தொட்டா தலைய வெட்டி கையில பிடிப்போம்... ரவுடியை புகழ்ந்து பாடிய கானா பாடல் வீடியோ

* வைரலாவதால் சேலம் போலீசார் அதிர்ச்சி

* ரவுடியிடம் கிடுக்கிப்பிடி,பாடியவர் ஓட்டம்

சேலம்: சேலத்தில் பிரபல ரவுடியை புகழ்ந்து கானா பாடல் பாடிய இளைஞர்கள் ‘தலயவெட்டி கையில பிடிச்சுக்குவோம்’ என பகிரங்கமாக மிரட்டல் விடுத்த வீடியோ சமூக வலைதலங்களில் வேகமாக பரவி வருகிறது. இது தொடர்பாக ரவுடியை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் சின்னக்கொல்லப்பட்டியை சேர்ந்தவர் அசாருதீன்(36). ரவுடியான இவர் மீது பலாத்காரம், வழிப்பறி உள்பட 5 வழக்குகள் இருக்கிறது. அழகு நிலையத்திற்குள் புகுந்து பணம் கொள்ளையடித்த வழக்கில அவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. இந்நிலையில் சமூக வலைதலங்களில் ரவுடி அசாருதீனை புகழ்ந்து கானா பாடல் ஒன்று வைரலாக பரவியது.

அடர்ந்த காட்டுக்குள் இருக்கும் அசாருதீனை பாராட்டி இளைஞர் ஒருவர் கானா பாடல் பாடுகிறார். அந்த பாடலின் கடைசி வரியில், ‘அசார் அண்ணன ெதாட்டா தலய வெட்டி கையில பிடிச்சுக்குவோம்’ என வருகிறது. இந்த புகழ்ச்சியை அருகில் இருந்து பார்க்கும் அசாருதீன் புன்சிரிப்பை உதிர்க்கிறார். அதே போல மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் பெரிய கேக்கை வெட்டி ரவுடி அசாருதீன் கொண்டாடும் காட்சியும் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவல் மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ்குமாருக்கு தெரிவிக்கப்பட்டது. பாடலில் கொலை செய்வேன் என வெளிப்படையாக அச்சுறுத்தும் அக்கும்பலை கூண்டோடு பிடிக்க அவர் உத்தரவிட்டார்.

இதையடுத்து தனிப்படை போலீசாரின் பிடியில் ரவுடி அசாருதீன் சிக்கினார். அவரிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் தேடுவதை தெரிந்து கொண்ட கானா பாட்டு பாடிய இளைஞர் சென்னைக்கு தப்பி ஓடிவிட்டார். அவருடன் இருந்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: