2016ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் கூறிய பல திட்டங்கள் தொடங்கவே இல்லை அதிமுகவின் ஒரு லிட்டர் பால் ரூ.25 என்ற திட்டம் என்னாச்சு?... அனைவருக்கும் செல்போன் திட்டமும் ‘டமால்’

சென்னை: தமிழகத்தில் 2016ம் ஆண்டு அதிமுக தேர்தல் அறிக்கையில் ஒரு லிட்டர் பால் ரூ.25க்கு கிடைக்கும் என்று கூறிய திட்டம் என்னாச்சு என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். அதேபோன்று அனைவருக்கும் செல்போன் திட்டமும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தால், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும், ஆண்டுக்கு 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்பது உள்பட 7 புதிய திட்டங்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த 7ம் தேதி திருச்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அறிவித்தார். இந்த திட்டங்களுக்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.  இதற்கு, போட்டியாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம், அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,500, ஆண்டுக்கு 6 காஸ் சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்தார்.

இப்படி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிடும் ஒவ்வொரு அறிவிப்புகளுக்கும் போட்டியாக முதல்வர் எடப்பாடி அறிவித்து வருவது மக்களின் நையாண்டிக்கு ஆளாகியுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு தேர்தலின்போது, அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா இதுபோன்ற பல்வேறு திட்டங்களை அறிவித்தார். அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இவையெல்லாம் நிறைவேற்றப்படும் என்றார். ஆனால் அவர் அறிவித்த பல திட்டங்கள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. உதாரணத்துக்கு, அதிமுக ஆட்சிக்கு வந்தால் பொதுமக்களுக்கு ஒரு லிட்டர் பால் ரூ.25க்கு வழங்கப்படும் என்று 2016ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டது. ஆனால், இன்றைக்கு ஆவின் பால் லிட்டர் ரூ.42க்கு விற்கப்படுகிறது. கிரீன் பால் லிட்டர் ரூ.47க்கு விற்கப்படுகிறது. இவையெல்லாம் அதிமுக ஆட்சியில் 3 முறை உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பால் விலை குறைப்பேன் என்று சொல்லி ஆட்சிக்கு வந்துவிட்டு, சாதாரண பால் விலையை கூட குறைக்காமல் அதிகரித்ததுதான் அதிமுக ஆட்சியின் சாதனையாக மக்கள் கருதுகிறார்கள். அடுத்து, ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு இலவச செல்போன் வழங்கப்படும் என்று 2016ம் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டது. அந்த திட்டம் என்னாச்சு? அப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டது குறித்து தற்போதைய முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், அதிமுக எம்எல்ஏக்களுக்கு தெரியுமா? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். முக்கியமாக, 2011ம் ஆண்டே ஜெயலலிதா அதிமுக தேர்தல் அறிக்கை வெளியிட்டார். அதில் மூத்த குடிமக்களுக்கு அதாவது 60 வயதை தாண்டிய அனைவரும் அரசு பேருந்தில் பயணம் செய்ய கட்டமில்லா பஸ் பாஸ் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பும் ஆட்சி முடியும்போது, அதாவது 24.2.2016 அன்று கண்துடைப்புக்காக சென்னையில் தொடங்கி வைக்கப்பட்டது. அதன்படி மாதம் 10 டோக்கன் வழங்கப்படும்.

அதை வைத்து 10 முறை மட்டுமே மூத்த குடிமக்கள் மாநகர பஸ்சில் பயணம் செய்ய வேண்டும். இந்த டோக்கனை வாங்க பஸ் டெப்போக்களில் வயதானவர்கள் ஒவ்வொரு மாதமும் பல மணி நேரம் காத்து நின்று வாங்க வேண்டும். இந்த திட்டம் கண்துடைப்புக்காக சென்னையில் மட்டுமே தற்போதும் நடைமுறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இப்படி தேர்தல் அறிக்கையில் சொன்னதை கூட செய்யாத அதிமுக அரசு தற்போது, மாதம் தோறும் ரூ.1,500, ஆண்டுக்கு 6 சிலிண்டர் இலவசம் என்பது வெற்று அறிவிப்பு, அதாவது மத்தியில் பாஜ ஆட்சிக்கு வருவதற்கு முன், வெளிநாட்டில் உள்ள இந்தியர்களின் கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவரின் அக்கவுண்டிலும் ரூ.15 லட்சம் போடுவேன்னு மோடி சொன்னதாக நினைவுக்கு வருவதாக பெண்கள் கூறினர்.

Related Stories:

>