×

விலையை குறைக்க அதிமுக அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை ஆண்டுக்கு 6 காஸ் சிலிண்டர் எடப்பாடியின் தேர்தல் நாடகம்: பொதுமக்கள் குற்றச்சாட்டு

திருவள்ளூர்: ஆண்டுக்கு 6 காஸ் சிலிண்டர் கொடுப்பதாக எடப்பாடி பழனிசாமி அளித்த தேர்தல் வாக்குறுதிக்கு பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகள் பின்வருமாறு: சிவகாமி (இல்லத்தரசி, காக்களூர்): சட்டமன்ற தேர்தலில் அதிமுக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் வருடத்திற்கு 6 காஸ் சிலிண்டர் வழங்குவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்திருப்பது வேடிக்கையாக உள்ளது. அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு எந்த ஒரு திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. தங்கத்தைவிட காஸ் விலை வேகமாக உயர்ந்து வருகிறது. வேலை செய்து பிழைப்பு நடத்தி வரும் நாங்கள் எப்படி கேஸ் சிலிண்டரை வாங்க முடியும். மத்தியில் ஆளும் பாஜவுடன் கூட்டணி வைத்துள்ள எடப்பாடி பழனிசாமி ஏன் இதுவரை காஸ் சிலிண்டர் விலை உயர்வை கட்டுப்படுத்த பேச்சு வார்த்தை கூட நடத்தவில்லை. நிறைவேற்ற வேண்டிய திட்டங்களையே நிறைவேற்ற முடியாத எடப்பாடி பழனிசாமி வருடத்திற்கு 6 காஸ் சிலிண்டர்களை எப்படி இலவசமாக வழங்குவார் என்றார்.

சுந்தரிகோபி (சமூக ஆர்வலர், பட்டாபிராம்):  தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசி வெற்றி பெறுவதில், எடப்பாடி பழனிசாமி குறியாக உள்ளார். சமீபகாலமாக, மாதம்தோறும் விலை உயர்த்தப்பட்டு தற்போது கேஸ் சிலிண்டர் ஒன்று 850 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால், ஏழை - எளிய, நடுத்தர மக்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். மேலும், சிலிண்டர் விலையை குறைக்க அதிமுக அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. பழனிசாமி ஆண்டொன்றுக்கு ஒரு குடும்பத்துக்கு 6 சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு முழுக்க, முழுக்க வாக்காளர்களை கவர்ந்து இழுக்க அவர் நடத்தும் தேர்தல் நாடகம் ஆகும் என்றார். எமிமா (பெரியபாளையம்): தமிழகத்தில் 10 ஆண்டுகளாக நடக்கும் அதிமுக ஆட்சியில் காஸ் விலையை குறைக்க முடியவில்லை. இவர்கள், எப்படி ஆண்டுக்கு 6 காஸ் சிலிண்டர் இலவசமாக வழங்க போகிறார்கள்.  தேர்தல் வந்ததும் மாதம் ₹1,500 தருவதாக கூறுகிறவர்கள். கொரோனா காலத்தில் நாங்கள் வீட்டில் முடங்கி கிடந்தபோது எங்கே சென்றார்கள்.  

இதெல்லாம் கண் துடைப்புதான், இவர்கள் கையில் ஒன்றுமில்லை. திடீரென பிரதமர் மோடி இலவசமாக சிலிண்டர் தரமுடியாது என அறிவித்தால் அதிமுகவினர் மத்திய அரசு மீது பழி போட்டு தப்பித்துக்கொள்வார்கள்.  சிலிண்டர் தரமாட்டார்கள் என்றார்.  அமுதா சுகுமார் (இல்லத்தரசி, ஸ்ரீபாலாஜி நகர், திருவள்ளூர்): சட்டமன்ற தேர்தலில் அதிமுக மீண்டும் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் வருடத்திற்கு 6 காஸ் சிலிண்டர் வழங்குவதாக எடப்பாடி பழனிசாமி பொய் வாக்குறுதி கொடுத்துள்ளார். மத்தியில் ஆளும் பாஜ அரசுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக அரசு காஸ் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியாதவர்கள், எப்படி வருடத்திற்கு 6 காஸ் சிலிண்டர்களை இலவசமாக வழங்குவார்கள். பொய்யான வாக்குறுதி கொடுத்து மக்களை ஏமாற்றி வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுவிடலாம் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடலாம் என்ற தவறான எண்ணத்தை அதிமுக அரசும், மத்திய பாஜ அரசு கைவிட வேண்டும். என்றார்.

மீனா (சேலை மெயின் ரோடு, திருவள்ளூர்):  ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த முதியோர் உதவி தொகையினை அதிமுக அரசு சரியாக வழங்க முடியாமல் நிறுத்திவிட்டது. முதியோர் உதவித்தொகையை வழங்க முடியாத எடப்பாடி பழனிசாமி வருடத்திற்கு 6 காஸ் சிலிண்டர்களை எப்படி இலவசமாக வழங்குவார் என்றார். சுலோச்சனா மாயகிருஷ்ணன் (பழ வியாபாரி, ஈக்காடு, திருவள்ளூர்): விஷம்போல் காஸ் விலை உயர்ந்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலையும் கடுமையாக உயர்ந்து வருகிறது. மத்தியில் ஆளும் பாஜ கூட்டணி வைத்துள்ள எடப்பாடி பழனிசாமி காஸ் விலை உயர்வை கட்டுப்படுத்த ஏன் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அப்படிப்பட்டவர் எப்படி வருடத்திற்கு 6 காஸ் சிலிண்டர்களை இலவசமாக வழங்குவார். 2014ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின்போது குடும்ப தலைவர் வங்கிக்கணக்கில் 15 லட்சம்  வழங்குவதாக மோடி அறிவித்தார்.

ஆனால் 2வது முறையாக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த பிறகும் மோடி இதுவரை ஒருவருக்கு கூட இதுவரை வழங்கவில்லை. தற்போது எடபாடி பழனிசாமி குடும்ப அட்டை வைத்துள்ள ஒவ்வொரு குடும்ப தலைவிக்கும் மாதம் 1500 வழங்குவதாக அறிவித்துள்ளார். இது ஒரு ஏமாற்று வேலை. வருடத்திற்கு 6 காஸ் சிலிண்டர்களை இலவச வழங்குவதாக கூறி மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்து விடலாம் என்ற ஒரே எண்ணத்தோடு இந்தத் திட்டத்தை அறிவித்துள்ளார் என்றார்.

Tags : AIADMK govt , AIADMK govt makes no attempt to reduce prices 6 Gas cylinder per annum
× RELATED வேளச்சேரி ஏரியின் உபரி நீர்...