கோலார்: பெண்கள் எந்த காரணத்துக்கும் நிதானத்தை இழக்காமல் சுயமரியாதையுடன் வாழ வேண்டும் என்று மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரி என்.எம்.நாகராஜ் தெரிவித்தார். மாவட்ட பஞ்சாயத்து, பெண்கள் மற்றும் குழந்தை நலத்துறை சார்பாக நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட என்.எம். நாகராஜ் பேசியதாவது: ``பெண்கள் நான்கு சுவற்றுக்குள் குடும்பம் நடத்த வேண்டும் என்ற காலம் மாறியுள்ளது. பெண்கள் தற்போது ஆண்களுக்கு சரி சமமாகவுள்ளனர். பெண்களுக்கு எதிரான கொடுமைகள் குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்கள் மத்தியில் தைரியத்தை ஏற்படுத்தி சுயமரியாதையுடன் வாழ வழி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். பெண்கள் சுய தொழில் மூலம் வாழ்க்கை தொடங்கி பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைய வேண்டும். அதே போல் அரசின் சலுகைகள் பெற்று சுயமரியாதையுடன் வாழ்ந்து உயர்ந்து பதவிகளுக்கு வந்து ஆண்களுக்கு சமமானவர்கள் என்பதை நிரூப்பிக்க வேண்டும். உள்ளாட்சிகளில் தற்போது பெண்களுக்கு 50 சதவிகிதம் இடஒதுக்கீடு உள்ளது. பெண்கள் ரப்பர் ஸ்டாம்பு போல் இருக்காமல் சொந்த முடிவுகள் எடுத்து சமூகத்தின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்க வேண்டும் என்றார்.