ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் 4ம் நாள் பிரமோற்சவம்; மயில் வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த ஞானபிரசுனாம்பிகை தாயார்: இன்று சேஷ வாகனaம்

ஸ்ரீகாளஹஸ்தி: ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் பிரமோற்சவத்தின் 4ம் நாளான நேற்றிரவு மயில் வாகனத்தில் ஞானபிரசுனாம்பிகை தாயார் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று சேஷ வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரமோற்சவம் கடந்த 6ம் முதல் நடைபெற்று வருகிறது. 3ம் நாளான நேற்று முன்தினம் சூரியபிரபை வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், சப்பரத்தில் ஞானபிரசுனாம்பிகை தாயார் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். 4ம் நாளான நேற்று காலை அன்ன வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், யாளி வாகனத்தில் ஞானபிரசுனாம்பிகை தாயார் 4 மாட வீதிகளில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

இரவு ராவண வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், மயில் வாகனத்தில் ஞானபிரசுனாம்பிகை தாயார் அருள்பாலித்தனர். முன்னதாக, கோயில் அலங்கார மண்டபத்தில் சிறப்பு அலங்காரம் செய்து, தேவாங்குல மண்டபம் வரை பஞ்சமூர்த்திகளுடன் வீதியுலா நடைபெற்றது. வீதியுலாவில் மேளதாளங்கள் மங்கல வாத்தியங்கள் முழங்க கொண்டு வரப்பட்டது. மேலும், கோலாட்டம், மயிலாட்டம் உட்பட நடன நிகழ்ச்சிகள் நடந்தது. பிரமோற்சத்தின் 5ம் நாளான இன்று காலை அன்ன வாகனததில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், கிளி வாகனத்தில் ஞானபிரசுனாம்பிகை தாயார் அருள்பாலிக்க உள்ளனர். மேலும், அன்று இரவு சேஷ வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், யாளி ஞானபிரசுனாம்பிகை தாயார் பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர்

வங்கி லாக்கரிலிருந்து கொண்டுவந்த ஆபரணங்கள்: ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் நடக்கும் மகா சிவராத்திரி பிரமோற்சவத்தில் சுவாமிக்கு அலங்காரம் செய்யப்படும் தங்க நகைகளை வங்கி லாக்கரிலிருந்து கோயில் அதிகாரிகள் நேற்று முன்தினம் கோயிலுக்கு கொண்டு வந்தனர். மீண்டும் பிரமோற்சவம் நிறைவடைந்த பிறகு வங்கியில் பாதுகாப்பாக வைக்கப்படும். இந்த நகைகளில் வில்வ தளங்கள், யக்னோப வீதம், சாமந்தி பூக்கள், கர்ண பத்ரங்கள், நவரத்னங்கள் பொருந்திய பலவிதமான நகைகள் உள்ளன. ஒரு ஹாரத்தில் நந்தி வாகனம் மீது வீற்றிருக்கும் ஆதி தம்பதிகள், அவர்களோடு மற்றொன்றில் சிவனின் மகன்களான சுப்பிரமணிய சுவாமி விநாயகருக்கு பூஜித்து இருப்பது போல் காணப்படுகிறது.

மற்றொரு ஹாரத்தில் பார்வதி பரமேஸ்வரர் வீற்றிருப்பது போலும், கைலாச கிரியை கொண்டு செல்லும் ராவணன் போல் உள்ளது. மேலும், தங்கத்தினால் ஆன ருத்ராட்ச மாலைகள் சுவாமிக்கு அலங்காரம் செய்ய உள்ளனர். இந்த நகைகள் திருக்கல்யாண உற்சவம், நந்தி சேவை நாட்களில் உற்சவ மூர்த்திகளுக்கு அலங்காரம் செய்யப்படும் என்று கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories:

>