×

தேமுதிக வெளியேறியது; பாஜ, பாமகவுடன் தொகுதி பங்கீட்டில் இழுபறி; அதிமுக கூட்டணியில் உச்சக்கட்ட குழப்பம்

சென்னை: அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக திடீரென வெளியேறியுள்ளது. பாஜ, பாமகவுடன் இன்னும் தொகுதி உடன்பாடு ஏற்படவில்லை. இதுபோன்று பல்வேறு சம்பவங்கள் அதிமுக கூட்டணியில் இருப்பதால், அக்கட்சியில் உச்சகட்ட குழப்பம் நிலவி வருகிறது. மேலும், போட்டியிட விருப்பமனு அளித்தவர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் இதனால் கடும் குழப்பம் மற்றும் டென்ஷனில் இருந்து வருகிறார்கள். வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் ஒருநாள் மட்டுமே உள்ளதால் விருப்பமனு அளித்தவர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கட்சிகள், கூட்டணி குறித்து கடந்த 10 நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதில் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு சீட் ஒதுக்கும் பணிகள் ஓரளவு முடிந்துள்ளது. ஆனால், அதிமுகவில் பாமக, பாஜ ஆகிய இரண்டு கட்சிகளுக்கு மட்டுமே இதுவரை சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி பாமகவுக்கு 23, பாஜவுக்கு 20 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

அந்த கூட்டணியில் இடம்பெறலாம் என்று கூறப்பட்ட தேமுதிக நேற்று திடீரென கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது. தமாகா, புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட பல சிறிய கட்சிகளுக்கும் அதிமுக கூட்டணியில் இதுவரை தொகுதிகள் ஒதுக்கப்படாமல் உள்ளது. இந்த நிலையில், அதிமுகவுடன் தொகுதி உடன்பாடு ஏற்பட்ட பாமக மற்றும் பாஜ கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்படும் என்பது குறித்து நேற்று மதியத்திற்கு மேல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அந்த கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவார் என்ற தகவல் வெளியானது. இந்த நிலையில்தான், அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறியதாக தேமுதிக நேற்று மதியம் 1 மணிக்கு அதிரடியாக அறிவித்தது. இதனால், மிகவும் சோர்வடைந்த அதிமுக தலைவர்கள் நேற்று இரவு வரை தமிழக பாஜ தலைவர்கள் யாரையும் சந்தித்து பேசவில்லை.

பாமக நிர்வாகிகள் யாரையும் தொகுதி ஒதுக்குவது குறித்து அழைத்து பேசவில்லை. அதேபோன்று பாமக சார்பில் அவசர செயற்குழு கூட்டம் நேற்று மதியம் 12 மணிக்கு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. அந்த கூட்டமும் திடீரென ஒத்திவைக்கப்பட்டது. தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் வருகிற 12ம் தேதி (நாளை மறுதினம்) தொடங்குகிறது. அதற்கு இன்னும் ஒரு நாளே உள்ளது. ஆனால், அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளில் பாமக, பாஜ கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்பதில் சிக்கல் நீடிக்கிறது. அதேபோன்று, தமாகா, புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட பல்வேறு சிறிய கட்சிகளுக்கும் சீட் ஒதுக்க முடியாமல் முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் திணறி வருகிறார்கள். ஆனாலும், நேற்று இரவுக்குள் அதிமுக கூட்டணி இறுதி செய்யப்பட்டு, அவர்களுக்கான தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு விடும் என்றும் கூறப்பட்டது. ஆனாலும், நேற்று எந்த கட்சி நிர்வாகிகளையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியோ, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமோ அல்லது அமைச்சர்களோ சந்தித்து பேசவில்லை.

அதேநேரம் நேற்று காலை 11 மணிக்கு இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன் மட்டும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். அப்போது, அதிமுக கூட்டணியில் போட்டியிட தங்கள் கட்சிக்கு சீட் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதேபோன்று பல சிறிய கட்சிகளும் சீட் கேட்டு அதிமுக தலைமைக்கு நெருக்கடி கொடுத்து வருவதால் பரபரப்பு எழுந்துள்ளது. இவர்களுக்கு சீட் கிடைக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் அதிமுக கூட்டணி ஏற்பட்டுள்ள உச்சக்கட்ட குழப்பத்தால் அக்கட்சி தொண்டர்களும் அதிருப்தியில் உள்ளனர். இது ஒருபுறம் இருக்க, அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பதில் தனது ஆதரவாளர்களுக்கு சரிபாதி இடங்களை ஒதுக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி கொடுத்து வருகிறார். ஒரு பக்கம் கட்சியில் பிரச்னை, மற்றொரு பக்கம் கூட்டணி கட்சிகள் கொடுக்கும் நெருக்கடி என பலமுனை தாக்குதல்களால் அதிமுக தலைமை திணறி வருவது குறிப்பிடத்தக்கது.

Tags : Demuthika ,Baja ,Bamaga ,AIADMK , Demuthika left; Baja, pulling in block allocation with Bamaga; Extreme chaos in the AIADMK
× RELATED உதவியாளர்களிடம் ரூ.4 கோடி பறிமுதல்...