கோவை தெற்கு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்கினால் கூண்டோடு ராஜினாமா செய்வோம் : அதிமுக நிர்வாகிகள் தரையில் உருண்டு போராட்டம்!!

கோவை : கோவை தெற்கு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்க எதிர்ப்பு தெரிவித்து கட்சி அலுவலகத்தை அதிமுக தொண்டர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு நிலவியது. தற்போது கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக அதிமுகவைச் சேர்ந்த அம்மன் அர்ஜுன் உள்ளார். ஆனால் இந்த தொகுதியில் பாஜக சார்பில் வானதி சீனிவாசன் போட்டியிடுவார் என்று செய்திகள் வெளியானது. இதனால் அதிர்ச்சி அடைந்த அம்மன் அர்ஜுனின் ஆதரவாளர்கள் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கோவையில் உள்ள அதிமுக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அலுவலகத்தில் முன்பு போராட்டம் அமர்ந்து நடத்திய அவர்கள், தெற்கு தொகுதியை மீண்டும் அதிமுகவுக்கே ஒதுக்க வேண்டும் என்று ஆவேச குரல் எழுப்பினர்.அம்மன் அர்ஜுனனுக்கு மீண்டும் தொகுதியே ஒதுக்காமல் பாஜகவுக்கு தந்தால் தேர்தல் பணி செய்ய மாட்டோம் என்று அவர்கள் கூறினர். கையில் ராஜினாமா கடிதத்துடன் வந்திருந்த அதிமுக நிர்வாகிகள் கூண்டோடு விலகுவோம் என்று எச்சரிக்கை விடுத்தனர்.போராட்டத்தில் சிலர் சட்டைகளை கழற்றிவிட்டு தரையில் படுத்த படி முழக்கங்களை எழுப்பியதோடு, பாஜகவுக்கு அந்த தொகுதியை வழங்கக் கூடாது என சாபமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.

Related Stories: