×

கல்லட்டி மலைப்பாதையில் கார் தீப்பிடித்து எரிந்தது: சுற்றுலா பயணிகள் தப்பினர்

ஊட்டி: ஊட்டி அருகே கல்லட்டி மலைப்பாதையில் கர்நாடக மாநில சுற்றுலா பயணிகளின் கார் தீயில் எரிந்து நாசமானது. காரில் பயணித்த 7 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள சாலைகளிலேயே கல்லட்டி மலைப்பாதை மிகவும் செங்குத்தாகவும், அதிக வளைவுகளை கொண்டதாகவும் உள்ளது. இச்சாலையில் 12 கி.மீ. தூரம் வரை அபாயகரமான மற்றும் மிகவும் குறுகிய 36 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இந்த சாலையில் விதிமுறைகளை பொருட்படுத்தாமல் செல்வதால் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுகிறது. கடந்த 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்த நிலையில் வெளியூர் மற்றும் வெளி மாநில வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது‌.

உள்ளூர் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டது. இதனால், கடந்த இரு ஆண்டுகளில் விபத்துகள் முற்றிலும் குறைந்து உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. இந்நிலையில் இரு ஆண்டுகளுக்கு பிறகு கடந்த மாதம் 8ம் தேதி கல்லட்டி மலைப்பாதையில் வெளியூர், வெளி மாநில வாகனங்கள் சென்று வர அனுமதிக்கப்பட்டது. அனுமதிக்கப்பட்ட ஒரு மாதத்தில் 7க்கும் மேற்பட்ட விபத்துகள் ஏற்பட்டன. இதில், ஒருவர் உயிரிழந்தார். இந்நிலையில், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் 7 பேர் ஒரு காரில் ஊட்டிக்கு வந்தனர். காரை சலீம் என்பவர் ஓட்டி உள்ளார். நேற்று மாலை 5 மணியளவில் கல்லட்டி மலைப்பாதை வழியாக ஊட்டி நோக்கி 19வது வளைவு அருகே வந்தபோது காரின் முன் பகுதியில் இருந்து புகை வந்ததை பார்த்து சலீம் காரை நிறுத்தி இறங்கி சென்று பார்த்தார்.

அப்போது திடீரென காரில் தீ பற்றி மளமளவென பரவியது .உடனடியாக காரில் இருந்து அனைவரும் கீழே இறங்கினர். இதனால், வேறு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. காரில் தீ பற்றிய நிலையில் அவ்வழியாக சென்ற பொதுமக்கள் உடனடியாக ஊட்டி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். மாவட்ட தீயணைப்பு அலுவலர் சந்திரகுமார், தீயணைப்பு நிலைய அலுவலர் ரவிக்குமார் ஆகியோர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும், கார் முற்றிலும் எரிந்து எலும்பு கூடானது. இவ்விபத்து குறித்து ஊட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : Kallatti hill road , The car caught fire on the Kallatti hill road: Tourists escaped
× RELATED ஊட்டி –கல்லட்டி மலைப்பாதையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு