×

மணமேல்குடி பகுதியில் உரிமமின்றி குடிநீர் வாகனம் ஓட்டுவதால் விபத்து அபாயம்: நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பு

அறந்தாங்கி: மணமேல்குடி பகுதியில் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் தண்ணீர் வண்டியை ஓட்டுவதால் விபத்துகள் நேரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அறந்தாங்கி, ஆவுடையார்கோவில் மற்றும் மணமேல்குடி பகுதிகளில் கடந்த திமுக ஆட்சியின்போது கொண்டு வரப்பட்ட காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் கடந்த சில ஆண்டுகளாக முறையாக பராமரிக்கப்படவில்லை. இதனால் பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்காமல் சிரமப்பட்டு வரும் பொதுமக்களின் நிலையை தெரிந்து கொண்ட தனியார், ஆழ்துளை கிணறு அமைத்து வாட்டர் டேங்குகள் மூலம் அறந்தாங்கி, ஆவுடையார்கோவில் மற்றும் மணமேல்குடி பகுதிகளில் ஊர் ஊராக சென்று குடிநீர் விற்பனை செய்து வருகின்றனர்.

சரக்கு ஆட்டோவில் வாட்டர் டேங்குகளில் தண்ணீரை நிரப்பிக் கொண்டு கிராமங்கள் தோறும் சென்று ஒரு குடம் ரூ.10க்கும் விற்பனை செய்து வருகின்றனர். மணமேல்குடி பகுதியில் மட்டும் குறைந்தது 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் மூலம் குடிநீர் விற்பனை செய்து வருகின்றனர். இவ்வாறு குடிநீர் விற்பனை செய்யும் நிறுவனங்களை பல வாகனங்களை ஓட்டும் டிரைவர்கள் முறையாக ஓட்டுனர் உரிமம் பெற்றவர்கள் ஓட்டுவதில்லை. ஒரு லோடு தண்ணீரை விற்பனை செய்து வந்தால், இவ்வளவு கமிஷன் என்ற அடிப்படையில் அவர்கள் குடிநீர் விற்பனை செய்யும் வாகனங்களை இயக்கி வருகின்றனர்.

இவ்வாறு தண்ணீர் விற்பனை செய்யும் வாகனங்களை சிறுவர்கள் இயக்கி வரும் நிலையில், அந்த வாகனங்களை காவல்துறையினரும், மோட்டார் வாகன ஆய்வாளரும் ஆய்வு செய்து, தண்ணீர் விற்பனை செய்யும் நிறுவனங்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை. முறையான உரிமம் பெறாத ஓட்டுனர் ஓட்டிய தண்ணீர் விற்பனை செய்யும் வாகனத்தை ஓட்டிச் சென்று தஞ்சாவூர் மாவட்டத்தில் சாலையில் சென்றவர் மீது விபத்தை ஏற்படுத்தி ஒரு உயிரிழப்பை ஏற்படுத்தி உள்ளார். இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறியது: அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி பகுதியில் தண்ணீர் விற்பனை செய்யும் தொழில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இப்பகுதியில் மட்டும் தினசரி சுமார் 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் மூலம் பல லட்சக்கணக்கான ரூபாய்க்கு தண்ணீர் விற்பனை நடைபெற்று வருகிறது. வாகனங்களில் குடிநீர் டேங்குகளை ஏற்றிக் கொண்டு கிராமங்கள் தோறும் கொண்டு போய் தண்ணீரை விற்பனை செய்கின்றனர். ஓட்டுனர் உரிமம் பெற்றவரைக் கொண்டு வாகனங்களை இயக்கினால், அதிகம் சம்பளம் வழங்க வேண்டும் என்பதால் குடிநீர் விற்பனை செய்யும் நிறுவனங்கள் முறையாக உரிமம் பெறாத, அரைகுறையாக வாகனங்களை ஓட்டக்கூடிய ஏன் சிறுவர்களை கொண்டும், குடிநீர் விற்பனை செய்யும் வாகனங்களை இயக்கி வருகின்றனர். இந்த வாகனங்களை சிறுவர்கள் இயக்குவதால், விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.

இந்த வாகனங்கள் தினமும் போலீஸ் சோதனைச் சாவடியை கடந்து சென்றாலும், போலீசார் இந்த வாகனங்களை ஓட்டும் சிறுவர்கள்மீதும், அந்த வாகனம் மற்றும் குடிநீர் விற்பனை செய்யும் நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுப்பதில்லை.
இருசக்கர வாகனங்களில் செல்பவர்களிடம் ஓட்டுனர் உரிமம் கேட்டு, இல்லாதவர்களிடம் அபராதம் விதிக்கும் காவல்துறையினரும், குடிநீர் விற்பனை செய்யும் வாகனங்களை நிறுத்தி சோதனையிடுவதில்லை. இதனால் பல வாகனங்களை சிறுவர்கள் பயமின்றி இயக்கி வருகின்றனர். இதுபோன்று குடிநீர் வாகனங்களை உரிமம் இன்றி இயக்குபவர்களால் பெரிய அளவில் விபத்து நேரும் அபாயம் உள்ளது.

இதுகுறித்து அக்கறை எடுத்து வட்டார போக்குவரத்து அலுவலகமும், காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுத்து உரிமம் பெறாமல் வாகனங்களை இயக்குபவர்கள்மீதும், அந்த வாகனத்தின் உரிமையாளர்மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, அறந்தாங்கி மோட்டார் வாகன ஆய்வாளரும், காவல்துறையினரும் குடிநீர் விற்பனை செய்யும் வாகனங்களை ஆய்வு செய்து, முறையாக உரிமம் பெறாமல் வாகனங்களை இயக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.

Tags : Manamelkudi , Accident risk due to unlicensed drinking water vehicle in Manamelkudi area: Expectation to take action
× RELATED புதுக்கோட்டையில் சாலையில் தாறுமாறாக ஓடிய டிப்பர் லாரி