×

குடமுருட்டி ஆற்றில் புதிதாக தடுப்பணை கட்ட வேண்டும்-விவசாயிகள் கோரிக்கை

*குரலற்றவர்களின் குரல்

கும்பகோணம் : கும்பகோணம் அடுத்த தில்லையம்பூர் தலைப்பு வாய்க்கால் அருகே குடமுருட்டி ஆற்றின் கடந்த சில மாதங்களுக்கு முன் உடைந்த தடுப்பணையை அகற்றிவிட்டு உரிய நிதி ஒதுக்கி புதிதாக தடுப்பணை கட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டெல்டா மாவட்டங்களில் அரசு அனுமதியின்றி இரவு, பகலாக மணல்கள் அல்லப்பட்டதால் ஆறுகள் அனைத்தும் பள்ளமான நிலையில் தலைப்பு வாய்க்கால்கள் மேடானது. அதன் காரணமாக ஆறுகளில் பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் வாய்க்கால்களில் வருவதில்லை. அதனை அடுத்து ஆறுகளில் தேவையான இடங்களில் அரசு தடுப்பணைகளை அமைத்து வருகின்றது. மணல் கொள்ளைக்கு காவிரியின் கிளை ஆறான குடமுருட்டி ஆறு விதிவிலக்கு அல்ல. மேலும் ஆறுகளின் நீரோட்டத்தை மாற்றி அமைக்கும் விதமாக இருந்த மண் திட்டுகள் அனைத்தும் மணல் கொள்ளையர்களால் அப்புறப்படுத்தப்பட்டது.

இதன் காரணமாக எவ்வித தடுப்பும் இன்றி பாசனம் பெற்று வந்த வாய்க்கால்களில் தற்போது தடுப்பணைகள் அமைத்தால்தான் பாசன வாய்க்கால்களில் தண்ணீர் செல்லும் என்ற நிலை ஏற்பட்டது.குடமுருட்டி ஆற்றிலிருந்து தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தாலுகா தில்லையம்பூர் வாய்க்கால், திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகாவில் பூண்டி வாய்க்கால் மற்றும் சந்தன வாய்க்கால் மூலம் பூண்டி, சந்திரசேகரபுரம், விருப்பாச்சிபுரம், ஆதிச்சமங்கலம், வலங்கைமான், வளையுமாபுறம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுமார் ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசனம் பெறக்கூடிய வகையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் குடமுருட்டி ஆற்றில் சந்திரசேகரபுரம் பகுதியில் தடுப்பணை அமைக்கப்பட்டிருந்தது.

பொதுப்பணித்துறையின் மூலம் அமைக்கப்பட்டிருந்த இந்த தடுப்பணை உரிய பராமரிப்பு இல்லாததாலும் உரிய தொழில்நுட்பத்துடன் கட்டப்படாததாலும் பல லட்ச ரூபாய் செலவு செய்து கட்டப்பட்ட தடுப்பணை உரிய பலனளிக்காமல் ஒருசில ஆண்டுகளிலேயே பழுதடைந்தது.கடந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்கு திறக்கப்பட்ட போது குடமுருட்டி ஆற்றில் ஆர்ப்பரித்து வந்த தண்ணீர் தடுப்பணையை உடைத்தது.

இந்நிலையில் டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவதற்கு முன்னதாக உரிய நிதியினை ஒதுக்கீடு செய்து பழுதடைந்த பழைய தடுப்பணையை அப்புறப்படுத்தி விட்டு புதிதாக தடுப்பணை கட்டித்தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பழுதடைந்த தடுப்பணையை பராமரிப்பு என்ற பெயரில் பல ஆயிரம் பொதுப்பணித்துறை முறைகேடு செய்வதை தவிர்த்து விட்டு உரிய நிதியை ஒதுக்கி புதிதாக தடுப்பணை தரமாக அமைத்து தர வேண்டும் என்பதே அனைத்து விவசாயிகளின் விருப்பமாகும்.

Tags : Kudamurutty river , Kumbakonam: Kumbakonam next to Thillaiyampur head canal near Kudamurutty river broke last few months ago
× RELATED குடமுருட்டி ஆற்றங்கரையில் ஈமக்கிரியை...