பெங்களூரு உள்பட 11 மாவட்டங்களில் 9 அரசு அதிகாரிகளுக்கு சொந்தமான 28 இடங்களில் ஏசிபி சோதனை: பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்கநகை, ஆவணங்கள் பறிமுதல்

பெங்களூரு: கர்நாடகத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 9 அரசு அதிகாரிகளுக்கு சொந்தமான 28 இடங்களில் ஊழல் தடுப்பு படை அதிகாரிகள் சோதனை நடத்தி பல கோடி ரூபாய் மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துகளை பறிமுதல் செய்துள்ளனர். கர்நாடக மாநிலத்தில் அரசு துறையில் பணியாற்றி வரும் அதிகாரிகள் சட்டவிரோதமாக லஞ்சம் வாங்கி அதை கணக்கில் வராத அசையும் மற்றும் அசையா சொத்துகளாக வாங்கி குவித்து வைத்திருப்பதாக ஊழல் தடுப்பு படை அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதையடுத்து தனிப்படை அமைத்த ஊழல் தடுப்பு படையினர் புகார் தொடர்பாக விசாரணை நடத்தினர். அதில் ஜெஸ்காம், ஆர்.டி.ஓ அலுவலகம், பி.எம்.டி.எப் அலுவலகம் என்று அரசு துறையில் பணியாற்றிய 9 அதிகாரிகளின் குறித்த விவரங்கள் போலீசாருக்கு கிடைத்தது.

இவர்களின் வீடுகளில் சோதனை நடத்த முடிவு செய்த ஊழல் தடுப்பு படையினர், மாநிலம் முழுவதும் 52 ஏ.சி.பி அதிகாரிகள் மற்றும் 172 ஊழியர்கள் கொண்ட தனிப்படை அமைத்தனர். நேற்று காலை இவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினர். குறிப்பாக  கோலார், சிக்கப்பள்ளாபுரா, பெங்களூரு, யாதகிரி, தாவணகெரே, மைசூரு, மண்டியா, கார்வார், பெலகாவி, ராம்நகர் உடுப்பி ஆகிய 11 மாவட்டங்களில் இருந்த அரசு அதிகாரிகளுக்கு சொந்தமான வீடு, அலுவலகம், உறவினர்களின் வீடு என 28 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் பல்வேறு அசையும் மற்றும் அசையா சொத்துகள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக ஊழல் தடுப்பு படை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது; சிக்கப்பள்ளாபுரா நீர்மிதிகேந்திரா திட்ட இயக்குனர் கிருஷ்ணேகவுடாவிற்கு சொந்தமான கோலார், சிக்கப்பள்ளாபுரா வீடு மற்றும் அலுவலகம், சகோதரரின் வீடு ஆகிய இடங்களில் ஊழல் தடுப்பு படை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதற்கு அடுத்தப்படியாக பெலகாவி சர்க்கிள் முதன்மை மின்சாரத்துறை ஆய்வாளர் ஹனுமந்தசிவப்பாவிற்கு சொந்தமான  பெலகாவி, அங்கோலா மற்றும் பெலகாவி சர்க்கிளில் உள்ள அலுவலகம், சொந்த ஊரான ஜமகண்டி தாலுகா கொலம்பாவி கிராமத்தில் உள்ள வீடு, பெலகாவி கித்தூர் ராணி சென்னம்மாநகர் பகுதியில் உள்ள அப்பார்ட்மென்ட் ஆகிய இடங்களில் ஊழல் தடுப்பு படை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

மைசூரு டவுன் திட்ட அலுவலக இணை இயக்குனர் சுப்பிரமணி என்பவருக்கு சொந்தமான உடுப்பியில் உள்ள வீடு, கார்வாரில் உள்ள தாயின் வீடு, மைசூருவில் உள்ள வாடகை வீடு மற்றும் அலுவலகத்தில் அதிகாலை தொடங்கிய ஊழல் தடுப்பு படை சோதனை மாலை வரை நடந்தது. இதற்கு அடுத்தப்படியாக மைசூரு ஜெஸ்காம் கண்காணிப்பு இன்ஜினியர் முனிகோபால் ராஜூ என்பவருக்கு சொந்தமான குவெம்புநகர் ஜெஸ்காம் அலுவலகம், கோகுலம் லே அவுட்டில் உள்ள வீடு, ராம்நகர் கனகபுராவில் உள்ள வீடு ஆகிய இடங்களில் மைசூரு மற்றும் ராம்நகர் மாவட்டம் ஊழல் தடுப்புபடை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதேபோன்று யாதகிரியில் ஜெஸ்காம் அலுவலகத்தில் கணக்காளராக பணியாற்றி வந்த ராஜூ பட்டாருக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகத்திலும்  அந்த மாவட்டத்தை சேர்ந்த ஊழல் தடுப்பு படை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

மைசூரு தெற்கு லட்சுமிபுராவில் உள்ள ஆர்.டி.ஓ அலுவலகம் எப்.டி.ஏ அதிகாரி சென்ன வீரப்பாவிற்கு சொந்தமான குவெம்புநகர் வீடு, மண்டியா ஹொலல்கெரே வீடு மற்றும் அவர் வேலை பார்த்து வந்த அலுவலகம் ஆகிய இடங்களில் ஊழல் தடுப்புபடையை சேர்ந்த அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதற்கு அடுத்தப்படியாக பெங்களூரு கசவனஹள்ளியில் உள்ள பி.எம்.டி.எப்  அலுவலகத்தில் பணியாற்றி வந்த இன்ஸ்பெக்டர் விக்டர் சைமன் பணியாற்றிய வந்த அலுவலகம் மற்றும் பெங்களூருவில் உள்ள வீடு, மைசூருவில் உள்ள தந்தை மற்றும் மாமனாருக்கு சொந்தமான வீடு ஆகிய இடங்களில் ஊழல் தடுப்பு படை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

பெங்களூரு எலகங்கா மண்டல பி.பி.எம்.பி டவுன் திட்ட அலுவலக உதவி இயக்குனர் கே சுப்பிரமணியம் என்பவருக்கு சொந்தமான சங்கராநகர் வீடு, எலகங்காவில் உள்ள அலுவலகம் மற்றும் தாவணகெரே மண்டல தொழிற்சாலை, பாய்லர் அலுவலக துணை இயக்குனர் கே.எம் பிரதாப் என்பவருக்கு சொந்தமான சஞ்சய்நகர் நாகசெட்டிஹள்ளி வீடு, தாவணகெரேவில் உள்ள அலுவலகம், சஞ்சய்நகரில் உள்ள சகோதரன் வீடு ஆகிய இடங்களில் ஊழல் தடுப்பு படை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

28 இடங்களில் நடந்த இந்த சோதனையில் தங்க வளையல், செயின் மோதிரம், கைச்செயின், வெள்ளி பொருட்கள், வைர நகைகள், ரொக்கப்பணம், பரிசு பொருட்கள், கார், பைக், சொத்து ஆவணங்கள் என்று பல கோடி ரூபாய் மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்து ஆவணங்கள், பொருட்களை கைப்பற்றியதாக ஊழல் தடுப்புபடையினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக முழு விவரங்களை விரைவில் வெளியிடப்படும். மேலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஊழல் தடுப்பு படையினர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. முழு விவரங்களை விரைவில் வெளியிடப்படும். மேலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

Related Stories:

>