×

12 சீட் தருவதாக கூறி அவமானப்படுத்தியதால் அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகல்: விஜயகாந்த் அறிவிப்பு

சென்னை: கூட்டணியில் தொடர்ந்து தொகுதிகளின் எண்ணிக்கையை குறைத்து வந்ததோடு, பேச்சுவார்த்தையின்போது அவமானப்படுத்தியதால் கடும் அதிர்ச்சியடைந்த தேமுதிக, மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துக்குப் பின்னர், அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக நேற்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்து தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். இதனால் தனித்துப் போட்டியிடுவதாகவும், அதிமுகவுக்கு உரிய பாடம் புகட்டப்படும் என்று தேமுதிக அறிவித்துள்ளது. கடந்த மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இடம் பெற்றிருந்தது. தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. கேட்ட தொகுதிகளை தரவில்லை. கூட்டணியில் இடம் பெற்றிருந்த பாமக உள்ளிட்ட கட்சிகள் தேமுதிக தோற்க வேண்டும் என்ற எண்ணத்தில்  தேர்தல் பணியாற்றினர் என்றும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை தேமுதிகவினர் கூறினர். தேர்தலுக்கு பிறகு அதிமுக அரசின் மக்கள் விரோத திட்டங்கள், செயல்பாடுகளுக்கு கண்டனங்களை தெரிவித்து வந்தனர்.

அது மட்டுமல்லாமல் அதிமுக அரசின் நடவடிக்கையை கண்டித்தும் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இதனால், அதிமுக கூட்டணியில் தேமுதிக இருக்கிறதா என்ற கேள்வி எழுந்து வந்தது. இந்த நேரத்தில் சட்டசபை தேர்தல்  நெருங்கி வந்தது. அதிமுகவுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்து தேமுதிக திடீரென மாறியது. அதாவது அதிமுகவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை மீண்டும் எடுத்தது. அதிமுக கூட்டணியில் தான் இன்று வரை தேமுதிக இருக்கிறது. அதிமுக கூட்டணியில் ஜெயலலிதா இருந்தபோது சட்டசபை தேர்தலில் எங்களுக்கு ஒதுக்கிய 41 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று முதல் கட்சியாக கோரிக்கை வைத்தது. இதை கேட்டு அதிர்ந்துபோன அதிமுகவினர் அவர்களை கண்டுக்கொள்ளாமல் மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை ஆரம்பித்தனர். பாமக, பாஜவுடன் பலக்கட்ட பேச்சுவார்த்தையை அதிமுக நடத்தியது. கூட்டணியில் இருக்கின்ற கட்சி என்ற முறையில் பெயரவுக்கு கூட அதிமுக, தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இதனால் தேமுதிக தலைமை கடும் அதிர்ச்சியில் இருந்தது. இது குறித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதாவே ஒரு கட்டத்தில், ‘‘விரைவில் எங்களை அழைத்து பேசவில்லை என்றால் தனித்து போட்டியிடவும் தயங்க மாட்டோம்’’ என எச்சரித்தார்.

தேமுதிகவின் எச்சரிக்கைக்கு கொஞ்சம் கூட அதிமுக பயப்படவில்லை. மாறாக பேச்சுவார்த்தை முடிந்து கூட்டணியில் உள்ள பாமகவுக்கு 23 தொகுதிகளையும், பாஜவுக்கு 20 தொகுதிகளையும் அதிமுக ஒதுக்கியது. அதன் பிறகு நீண்ட நாட்களாக கண்டுகொள்ளாமல் இருந்த தேமுதிகவிடம் அதிமுக பேச்சுவார்த்தையை ஆரம்பித்தது. அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி ஆகியோர்  தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினர். அப்போது,  பாமகவுக்கு 23 தொகுதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு 20 தொகுதிகள் வழங்க வேண்டும் என்று விஜயகாந்த் வலியுறுத்தினார். அதற்கு அமைச்சர்கள், ‘‘விஜயகாந்த் பிரசாரத்துக்கு வந்தால் 14 தொகுதி தருகிறோம். இல்லா விட்டால் 10 தொகுதிகள் என்று கூறினர். இது தேமுதிகவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து முதல்வருடன் தேமுதிகவினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தேமுதிக தரப்பில் 3 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.

ஒரு ராஜ்யசபா சீட் தர வேண்டும்.  விருகம்பாக்கம் தொகுதி உள்ளிட்ட கேட்ட தொகுதிகளை எங்களுக்கு ஒதுக்க வேண்டும். தேர்தல் செலவுக்கு பாமகவுக்கு வழங்கியதை போல எங்களுக்கு  வழங்க வேண்டும் என்றனர். இதற்கு முதல்வர், ராஜ்யசபா எம்பி சீட்டை தேர்தலுக்கு பின்னர் பார்த்து கொள்ளலாம். தேர்தல் செலவு தொடர்பாக அமைச்சர் தங்கமணியிடம் போய் பேசுங்கள் என்று சொல்லி அனுப்பி விட்டார்.  அமைச்சரை போய் தேமுதிகவினர் சந்தித்தபோது கேட்ட அளவுக்கு பணம் வழங்கப்படாது என்று  கை விரித்து விட்டதாக கூறப்படுகிறது. கேட்ட தொகுதிகளும் கிடைக்கவில்லை. கேட்ட பணம் தர மறுக்கிறார்கள் என்று தேமுதிக கடும் அதிருப்தியில் இருந்து வந்தது. எப்படியும் கடைசியில் தேமுதிக அதிமுக கூட்டணிக்கு தான் வர வேண்டும். அதுவரை விட்டு பிடிப்போம் என்று அதிமுகவினர் இருந்து வந்தனர்.

அதன் பிறகு அதிமுக பலமுறை அழைத்தும் தேமுதிகவினர் பேச்சுவார்த்தைக்கு போகவில்லை. இந்த நிலையில் திடீரென தேமுதிக துணை பொது செயலாளர் எல்.கே.சுதீஷ் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ‘‘நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு சின்னம்’’ என்றும் பதிவிட்டிருந்தார். இந்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடைசியாக பேச்சுவார்த்தைக்கு வந்தால் சீட் தருகிறோம். வராவிட்டால் அதிமுகவின் கூட்டணி என்ற கதவுகள் மூடப்படும் என்று அதிமுக தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. எச்சரிக்கையை தொடர்ந்து தேமுதிகவினர் மீண்டும் அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 25 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அவ்வளவு தொகுதிகளை தரமுடியாது. கடைசியாக 13 சீட்கள் வரை தருகிறோம் என்று அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதையாவது வாங்கி கொள்ளலாம் என்ற நினைப்பில் தேமுதிக இருந்தது. திடீரென அந்த தொகுதியும் குறைக்கப்பட்டது. 12 தொகுதிகள் தான் தர முடியும் என்று அதிமுக கூறி விட்டது. அந்த தொகுதிகளையும் குறைக்கலமா என்று அதிமுக நினைத்து வந்தது. இப்படி தொடர்ந்து சீட்டை குறைத்து தேமுதிகவை அதிமுக அவமானப்படுத்தி வருகிறது. இனிமேல் இவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினால் தேமுதிகவுக்கு இருக்கும் மரியாதையும் இல்லாமல் போய்விடும் தேமுதிக நினைத்து இருந்தது. தேமுதிக வழங்கும் தொகுதியை பெறாவிட்டால், மற்ற கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்து விட்டு, வேட்பாளர்களை அறிவிக்கும் முடிவுக்கு அதிமுக வந்து இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில், சட்டமன்ற தேர்தல் தொடர்பாக தேமுதிக மாவட்ட செயலாளர்களின் அவசர ஆலோசனை கூட்டம் சென்னை கோயம்ேபட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று காலை நடந்தது. கட்சியின் தலைவர் விஜயகாந்த் தலைமை வகித்தார். இதில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா, அவைத்தலைவர் இளங்கோவன், கொள்கை பரப்பு செயலாளர் அழகாபுரம் மோகன்ராஜ், துணை செயலாளர்கள் எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி, ஏ.எஸ்.அக்பர், பேராசிரியர் சந்திரா அவர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது, மாவட்ட செயலாளர்கள் சிலர் பாமகவுக்கு இணையாக தொகுதியை அதிமுக தராவிட்டால் தனித்து போட்டியிடலாம் என்று கூறினர்.
மேலும் சிலர் தனித்து போட்டியிட்டால் வெற்றி பெறுவது கடினம். ஏற்கனவே, கடந்த சட்டசபை தேர்தலில் எடுத்த தவறான முடிவால் தான் தேமுதிகவில் ஒருவர் கூட சட்டசபைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, அதிமுக எத்தனை சீட் கொடுத்தாலும் வாங்கி கொண்டு போட்டியிடுவதே சிறந்தது என்றும் கருத்து தெரிவித்தனர். சிலர், பாமகவினர் தேமுதிகவுக்கு வேலை செய்ய மாட்டார்கள். அவர்கள் வாக்குகள் நமக்கு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பது வீண். மேலும், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கூட தேமுதிகவுக்காக பாமக வேலை செய்யவில்லை. எனவே, அதிமுக கூட்டணிக்கு செல்வதாக இருந்தால் அவர்கள் உத்தரவாதம் அளிக்க வேண்டும். அப்படி செய்தால் தேமுதிக கூடுதல் சீட் பெற்று கொண்டு போட்டியிடலாம். இன்னும் சிலர் அதிமுக தொடர்ந்து இவ்வளவு சீட் தருகிறோம்.

அவ்வளவு சீட் தருகிறோம் என்று குழந்தைக்கு மிட்டாய் கொடுப்பது போல ஏமாற்றி வருகிறது. இனிமேல் பேச்சுவார்த்தை நடத்தினால் அவர்கள் தர நினைத்த சீட்டில் இருந்து இன்னும் இறங்க தான் செய்வார்கள். அதுவும் தோல்வியை சந்திக்க நேரிடும் என்று கண்டறியப்பட்ட தொகுதிகளை தான் தருவார்கள். எனவே, அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும். அதிமுகவுக்கு சரியான பாடம் புகட்டும் வகையில் தேமுதிக தனித்து போட்டியிட வேண்டும் அல்லது கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டும் என்றும் அப்போது தங்கள் ஆதங்கத்தை கட்சியினர் வெளிப்படுத்தினர். மேலும் நாம் எடுக்கும் முடிவு வர உள்ள தேர்தலில் அதிமுகவுக்கு பாடம் புகட்டும் வகையில் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர். இன்னும் சிலர் கூட்டணியில் பாஜக உள்ளது. பாஜக இடம் பெற்றிருப்பதால் சிறுபான்மையினர் ஓட்டு நமக்கு கிடைக்க வாய்ப்பில்லை.

தினமும் ஏறும் பெட்ேரால், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வால் மக்கள் கொதித்து போய் உள்ளனர். இது தேர்தலில் நமக்கு எதிராக தான் திரும்பும். எனவே, பாஜக இடம் பெற்றுள்ள அணியில் சேர கூடாது என்றும் வலியுறுத்தினர். தொண்டர்களின் கருத்துக்களை விஜயகாந்த் கேட்டார். அதன் பிறகு தேமுதிக தலைவர் விஜயகாந்த் அதிரடி முடிவை எடுத்தார். இது தொடர்பாக விஜயகாந்த் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுகவுடன் தொடர்ந்து மூன்று கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. தேமுதிக சார்பில் கேட்கப்பட்ட தொகுதி எண்ணிக்கையும், தொகுதிகளையும் ஒதுக்க மறுத்து உடன்பாடு ஏற்படாத காரணத்தினால், மாவட்ட செயலாளர்களின் ஆலோசனை கூட்டத்தில் ஏற்பட்ட ஒற்றை கருத்துகளின் அடிப்படையில் இன்றிலிருந்து(நேற்று) அதிமுக, பாஜக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. அதிமுக, பாஜக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகல் என்ற அறிவிப்பு வந்தவுடன், கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் திரண்டிருந்த தேமுதிக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் தங்கள் வரவேற்பை தெரிவித்தனர். சரியான முடிவை தேமுதிக எடுத்துள்ளது என்றும் அவர்கள் கருத்து தெரிவித்தனர். இந்தநிலையில் நடிகர் கமலின் மக்கள் நீதி மையம் கட்சியின் துணை தலைவர் பொன்ராஜ், தேமுதிக தங்கள் கூட்டணிக்கு வரவேண்டும் என்று அழைப்பு விடுத்தார். இதற்கிடையில் அமமுகவுக்கவுடன் கூட்டணி வைக்கலாம் என்றும் பேசப்பட்டது. ஆனால், தமிழகம் முழுவதும் 234 தொகுதியிலும் தனித்துப் போட்டியிடும், மக்கள் நீதிமையத்துடன் கூட்டணி இல்லை என்று விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் நேற்று அறிவித்துள்ளார்.கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியுள்ளது அதிமுகவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.


Tags : Temujin ,AIADMK ,Vijayakanth , Temujin quits AIADMK for insulting 12 seats: Vijayakanth announces
× RELATED தேமுதிக அலுவலகத்தில் உள்ள விஜயகாந்த்...