×

தங்கவயலில் தொழில் பூங்கா: நிலங்களை ஆய்வு செய்த கலெக்டர்

தங்கவயல்: தங்கவயலில் தொழில் பூங்கா அமைக்க மாநில அரசு கையகப்படுத்தியுள்ள நிலங்களை கோலார் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்.செல்வமணி அரசு அதிகாரிகளுடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27ம்தேதி அன்று அப்போது கோலார் மாவட்ட கலெக்டராக இருந்த சத்திய பாமா தங்கவயல் பி.இ.எம்.எல்.பகுதிக்கு வந்தார். அங்கு பொன்மலை முருகன் கோயில் எதிரில் உள்ள காலி நிலங்களையும், அஜ்ஜி பள்ளி கிராமம்  செல்லும் சாலையில் உள்ள காலி நிலங்களையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறும் போது: “தங்கவயல் அருகில் செல்லும் பெங்களூரு-சென்னை விரைவு தொழிற் பாதை பணி நடந்து வருகிறது. அதே போல் பெங்களூரு, சென்னை விமான நிலையங்கள், ரயில் மார்க்கத்தில் உள்ள ஆந்திர மாநில குப்பம் ஆகியவற்றுக்கான போக்குவரத்து வசதி அனைத்தும் தங்கவயலில் உள்ளதால், இங்கு தொழிற்பேட்டை அமைக்க அரசு முடிவு செய்தது. அதற்கான நிலம் 973 ஏக்கர் பி.இ.எம்.எல்.நிறுவனத்திடம் இருந்து கையகப்படுத்தப் படுகிறது. தொழிற்பேட்டை அமைக்க மாநில அரசு கோலார் மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைத்த பணிகள் அனைத்தும்  விரைந்து செய்து முடிக்கப்படும்” என்றார்.

அதன்படி  கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தங்கவயல் தாலுகா வருவாய் ஆய்வாளர் சிங் மற்றும் அதிகாரிகள் பி.இ.எம்.எல்.பொன்மலை முருகன் கோயில் எதிரில் உள்ள நிலம், பி.இ.எம்.எல்.விளையாட்டு அரங்கின் பின்புறம் மற்றும் .பி.இ.எம்.எல் அதிகாரிகள் குடியிருப்பின் பின்புறம் உள்ள நிலங்களை ஆய்வு செய்து, அடையாள கற்களை நட்டு வைத்து அங்கு அறிவிப்பு பலகைகளையும் வைத்தனர். இந்த நிலையில்  கோலார் மாவட்ட புதிய கலெக்டர் டாக்டர் ஆர். செல்வமணி, வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் பி.இ.எம்.எல். நிறுவன அதிகாரிகளுடன் அரசு கையகப்படுத்திய நிலங்களை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tags : Industrial Park , Industrial Park in Goldfields: Collector who surveyed lands
× RELATED எறையூர் சிப்காட்டில் மண் திருடி சாலை அமைப்பு: பொதுமக்கள் புகார்