×

வார்த்தைகளை அளந்து பேசுங்கள்.. நாகரீகமாக நடந்து கொள்ளுங்கள்.. தேமுதிகவை எச்சரித்த அமைச்சர் ஜெயக்குமார்!!

சென்னை : அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேறுவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இதைத் தொடர்ந்து பண்ருட்டியில் பேசிய விஜய பிரபாகரன், யாருக்கும் சளைத்தவர்கள் தேமுதிகவினர் அல்ல. அதிமுக தலைமை சரியில்லை. எடப்பாடி தொகுதியிலேயே அதிமுக மண்ணைக் கவ்வும். அதிமுகவுக்கு இனி இறங்கு முகம் தான் என கடுமையாக விமர்சித்திருந்தார். கட்சியில் இருந்து வெளியேறிய உடனேயே விஜய பிரபாகரன் இவ்வாறு பேசியது, அதிமுக தொண்டர்களை ஆத்திரமடையச் செய்துள்ளது.

இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவில் இருந்து தேமுதிக விலகியது அதிமுகவுக்கு பாதிப்பில்லை. பாதிப்புக்கு தேமுதிகவுக்கு தான். தேமுதிக எடுத்த முடிவு துரதிர்ஷ்டவசமானது. தேமுதிகவுடன் கூட்டணி தர்மத்தை கடைபிடித்தோம். நன்றி மறந்து தேமுதிகவினர் பேசக் கூடாது. தேமுதிகவுக்கு அங்கீகாரம் கிடைக்கக் செய்தது அதிமுக தான். வார்த்தைகளை அளந்து பேசுங்கள். ஆத்திரத்தில் வார்த்தைகளை கொட்டக் கூடாது. பிடிக்கவில்லை என்றால் நண்பர்கள் போல் கைகுலுக்கி செல்ல வேண்டும்.

தேமுதிகவினர் பேசுவதை விட என்னாலும் வெளுத்துகட்ட முடியும்.கூட்டணி தர்மம் என்ற அடிப்படையில் மவுனமாக இருக்கிறோம். அரசியல் ரீதியான விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளலாம். அரசியலுக்கு அப்பாற்பட்டு விமர்சனம் செய்யக் கூடாது. நாகரிகமாக நடந்து கொள்ள வேண்டும். இல்லையெனில் அதற்கு உரிய பதிலடியை அதிமுக கொடுக்கும். தேமுதிக எதிர்பார்ப்பு பெரிய அளவில் இருந்தால் நாங்கள் என்ன செய்ய முடியும். தேமுதிகவின் பலத்திற்கு ஏற்ப தொகுதிகளை வழங்குவதாக தெரிவித்து இருந்தோம். ஒவ்வொரு கட்சியின் பலத்துக்கு ஏற்ப அதிமுக கூட்டணியில் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது,என்றார்.

இதையடுத்து அதிமுகவை பிடிக்கவில்லை என்பதற்காக சேற்றை வாரி இறைப்பதா? என்று கேள்வி எழுப்பிய அமைச்சர் ஜெயக்குமார், கீழ்த்தரமான அரசியலை தேமுதிக முன்னெடுத்தால் அதிமுக பதிலடி கொடுக்கும் என்றும் எடப்பாடி மட்டுமல்ல 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்று அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்றும் ஆவேசமாக பேசினார்.

Tags : Minister ,Jayakumar ,Temutika , தேமுதிக
× RELATED வரலாறு தெரியாமல் அண்ணாமலை பேசுகிறார்:...