மக்கள் நீதி மய்யம் கூட்டணிக்கு செல்ல மாட்டோம் 234 தொகுதியிலும் தேமுதிக தனித்து போட்டி: தி.மு.க ஆட்சிக்கு வந்தால் மகிழ்ச்சி..! விஜய பிரபாகரன் பரபரப்பு பேச்சு

பண்ருட்டி: மக்கள் நீதி மையம் கூட்டணிக்கு செல்ல மாட்டோம். தேமுதிக 234 தொகுதியிலும் தனித்து போட்டியிடும், திமுக ஆட்சிக்கு வந்தால் மகிழ்ச்சியே  என பண்ருட்டியில் நடந்த கூட்டத்தில் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் பேசினார். கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் தேமுதிக செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடந்தது.  கட்சி தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் கலந்து கொண்டு பேசியதாவது: ஜெயலலிதா அன்று எங்களுக்கு இறங்குமுகம் என்று கூறினார்.  ஆனால்  அதிமுகவிற்கு  இன்று முதல் இறங்குமுகம் ஆரம்பம். தேமுதிகவுக்கு என்று தன்மானம் உள்ளது. அதிமுக, பாமக நிறுத்தும் வேட்பாளர்களை  டெபாசிட் இழக்க  கட்சி கடுமையாக பாடுபடும். விஜயகாந்த் அரசியலிலிருந்து ஒதுங்கி விடுவார் என்ற பலரின் கனவு பலிக்காது.  அதிமுக கூட்டணியில் தலைமை சரியில்லை. விஜயகாந்துக்கு எப்போதும் கொடுத்துதான் பழக்கம். அதிமுகவினர் கூட்டணி விஷயத்தில் எங்களுக்கு உரிய மரியாதை தரவில்லை. முதல்வர் எடப்பாடி போட்டியிடும் தொகுதியிலேயே மண்ணை கவ்வ போகிறார். இனி என்னுடைய ஆட்டம் ஆரம்பம். பட்டி தொட்டிகளில் இனி எங்கள் கட்சி கொடி அதிகமாக பறக்கும்.

நேற்று முன்தினமே விஜயகாந்த் எங்களிடம் சொல்லிவிட்டார், கூட்டணி ஒத்துவராது, 234 தொகுதியிலும் தனியாக நிற்க  வேண்டும் என்று. அதிமுக அமைச்சர்கள் பலர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் சிறைக்கு செல்வார்கள். ஆகையால் இந்த தேர்தலில் சிறப்பாக உழைக்க வேண்டும். பண்ருட்டி, விருத்தாசலம் ஆகிய தொகுதிகளில் விஜயகாந்த், பிரேமலதா, அல்லது நான் என யாராவது ஒருவர் நிச்சயமாக நிற்போம். சட்டசபையில் தேமுதிகவின் குரல் ஒலிக்கும். உள்ளாட்சி தேர்தல்களில் அதிமுகவினர் எங்களை ஏமாற்றிவிட்டனர். அதிமுக, பாமக கூட்டணியை தோற்கடிக்க கட்சி தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். பின்னர் நிருபர்களிடம் கூறும்போது, அதிமுக கூட்டணியைவிட்டு வெளியேறியது பலாப் பழத்தைவிட இனிப்பான செய்தியாகும். கடலூர் மாவட்டம் தேமுதிகவின் கோட்டை. யாரும் ஒன்றும் செய்ய முடியாது. பத்தாண்டுகளுக்கு பிறகு ஆட்சி மாற்றம் ஏற்படுவது மக்கள் மனதில் உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தால் மகிழ்ச்சி. மக்கள் நீதி மய்யம் கூட்டணிக்கு செல்ல மாட்டோம் என்றார்.

Related Stories:

>