ஜோலார்பேட்டை அருகே ரயில்வே சுரங்கப்பாதையில் திகில் பயணம்-மின்விளக்குகள் அமைக்க கோரிக்கை

ஜோலார்பேட்டை : ஜோலார்பேட்டை அருகே ரயில்வே சுரங்க பாதைக்கு மின்விளக்கு வசதி அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஜோலார்பேட்டை அடுத்த கட்டேரி ஊராட்சி லாரிஷெட் பகுதியில் திருப்பத்தூர்- வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலையிலிருந்து கிராமத்திற்கு செல்லும் ரயில்வே சுரங்கப்பாதை உள்ளது. மேலும், கட்டேரி, தாமலேரிமுத்தூர், அம்மையப்பன் நகர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு இந்த ரயில்வே சுரங்கப்பாதை மூலமாக பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சென்று வருகின்றனர்.

இந்நிலையில் இந்த சுரங்கப்பாதையானது இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்கள் பெரும் அச்சத்துடன் சென்று வருகின்றனர். பகல் நேரங்களில் சாலையில் நடந்து செல்லும் போது மர்ம நபர்கள் கழுத்தில் இருக்கும் நகைகளை பறித்து தப்பித்து செல்கின்றனர்.

இந்நிலையில் இரவு நேரங்களில் இந்த சுரங்க பாதையை கடக்க பதற்றத்துடன் சென்று வரும் நிலை உருவாகியுள்ளது. எனவே பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள் என கிராம பகுதிக்கு செல்ல துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு சுரங்கப் பாதைக்குள் மின் விளக்கு வசதி ஏற்படுத்தி திகில் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பக்கிரிதக்கா அருகே உள்ள ரயில்வே தரை மேம்பாலத்திற்கு இருள் சூழ்ந்து இருந்த பகுதியை சுட்டிக்காட்டி தினகரனில் செய்தி வெளியானதை அடுத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு அந்தப் பகுதியில் மின் விளக்கு வசதி ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

More
>