காங்கிரஸ்- திமுக பேச்சு நிறைவு தொகுதி பங்கீடு ஓரிரு நாளில் முடிவாகும்: நாராயணசாமி தகவல்

புதுச்சேரி: புதுச்சேரியில் காங்கிரஸ், திமுக இடையே தொகுதி பங்கீடு குறித்து நேற்று 2ம்கட்ட பேச்சுவார்த்தை காங்கிரஸ் கட்சி  அலுவலகத்தில் நடந்தது. இதில்  முன்னாள்  முதல்வர் நாராயணசாமி, மாநில காங்கிரஸ் தலைவர் ஏவி  சுப்பிரமணியன்,  வைத்திலிங்கம் எம்பி, முன்னாள் அமைச்சர் கந்தசாமி ஆகியோர் பங்கேற்றனர்.திமுக சார்பில் மாநில அமைப்பாளர்கள் சிவா எம்எல்ஏ மற்றும் சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.  இதில்  15 தொகுதிகளை   திமுகவுக்கு ஒதுக்க வலியுறுத்தப்பட்டதாக தெரிகிறது. ஆனால் மீதமுள்ள 15  தொகுதிகளில் காங்கிரஸ் மட்டுமின்றி கம்யூனிஸ்ட், வி.சிறுத்தை உள்ளிட்ட  கட்சிகளுக்கு பிரித்துக் கொள்ள வேண்டி இருப்பதால் 12 தொகுதிகள் வரை  திமுகவுக்கு  ஒதுக்க காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டதாக தெரிகிறது.

இதையடுத்து இருகட்சிகளின் தலைமையிடம் பேசி ஓரிரு நாளில் இறுதி  முடிவெடுப்பதென தீர்மானிக்கப்பட்டது. இதனால் காங்கிரஸ், திமுக கூட்டணி  ஓரிரு நாளில் தொகுதி பங்கீடு நிறைவடையும் என   எதிர்பார்க்கப்படுகிறது.

கூட்டத்துக்கு பின் நாராயணசாமி கூறுகையில், காங்.- திமுக இடையே தொகுதி  பங்கீடு பேச்சுவார்த்தை 45 மணி  நேரம் நடந்தது. இதில் கூட்டணி கட்சிகள் எப்படி இணைந்து செயல்படுவதென ஆலோசித்தோம்.  திமுகவுக்கு எத்தனை  தொகுதிகள் ஒதுக்கப்பட  வேண்டுமென திமுக தலைவர் ஸ்டாலின் கூறிய கருத்துகளை எங்களிடம்  பகிர்ந்து கொண்டனர். காங்கிரஸ் பொதுச்செயலாளர் தினேஷ் குண்டுராவ்  காங்கிரசுக்கு எத்தனை இடம், திமுக மற்றும் கூட்டணி  கட்சிகளுக்கு எத்தனை  இடம் என்ற கருத்தை எங்களிடம் கூறியிருந்தார். இதனை பேச்சு  வார்த்தையில் பரிமாறிக் கொண்டோம். ஓரிரு நாளில் தொகுதி பங்கீடு  குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றார்.

Related Stories:

>