×

முத்துப்பேட்டை அருகே சாலை வளைவில் உடைந்துபோன வடிகால் வாய்க்கால் தடுப்புச்சுவர்: தொடரும் விபத்துகளால் வாகனஓட்டிகள் அச்சம்

முத்துப்பேட்டை: முத்துப்பேட்டை அருகே சாலையோரம் உடைந்துபோன வடிகால் வாய்க்கால் தடுப்புச்சுவரால் வாகன விபத்துக்கள் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகனஓட்டிகள் அச்சத்துடன் சாலையை கடக்கின்றனர். முத்துப்பேட்டை அடுத்த சங்கேந்தி கடைத்தெரு கிழக்கு கடற்கரை சாலை வளைவில் இருந்த வடிகால் வாய்க்கால் தடுப்புச்சுவர் சில ஆண்டுக்கு முன் நடந்த விபத்தின்போது வாகனம் மோதி உடைந்து விழுந்துவிட்டது. பின்னர் அதில் நெடுஞ்சாலைத் துறையினர் பெயரளவில் ஒரு சுவரை கட்டி சென்றனர். அதுவும் அடுத்த மாதத்தில் உடைந்து காணாமல் போனது. பின்னர் மீண்டும் கட்டுவதும் காணாமல் போவதும் இங்கு வாடிக்கையாக உள்ளது.

ஆனால், நெடுஞ்சாலைதுறை நிரந்தரமாக இந்த தடுப்பு சுவர் கட்ட முயற்சி மேற்கொள்ளவில்லை. இதனால் எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட ஒதுங்கும் வாகனங்கள் தடுப்புசுவர் இல்லாததால் நிலை தடுமாறி அருகேயுள்ள வாய்க்காலில் விழுந்து விபத்துக்குள்ளாகிறது. அதேபோல் நடந்து செல்லும் பொதுமக்களும், வாகனங்கள் வரும்போது நிலை தடுமாறி வாய்க்காலுக்குள் விழுந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். அடிக்கடி குடிமகன்கள் இந்த வாய்களில் தடுமாறி விழுந்துவிடுவதும நடந்துள்ளது. இது போன்ற விபத்துகள் தொடர் கதையான நிலையிலும் கூட நெடுஞ்சாலையினர் கவலைப்படுவதும் இல்லை. கண்டுகொள்ளவும் இல்லை.

தற்போது வரை இப்பகுதியில் சிறு சிறு விபத்துக்கள் மட்டுமே நடந்து வருகிறது. இனி பெயரளவில் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் இந்த நிலையை உணர்ந்து நெடுஞ்சாலைத்துறை மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். இது குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகையில், இந்த கிழக்கு கடற்கரையில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான கனரக வாகனங்கள் சென்று வருகிறது. அதேபோல் முக்கிய பகுதிகளுக்கு செல்லும் சாலையாக இந்த கிழக்கு கடற்கரை சாலை உள்ளதால் அதிகளவில் வாகனங்கள் சென்று வருகின்றனர். அதேபோல் சுற்றுலா செல்லும் பயணிகள் இந்த சாலைவழியாகதான் சென்று வருகின்றனர்.

இந்தநிலையில் நீண்ட காலமாக இந்த வளைவில் உள்ள தடுப்பு சுவருக்கு ஒரு விமோசனம் இல்லாமல் உள்ளது. இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. ஒவ்வொரு முறையும் விபத்தின்போது தற்காலிகமாக நெடுஞ்சாலை துறையினர் தடுப்பு சுவர்கட்டுவார்கள் போதிய தரம் இல்லாததால் அடுத்த நாட்களில் அது விழுந்துவிடும். இப்படித்தான் ஆண்டுக்கணக்கில் இந்த இந்த அவலம் தொடர்கிறது. தற்போது வாகன போக்குவரத்து அதிகளவில் உள்ளதால் பெரிய விபத்துக்கள் நடக்க வாய்ப்புகள் உள்ளது. ஆகவே உடனடியாக நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரிகள் வந்து ஆய்வு செய்து நிரந்தரமாக தரமான தடுப்பு சுவரை கட்டி இப்பகுதியில் தொடர்ந்து நடந்து வரும் விபத்துக்களை தவிர்க்க வேண்டும் என்றனர்.

Tags : Muthupet , Drainage barrier breaks at road bend near Muthupet: Motorists fear continuing accidents
× RELATED குளத்தையே காணோம்! முத்துப்பேட்டை...