வன்னியர் உள் ஒதுக்கீடு விவகாரம்: அதிமுகவிற்கு ஓட்டுபோட மாட்டோம்: பால், விளக்கு மீது சத்தியம் செய்து சீர்மரபினர் போராட்டம்தியம் செய்து சீர்மரபினர் போராட்டம்

சின்னமனூர்: அதிமுகவிற்கு ஓட்டு போட மாட்டோம் என சின்னமனூரில் சீர்மரபினர் நலச்சங்கத்தினர் பால், விளக்கு மீது சத்தியம் செய்து போராட்டம் நடத்தினர். தென்மாவட்டங்களில் உள்ள 68 சமுதாயங்களை உள்ளடக்கிய சீர்மரபினர்  நலச்சங்கத்தினர், தங்களுக்கு டிஎன்டி ஒற்றைச் சான்றிதழ் வழங்க வேண்டும் என தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் இக்கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. மேலும் இச்சமுதாயத்தினர் இடம் பெற்றுள்ள எம்பிசி பிரிவில்  வன்னியர்களுக்கு மட்டும் 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதை கண்டித்து சின்னமனூர் அருகே அப்பிபட்டியில் சீர்மரபினர் நலச்சங்கத்தினர் நேற்று போராட்டம் நடத்தினர். அப்போது அதிமுகவிற்கு ஓட்டு போட மாட்டோம்  எனக்கூறி, சமுதாய மக்களுடன் சேர்ந்து பால், அகல்விளக்கு மீது சத்தியம் செய்தனர். போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கூறுகையில், ‘‘சீர்மரபினரின் கோரிக்கைகளை புறந்தள்ளிவிட்டு, தேர்தல் அரசியலுக்காக சீர்மரபினர் மக்களின்  இடஒதுக்கீட்டை மாற்று சமூகத்திற்கு அதிமுக அரசு தாரை வார்த்துள்ளது. எனவே வரும் தேர்தலில் அதிமுகவை படுதோல்வி அடையச் செய்வோம்’’ என்றனர்.

தென்காசி: தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே மேலப்பாவூர் கிராமத்தைச் சேர்ந்த முக்குலத்தோர் சமுதாய மக்கள் நேற்று முக்கிய வீதிகளில் கருப்பு கொடி ஏற்றினர். பின்னர் அங்குள்ள முப்புடாதி அம்மன் கோயில் திடலில் கருப்பு  கொடியுடன் பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து முக்குலத்தோரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் புறக்கணிப்பதாகக் கூறி கண்டன கோஷமிட்டனர். மேலும்  வரும் ஏப். 6ல் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் தெரிவித்தனர்.இதே போல் சிவகிரி அருகே நாராயணபுரத்தில் கருப்பு கொடி ஏந்தி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சாத்தங்குடி: ராமநாதபுரம்  மாவட்டம், கடலாடி அருகே சாத்தங்குடியில் சுற்றுவட்டார கிராம மக்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.

இதில் சாத்தங்குடி, வெள்ளாங்குளம், பள்ளனேந்தல், பாடுவனேந்தல், கண்டேன்கனி, ஆலங்குளம் உள்ளிட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனர். இதில் வன்னியருக்கு உள் இடஒதுக்கீடு சட்டத்தை திரும்ப பெற வேண்டும். நீதிபதி  தலைமையிலான ஆணையத்தின்படி சாதி வாரியாக புள்ளி விபரங்களை சேகரித்து சீர்மரபினருக்கான இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும். இதனை வலியுறுத்தி ஏப். 6ம் தேதி நடக்க உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க வேண்டும்  என முடிவு செய்யப்பட்டது. இதன்படி சாத்தங்குடி, வெள்ளாங்குளம் கிராம மக்கள் சார்பாக கடலாடி பகுதியில் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். மேலும் சமூக வலைதளங்களில் கோரிக்கைகளை வலியுறுத்தி பதிவிட்டும் வருகின்றனர்.  ராமநாதபுரம் அருகே உள்ள ஆர்.எஸ்.மடை கிராமத்தில் உள்ள தெருக்கள், வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றினர்.

Related Stories: