எடப்பாடி பழனிசாமிக்கு ஏன் இந்த ஆணவம்?.. எடப்பாடி எம்.ஜி.ஆரா? ஜெயலலிதாவா?.. விஜய பிரபாகரன் ஆவேசம்

கடலூர்: 10 ஆண்டுகள் அதிமுகவை வாழ வைத்தோம் இனி நாங்கள் நன்றாக வாழ்வோம் என விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார். கூட்டணியில் தொடர்ந்து தொகுதிகளின் எண்ணிக்கையை குறைத்து வந்ததோடு, பேச்சுவார்த்தையின்போது அவமானப்படுத்தியதால் கடும் அதிர்ச்சியடைந்த தேமுதிக, மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துக்குப் பின்னர், அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக நேற்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்து தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். இதனால் தனித்துப் போட்டியிடுவதாகவும், அதிமுகவுக்கு உரிய பாடம் புகட்டப்படும் என்று தேமுதிக அறிவித்துள்ளது.

கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியுள்ளது அதிமுகவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்நிலையில் சிதம்பரத்தில் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்; எடப்பாடி பழனிசாமிக்கு ஏன் இந்த ஆணவம்?.. எடப்பாடி எம்.ஜி.ஆரா? ஜெயலலிதாவா? எனது திறமையை நிரூபிக்க கொஞ்சம் டைம் வேண்டும். தந்தை விஜயகாந்த் சிம்மாசனத்தில் அமர வைப்பேன். 40 வருடங்களாக மக்களுக்காக உதவி செய்து வருபவர் கேப்டன். என் அப்பாவை போலவே நானும் மக்களுக்காக உழைப்பேன். மக்களுக்காக உழைக்கும் என் அப்பாவின் சாயல் எனக்கு உண்டு. என்னை பார்ப்பவர்கள் எல்லோரும் என்னை என் அப்பா போல் இருப்பதாக கூறுகிறார்கள்.

தனித்து நின்ற போது மக்கள் அங்கீகரிக்கப்படவில்லை என்பதால் கூட்டணி அமைத்தோம். பாஜக, பாமகவை நாங்கள் குறைத்தும் மதிப்பிடவில்லை, கூட்டியும் மதிப்பிடவில்லை. பாஜக, பாமகவிற்கு கொடுக்கும் மதிப்பை எங்களுக்கு ஏன் கொடுக்கவில்லை?. அதிமுகவுடன் மீண்டும் தேமுதிக இணைய வாய்ப்பில்லை. அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி அமையாது. 10 ஆண்டுகள் அதிமுகவை வாழ வைத்தோம் இனி நாங்கள் நன்றாக வாழ்வோம் எனவும் கூறினார்.

Related Stories: