×

ஐஎஸ்எல் கால்பந்து இறுதிப்போட்டிக்கு மும்பை அணி தகுதி...பெனால்டி ஷூட் மூலம் கோவாவை வீழ்த்தியது

கோவா:ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் 2வது அரையிறுதி ஆட்டம் நேற்று நடந்தது. இதில் மும்பை சிட்டி அணியும் கோவா எப்.சி. அணியும் மோதின. எப்பொழுதும் போல் மும்பை அணி ஆட்டத்தில் நிதானம் காட்டியது, கோவா அணியை  தாக்குதல் செய்ய அழைத்தது. ஆனால் அந்த அழைப்பு மும்பை அணி விரிக்கும் வலை என்பதைப் புரிந்து கொண்ட கோவா அணி அதிக அளவில் தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபடவில்லை. இதனால் முதல் பாதி 0-0 என்ற கோல் கணக்கில்  முடிவடைந்தது.

கவுண்டர் அட்டாக் செய்ய வேண்டும் என்ற முனைப்பில் மும்பை அணி கடுமையான தடுப்பு ஆட்டத்தில் ஈடுபட்டது. கோவா அணியின் தாக்குதல் ஆட்டக்காரர்களான ரொமாரியோ, ஆர்ட்டிஸ், காமா என பலர் கோலை நோக்கி அடிக்க பந்துகள்  அனைத்தும் தடுக்கப்பட்டது. மும்பை அணிக்கு ஆட்டத்தின் இறுதிக் கட்டங்களில் 2 அருமையான வாய்ப்புகள் கிடைத்தன ஆனால் ஜாஹு, லெ ஃபான்ட்ரே ஆகியோர் வாய்ப்பை கோலாக மாற்ற தவறினர். ஆட்டம் இறுதியாக 0-0 என்ற கோல்  கணக்கில் டிரா ஆனது. இதனால் கூடுதலாக 30 நிமிடங்கள் கொடுக்கப்பட்டது.

 30 நிமிடங்கள் கூடுதல் நேரத்திற்கு பின்னரும் ஆட்டம் 0-0 என்ற கோல் கணக்கில் முடிவடைந்தது. இதனால் பெனால்டி ஷூட்- அவுட்டிற்கு ஆட்டம் சென்றது. கோவா  அணியின் பெடியா, ஃபர்னான்டஸ், டொனாக்கி ஆகியோர் கோல் அடிக்க தவறினர்.
மறுமுனையில் மும்பை அணியின் சன்ட்டானா, பூமஸ், ஜாஹு ஆகியோர் தவறவிட, இரு அணியும் தங்களுக்கு வழங்கப்பட்ட 5 பெனால்டி வாய்ப்பில் இரண்டு கோல் மட்டுமே பதிவு செய்தனர். இதனால் `சடன் டெத்’ என்று அழைக்கப்படும்  கட்டத்திற்கு பெனால்டி ஷூட்- அவுட் நகர்ந்தது. அதன்படி முதலில் தவறவிடும் அணி வெளியேற்றப்படும். எனவே இரு அணியினரும் மிக கவனமாக அனைத்தையும் கோல் அடித்து வந்தனர்.

`சடன் டெத்’ கட்டத்தில் இரு அணியினரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட முதல் மூன்று வாய்ப்புகளை கோலாக மாற்றினர், கோவா அணி சார்பாக நான்காவது பெனால்டியை எடுக்க முன்வந்த மார்டின்ஸ் அதைத் தவறவிட்டார்.எனவே மும்பை அணிக்கு கொடுக்கப்பட்ட நான்காவது பெனால்டியை கோலாக மாற்றும் பட்சத்தில் மும்பை அணி இறுதிச் சுற்றுக்கு முன்னேறி விடும். இதை எடுக்க முன்வந்த மும்பை அணியின் போர்ஜஸ் கோலாக மாற்றி மும்பை  அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார்.
இந்த வெற்றியின் மூலம் வருகின்ற 13ஆம் தேதி நடக்கவிருக்கும் இறுதிப்போட்டிக்கு மும்பை அணி முன்னேறியுள்ளது. இறுதிப் போட்டியில் நாளை நடைபெறவிருக்கும் அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் மும்பை அணி  மோதும்.



Tags : Mumbai team ,ISL football ,Gowa , Mumbai qualifies for ISL final
× RELATED ஐஎஸ்எல் கால்பந்து தொடர்: கோவா-மும்பை இன்று அரையிறுதியில் மோதல்