×

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சப்த முனிவர்கள் நிறுவி வழிபட்டது; கைலாய யாத்திரை பலன் கிடைக்கும் ஷடாரண்ய திருத்தலங்கள்: நாளை மஹா சிவராத்திரி விழா ஏற்பாடுகள் தீவிரம்

வாலாஜா: அகத்தியர் உட்பட சப்த முனிவர்கள் நிறுவி வழிபட்ட பாலாற்றங்கரையில் அமைந்த ஷடாரண்ய திருத்தலங்களில் நாளை மகா சிவராத்திரி விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் சிவாலயங்களில் நாளை (வியாழக்கிழமை) மஹா சிவராத்திரி விழா கோலாகலமாக நடக்கிறது. இதையொட்டி சிவாலயங்களில் ஆறு கால அபிஷேகமும் பூஜைகளும் நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் தொண்டை மண்டலத்துக்கு உட்பட்ட ராணிப்பேட்டை மாவட்டம் ஆன்மீகத்தில் ஆலய வழிபாட்டில் பிரதானமாக விளங்குகிறது. பைந்தமிழும் பாலாறும் பாய்ந்தோடும் புண்ணிய பூமியாக விளங்குகிறது.

வாலாஜாபேட்டை, ராணிப்பேட்டை, ஆற்காடு உள்ளிட்ட  பாலாற்றங்கரையில் அமைந்துள்ள சிவாலயங்களுக்கு க்ஷடாரண்ய தலங்கள் என்று பெயர். அதன்படி வன்னிவேடு அகத்தீஸ்வரர், குடிமல்லூர் திருவந்தீஸ்வரர் மற்றும் பூமீஸ்வரர்,
புதுப்பாடி பரத்வாஜேஸ்வரர், வேப்பூர் வஸிஷ்டேஸ்வரர், மேல்விஷாரம் வால்மீகிஸ்வரர், காரை கவுதமேஸ்வரர், நவ்லாக் காஷ்யபேஸ்வரர் உள்ளிட்ட சிவாலயங்களில் காலை 6 மணி முதல் இரவு 12 மணி வரை சொற்பொழிவு, அகண்ட சிவநாம பாராயணம் மற்றும் பஜனை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. புண்ணியமிகு பாரத மண்ணில் நகரேஷூ காஞ்சி என்று வேதங்களில் சிறப்பித்து கூறப்படும் காஞ்சியில் கைலாயநாதன், பராசக்தியான காமாட்சி அன்னை திருமணத்தை காண்பதற்காக தேவர்கள், ரிஷிகள், முனிவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இவர்களில் சப்தரிஷிகள் என போற்றப்படும் அகத்தியர், அத்திரி, பரத்வாஜர், வசிஸ்டர், வால்மீகி, கவுதமர், காஷ்யபர் ஆகியோர் பரபரப்பு மிகுந்த காஞ்சியை விட்டு விலகி அமைதியான பாலாற்றின் இருகரையை ஒட்டியுள்ள அடர்ந்த வனப்பகுதிகளில் ஆங்காங்கே சிவலிங்கங்களை ஸ்தாபித்து தங்கள் நித்திய கடமைகளை ஆற்றினர். அவர்கள் ஸ்தாபித்த லிங்கங்களை கொண்ட தலங்களே ஷடாரண்ய திருத்தலங்கள் என அழைக்கப்படுகிறது. இந்த ஷடாரண்ய தலங்களை ஒரு சேர  தரிசித்தால் திருக்கைலாயம் சென்று வந்த பலன் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். இதற்கான சிறப்பு ஏற்பாடுகளை அந்தந்த கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

அத்தகைய சிறப்புமிக்க க்ஷடாரண்ய தலங்களை பற்றி அறிவோம்.

1.வன்னிவேடு: வாலாஜாவிலிருந்து 2 கி.மீ தொலைவில் அரசு மருத்துவமனை அருகே ெசல்லும் சாலை வழியாக பாலாற்றங்கரையில் ஸ்ரீபுவனேஸ்வரி அம்மன் சமேத ஸ்ரீஅகதீஸ்வர் கோயில் உள்ளது. இங்கு தல விருட்சம் வன்னி மரம், 1500 ஆண்டுகால பழமையான கோயில். அகத்தியர் தவமிருந்த ஊர். ஈஸ்வரர் சுயம்பாக தோன்றி மணல் லிங்கமாக காட்சியளிப்பது தனி சிறப்பாகும். நவ கோள்களின் அற்புத படைப்பும் அம்பாள் ஆவுடையார்மேல் நின்ற கோலத்தில் காட்சியளிப்பதும் விசேஷமாகும். வன்னி மரத்தின் கீழ் விநாயகர் வீற்றிருக்கிறார். பிரதோஷம், சங்கடஹர சதுர்த்தி, நவராத்திரி மற்றும் மஹாசிவராத்திரி போன்றவை வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மேலும் ஞாயிற்றுக்கிழமை சரபேஸ்வரருக்கு ராகு காலத்தில் பூஜைகள் செய்யப்படுகிறது.

2.குடிமல்லூர்: வாலாஜாவிலிருந்து பாலாறு அணைக்கட்டு செல்லும் சாலையின் வலதுபுறத்தில் 2 கி.மீ தொலைவில் அகிலாண்டேஸ்வரி சமேத திருவந்தீஸ்வரர் கோயில் உள்ளது. ஒரு காலத்தில் குடமல்லிகை பூந்தோட்டமாக இருந்தது. அத்திரி முனிவர் தவமிருந்த ஊர். பஞ்ச பாண்டவர்கள் வனவாச காலங்களில் இவ்வூருக்கு வந்ததாக கூறப்படுகிறது. அற்புதமான சுவாமி சிலைகள் இங்கு உள்ளது. பிரதோஷம் மஹாசிவராத்திரி வெகுசிறப்பாக நடத்தப்படுகிறது. இக்கோயில் அமைந்த சாலையிலேயே வாஸ்து தோஷ நிவர்த்தி தலமாகவும், சிற்பக்கலைக்கூடம் என்று போற்றப்படக்கூடிய, பல்லவர், சோழர், கங்கர், விஜயநகரகால கல்வெட்டுகள் நிறைந்த பூமீஸ்வரர் கோயிலும் அமைந்துள்ளது.

3. புதுப்பாடி: ஆற்காட்டிலிருந்து செய்யாறு செல்லும் சாலையில் 10 கி.மீ தொலைவில் புதுப்பாடி கூட்ரோடு அருகே தர்மசம்வர்த்தினி அம்பாள் சமேத பரத்வாஜேஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு தல விருட்சம் மாமரம், பரத்வாஜர் தவமிருந்த ஊர். கோயிலின் கருவறை கஜபிரதிஷ்டானம்(யானை அமர்ந்த நிலையில்) வடிவில் கட்டப்பட்டுள்ளது. பிரதோஷம், மஹா சிவராத்திரி, மாத பவுர்ணமி வெகுசிறப்பாக நடத்தப்படுகிறது.

4.வேப்பூர்: ஆற்காட்டிலிருந்து 5 கி.மீ தொலைவில் வேலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாைலயில் பாலகுஜாம்பிகை சமேத வஸிஷ்டேஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு வஸிஷ்டர் தவமிருந்த ஊர். நூற்றுக்கால் மண்டபம், கல் தூணில் சரபேஸ்வரர் வீற்றிருப்பது தனிசிறப்பாகும். தமிழ் புத்தாண்டு அன்று இந்த சுவாமியை வேண்டிக் கொண்டால் நினைத்த காரியம் கைகூடும் என்பது நம்பிக்கை. பிரதோஷம், மஹா சிவராத்திரி, மாத சிவராத்திரி சிறப்பாக நடத்தப்படுகிறது.

5.மேல்விஷாரம்: விஷாரம் என்ற சொல்லுக்கு வேதவிற்பன்னர்கள் நிறைந்த ஊர் என்பது பொருள். ஆற்காட்டிலிருந்து 7 கி.மீ தொலைவில் இந்த ஊரில் வேலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வலதுபுறத்தில் வடிவுடையம்மை சமேத வால்மீகிஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு தல விருட்சம் எட்டிமரம். இதிகாச நூலான ராமாயணத்தை வழங்கிய வால்மீகி தவமிருந்த ஊர். பிரதோஷம், மஹா சிவராத்திரி, மாத சிவராத்திரி சிறப்பாக நடத்தப்படுகிறது.

6.காரை: ராணிப்பேட்டையிலிருந்து 2 கி.மீ தொலைவில் காரை கிராமத்தில் கிருபாம்பிகை சமேத ஸ்ரீகவுதமேஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு தல விருட்சம் வில்வமரம். கவுதம முனிவர் வழிபட்ட திருத்தலம். பிரதோஷம், மஹா சிவராத்திரி, மாத சிவராத்திரி சிறப்பாக நடத்தப்படுகிறது.

7.அவரக்கரை: ராணிப்பேட்டையிலிருந்து 7 கி.மீ தொலைவில் நவ்லாக் அரசு பண்ணை தோட்டத்தின் அருகில்  பர்வதவர்த்தினி சமேத காச்யபேஸ்வரர் கோயில் உள்ளது. காஷ்யப முனிவர் தவமிருந்த ஊர். இங்கு தல விருட்சம் வில்வ மரம். பிரதோஷம், மஹா சிவராத்திரி, மாத சிவராத்திரி சிறப்பாக நடத்தப்படுகிறது. மேற்கண்ட 7 முனிவர்களும் தவமிருந்த சிவாலயங்களை மாத சிவராத்திரி அன்று வழிபட்டால் மிகவும் உன்னதமானது. மஹா சிவராத்திரி அன்று தரிசித்தால் திருக்கைலாய யாத்திரை சென்று வந்த பலன் கிடைக்கும் என்பது ஆன்மீகவாதிகளின் வாக்கு. இவை தவிர காரையின் அருகிலேயே விசுவாமித்திரர், மேல்விஷாரம் அடுத்த நந்தியாலத்தில் நந்தி பகவான் தவமிருந்த நந்தீஸ்வரர், ஜனகர் தவமிருந்த திருவலம் வில்வநாதீஸ்வரர், கொங்கணர் தவமிருந்த காவேரிப்பாக்கம் கொங்கணீஸ்வரர் என ஏராளமான சிவாலயங்கள் அமைந்துள்ளன.

Tags : Sapta ,Ranipettai district ,Shataranya ,Kailaya Pilgrimage ,Maha Shivaratri festival , Sapta sages established and worshiped in Ranipettai district; Shataranya Corrections for Kailaya Pilgrimage Benefit: Intensive preparations for Maha Shivaratri festival tomorrow
× RELATED ராணிப்பேட்டை மாவட்டத்தில்...