×

சொன்னாரே! செஞ்சாரா?..அரசின் நலத்திட்டங்கள் முழுவதும் கிடைக்க அதிமுகவினருக்கே முன்னுரிமை அளித்த எம்எல்ஏ: அரியலூர் தொகுதி எம்எல்ஏ எஸ்.ராஜேந்திரன்

அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், ஜெயங்கொண்டம் என இரண்டு சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. 2016 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று அரியலூர் தொகுதி எம்எல்ஏவாகவும், அரசு கொறடாவாகவும் தாமரை எஸ்.ராஜேந்திரன்  உள்ளார். இவரை எதிர்த்து திமுக சார்பில் மாவட்ட செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கர் போட்டியிட்டார். மாவட்ட தலைநகராக இருக்கும் அரியலூரை, பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து  பிரித்து தனி மாவட்டமாக ஆக்கியவர் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர்.  காழ்ப்புணர்ச்சி காரணமாக அரியலூர் நகரம் வளர்ச்சியடைய எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் முட்டுக்கட்டை  போடப்பட்டுள்ளன.

அரியலூர் தொகுதி மக்களின் வரமும், சாபமுமாக சிமென்ட் ஆலைகள் இருந்து வருகின்றன. சிமென்ட் ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படும் மாசு, சிமென்ட் ஆலைக்காக இயங்கும் லாரிகளால் தொடர் விபத்துகள், உயிரிழப்புகள் என 5 ஆண்டுகளில் அனுபவித்த பிரச்னைகளுக்கு இதுவரை எந்த தீர்வும் ஏற்படுத்தப்படவில்லை. சுண்ணாம்புக்கல் சுரங்கத்திற்கும், ஆலைகளுக்கும் இடையே தனி பாதை அமைக்க எந்த முயற்சியும் இதுவரை எடுக்கப்படவில்லை. தொகுதியின் அனைத்து கிராமத்திற்கும் சென்று ஓட்டு கேட்ட எம்எல்ஏ, வெற்றி பெற்ற பிறகு கிராமங்களை எட்டி பார்க்கவில்லை. பல கிராமங்களில் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யவில்லை. அரசின் திட்டங்களான வீடு வழங்குதல், ஆடு, கால்நடை கொட்டகை உட்பட பல நலத்திட்டங்கள் ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்படவில்லை.

இதற்கு பதிலாக அதிமுகவினருக்கே முன்னுரிமை அளித்து வழங்கப்பட்டன. சுற்றுசூழல் பிரச்னைக்கோ அல்லது சாலை பாதுகாப்பிற்கோ எந்தவித தீர்வும் மேற்கோள்ளவில்லை. கட்சிக்காரர்களுக்கு சாலை  அமைப்பது, ஏரி வெட்டுவது ஒப்பந்த பணிகளை பெற்று தருவதிலேயே அதிக கவனம்  செலுத்தி வந்த எம்எல்ஏ, அதில் என்ன கமிஷன் கிடைக்கும் என்பதை தான் 5 வருடத்தில்  பார்த்துள்ளார். ஆனால், சாலை அமைத்தேன், ஏரி வெட்டினேன் என அரசின் பணிகளையே  தனது 5 வருட சாதனை என எம்எல்ஏ சொல்லிக்கொள்கிறார் என்கின்றனர் தொகுதி மக்கள்.



Tags : Senjara ,MLA ,AIADMK ,Ariyalur ,S. Rajendran , MLA gives priority to AIADMK for availability of government welfare schemes: Ariyalur MLA S. Rajendran
× RELATED பழைய கட்டிடத்தை காட்டி புதிய கட்டிடம்...