×

பாஜ ஏமாற்றிவிட்டதாக குற்றச்சாட்டு: புதுச்சேரியில் 15 இடங்களில் பாமக தனித்து போட்டி: கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு

புதுச்சேரி:  புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து பாமக விலகியுள்ளது. புதுச்சேரியில் 15 இடங்களில் தனித்து போட்டியிடும் என அறிவித்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள என். ஆர் காங்கிரஸ், பாஜ, அதிமுக இடையே தொகுதி பங்கீடு இறுதியானது. முன்னதாக,  தங்களுக்கு புதுச்சேரியில் 4 இடங்களும், காரைக்காலில் ஒரு இடமும் என 5 இடங்களை ஒதுக்க வேண்டுமென  பாமக சார்பில் மாநில அமைப்பாளர் தன்ராஜ், பாஜகவிடம் வலியுறுத்தி வந்தார்.

ஆனால், பாமகவுக்கு இடங்கள் ஒதுக்குவது தொடர்பாக திட்டமில்லை என அவர்கள் கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். இதைதொடர்ந்து நேற்று மாலை பாமக துணைத்தலைவர் சந்தியநாராயணா தலைமையில் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதில் வரும் தேர்தலில் பாமக தனித்து போட்டியிட முடிவு செய்யப்பட்டது.  இது குறித்து அமைப்பாளர் தன்ராஜ் கூறுகையில், பாமக கட்சி தமிழகத்தில் தேஜ கூட்டணியின் இரண்டாவது பெரிய கட்சியாக இருக்கிறது. இங்கும் எங்களுக்கும் பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டுமென வலியுறுத்தினோம்.

ஆனால் எவ்வித பதிலும் தெரிவிக்காமல் கூட்டணி பங்கீட்டை முடித்துள்ளனர். இதில் எங்களுக்கு திருப்தியில்லை. எனவே எங்கள் கட்சி நிர்வாகிகள் தனித்து போட்டியிட முடிவு செய்தனர். எங்கள் கட்சி தலைமையும் இதனை ஏற்றுக்கொண்டுள்ளது. வலுவாக இருக்க கூடிய தொகுதியில் போட்டியிடுவோம் என்றார். அதன்படி புதுச்சேரியில் 12 இடங்களிலும், காரைக்காலில் 3  தொகுதிகளிலும் போட்டியிடவுள்ளதாக துணைத்தலைவர் சத்தியநாராயணா தெரிவித்துள்ளார்.

Tags : BJP ,Pamaka ,Pondicherry , BJP accused of cheating: Pamaka solo contest in 15 seats in Pondicherry: Announcement of withdrawal from the alliance
× RELATED கோவையில் தேர்தல் பணிகளுக்கு...