திருப்பத்தூர் அருகே பல கோடி மோசடி எதிரொலி தனியார் இன்சூரன்ஸ் பங்குதாரர்களுக்கு தர்ம அடி-பொதுமக்கள் சாலை மறியலால் பரபரப்பு

திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம், சின்ன குளம் மாரியம்மன் கோயில் பகுதியில்  கிரீன் பிஎல் எனும் தனியார் இன்சூரன்ஸ் கம்பெனியை சீரங்கபட்டி பகுதியை சேர்ந்த தண்டபாணியின் மகன் நடராஜன்(42) மற்றும் பங்குதாரர்களாக 7 பேர் கொண்ட நபர்கள்  சில வருடத்திற்கு முன்பு ஆரம்பித்து நடத்தி வந்துள்ளனர்.

திருப்பத்தூர், அரூர், தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு சுற்றுவட்டார கிராமத்திலுள்ள  பொதுமக்களிடம் ₹500 முதல் ₹10 ஆயிரம் வரை அவரவர் தகுதிக்கு ஏற்ப மாதந்தோறும் பணத் தொகையை கட்டி வந்தால் ஐந்து வருடம் கழித்து இரட்டிப்பாக கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறி பணத்தை வசூலித்து வந்துள்னர்.

தங்களுடைய பணம் இரட்டிப்பாகும் என்கிற நம்பிக்கையில் வயிற்றை கட்டி வாயைக்கட்டி பணத்தை இந்த கம்பெனியில் செலுத்தி வந்தனர்.

ஆனால், 5 வருடமாகியும் சுமார் ₹5 கோடி வரையிலான பணத்தை அவர்களுக்கு திருப்பி தராததால் ஏற்கனவே அனைவரும் ஒன்றிணைந்து 2020ம் வருடம் இன்சூரன்ஸ் நிர்வாக இயக்குனர் நடராஜன் மற்றும் உதவி இயக்குனர் பாபு மீது பணம் கட்டி ஏமாந்தவர்கள் பொருளாதார குற்றப்பிரிவு காவல் நிலைத்தில் புகார் அளித்துள்ளனர்.

அப்போது நடராஜன்  சிலருக்கு அவரவர் பணத்திற்கு ஏற்ப தொகையில் காசோலையை கொடுத்திருக்கிறார். அந்தக் காசோலையை எடுத்து கொண்டு வங்கிக்குச் சென்ற வாடிக்கையாளர்கள் வங்கி அதிகாரிகளிடம் காசோலையை  கொடுத்தபோது சம்பந்தப்பட்ட வங்கி கணக்கில் அவ்வளவு தொகை இல்லை என திருப்பி அனுப்பி உள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்கள்  பலமுறை நடராஜனிடம் சென்று  தங்களுடைய பணத்தை கேட்டு முறையிட்டனர். இந்நிலையில் நீண்ட நாளாக ஏமாற்றிக் கொண்டிருந்த நடராஜனை சுமார் 100க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் ஒன்றிணைந்து திருப்பத்தூர் அருகே வெங்களாபுரம் பகுதியில் உள்ள நடராஜனுக்கு சொந்தமான ஊதுபத்தி கம்பெனிக்கு சென்று முற்றுகையிட்டனர்.

ஆனால் நடராஜன் அங்கு இல்லை என்பதை அறிந்த பொதுமக்கள் ஊதுபத்தி கம்பெனி எதிரே உள்ள ஆலங்காயம் -வெங்களாபுரம் சாலையில் நேற்று திடீர் மறியலில்  ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த திருப்பத்தூர் தாலுகா போலீசார், பணம் கொடுத்து ஏமாந்த பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தனர்.

அப்போது, திடீரென  அந்த இடத்திற்கு இருசக்கர வாகனத்தில் வந்த நிதிநிறுவன இயக்குனர் நடராஜன் மற்றும் உதவி இயக்குனர் பாபு இருவரையும் பொதுமக்கள் கண்டதும் கண்ணிமைக்கும் நேரத்தில் நடராஜனை தாக்க ஆரம்பித்தனர்.

சுதாரித்துக்கொண்ட நடராஜன் தனது இருசக்கர வாகனத்தில் மின்னல் வேகத்தில் பறந்து விட்டார். ஆனால் உதவி இயக்குனர் பாபு வசமாக சிக்கிக் கொண்டார். இதனிடையே வாடிக்கையாளர்கள் பாபுவை சரமாரியாக தாக்கத் தொடங்கினர். அப்போது, திருப்பத்தூர் தாலுகா இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவி, வாடிக்கையாளர்களிடம் சமாதானம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி பாபுவை காவல் நிலையம் கொண்டு சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து விசாரணை செய்ததில், இந்த நிதிநிறுவனத்தினர் பணத்தை பெற்றுக்கொண்டு பல்வேறு இடங்களில் பல ஏக்கர் நிலம் வாங்கி உள்ளனர். அதனை தற்போது விற்க முடியாத காரணத்தினால் பொதுமக்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கு பணத்தை திருப்பிச் செலுத்த முடியவில்லை. அந்த நிலங்கள் அனைத்தும் விற்கப்பட்ட உடன் அனைத்து தரப்பு வாடிக்கையாளர்களுக்கும் பணத்தை திருப்பிக் கொடுக்கப்படும் என்று போலீசில் நிதிநிறுவன இயக்குனர் நடராஜன், பங்குதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>