×

ஈகுவடோரியல் கினியா ஆயுத கிடங்களில் பயங்கர வெடிவிபத்து : பலி எண்ணிக்கை 98 ஆக உயர்வு

பேட்டா: ஈகுவடோரியல் கினியா நாட்டில் ராணுவ தளத்தில் நிகழ்ந்த அடுத்தடுத்த குண்டுவெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 98 ஆக அதிகரித்துள்ளது. மத்திய ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான ஈகுவடோரியல் கினியா நாட்டின் பேட்டா பகுதியில் ராணுவ தளம் அமைந்துள்ளது. இந்த ராணுவ தளத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று டைனமைட் என்ற வெடிபொருள் திடீரென தொடர்ச்சியாக வெடித்தது. இதனால், பயங்கர சத்தமும், வானுயரத்திற்கு எழுந்த கரும்புகையும் பல கிமீ தூரத்திற்கும் தெரிந்ததால் மக்கள் பீதி அடைந்தனர். ஆயுதக் கிடங்கின் சுற்றுவட்டாரத்தில் இருந்த ஏராளமான வீடுகள் தரைமட்டம் ஆகின.  

சக்திவாய்ந்த இந்த குண்டுவெடிப்பில் சிக்கி நிகழ்வு இடத்திலேயே 20 பேர் பலியாகினர். இந்நிலையில், இந்த வெடி விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 98 ஆக அதிகரித்துள்ளதாக கினியா அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதேபோல் படுகாயமடைந்தவர்கள் எண்ணிக்கை 615 ஆக உயர்ந்துள்ளது. அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.‌ இதையடுத்து வெடி விபத்து நிகழ்ந்த இடத்திற்கு கினியா அதிபர் டியோடோரா ஓபியாங் நேரில் சென்று பார்வையிட்டார்.டைனமைட் வெடிபொருளை பயன்படுத்தும்பொழுது பாதுகாப்பு விஷயங்களை கவனத்தில் கொள்ளவில்லை என கினியா அதிபர் டியோடோரா ஓபியாங் தெரிவித்துள்ளார்.படுகாயம் அடைந்த சிகிச்சை பெற்று வருபவர்களில் பலரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. வெடி விபத்தில் ராணுவ ஆயுத கிடங்கு முற்றிலும் அழிந்துவிட்டதால், வெடி விபத்துக்கான காரணத்தை கண்டறிவதில் சிக்கல் நீடித்து வருகிறது.

Tags : Ecuadorian Guinea , கினியா
× RELATED மக்களவை தேர்தல்; தமிழகத்தில் காலை 9 மணி...