மகளிர் தினத்தை முன்னிட்டு மாமியாருக்கு மருமகள் ஊட்டிவிட்டால் ஈரோடு ஓட்டலில் பில் முற்றிலும் ரத்து

ஈரோடு: உலக மகளிர் தின விழாவையொட்டி, ஈரோடு பிரப் சாலையில் உள்ள ஓட்டல் ஒன்றில் நேற்று மாமியார் மருமகள் ஒன்றாக ஓட்டலுக்கு வந்து இருவரும் ஒருவருக்கொருவர் உணவு ஊட்டிவிட்டால் சாப்பாடு பில் முற்றிலும் இலவசம்  என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று ரயில்வே பெண் ஊழியர் ஒருவர் தனது மருமகளுடன் வந்து இருவரும் ஒருவருக்கொருவர் உணவு ஊட்டி அன்பை பரிமாறிக் கொண்டனர். இது குறித்து ஓட்டல் உரிமையாளர் பூபதி கூறியதாவது: மகளிர்  தினம் கொண்டாட்டம் ஆண்டுதோறும் எங்களது ஓட்டலில் நடைபெறும். வழக்கமாக மாமியார் மருமகள் என்றாலே சண்டை சச்சரவுகள் என்பது தெரிந்த ஒன்றுதான். இந்தாண்டு மகளிர் தினத்தையொட்டி மாமியார் மருமகள் இருவரும் மாறி  மாறி உணவு ஊட்டிவிட்டால் அவர்கள் சாப்பிடும் உணவுக்கான பில் முற்றிலும் இலவசம் என்று அறிவித்திருந்தோம்.  கடந்த 6ம் தேதி முதல் இது நடைபெற்று வருகிறது. வருகிற 14ம் தேதி வரை இதில் மாமியார் மருமகள் கலந்து  கொள்ளலாம். மிச்சம் வைக்காமல் முழு உணவையும் ஊட்டிவிட வேண்டும். மாமியார் மருமகள் இருவரும் ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறிக்கொள்வதற்காக மட்டுமே இந்த ஆபர் வழங்கி உள்ளோம் என்றார்.

Related Stories:

>