. அப்படியாக சிதைந்த சிற்பம் ஒன்றில், ஆலிங்கன சந்திரசேகர் மகர தோரணத்தில் அமைந்து அழகுடன் காட்சி தருகின்றார். ஒரு கையளவே உள்ள இச்சிற்பம் சோழர் காலத்தைச் சேர்ந்ததாகும். அன்றைய அருண்மொழி தேவன் பேட்டையில் நெய்க்கார குடும்பங்கள், அளவுக்கார குடும்பங்கள், சிப்பாய் குடும்பங்கள் போன்றவை இருந்ததாக அறிய முடிகிறது என்றார்.

Tags : Thanjai , Discovery of Rajaraja period land grant inscription near Tanjore
× RELATED புகழ்பெற்ற தஞ்சை பெரியகோயில்...