×

சொன்னாரே! செஞ்சாரா ?....5 ஆண்டில் குடும்ப வளத்தை மட்டுமே பெருக்கி கொண்ட எம்எல்ஏ: பட்டுக்கோட்டை தொகுதி எம்எல்ஏ சி.வி.சேகர்

தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, கும்பகோணம், பாபநாசம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஒரத்தநாடு, திருவிடைமருதுார், திருவையாறு ஆகிய 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. பட்டுக்கோட்டை தொகுதியை பொருத்தவரை மிக முக்கியமான  வர்த்தக நகரமாக இருந்து வருகிறது. பிரதான தொழிலாக தென்னை சாகுபடி உள்ளது. 2016 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று அதிமுகவை சேர்ந்த வழக்கறிஞர் சி.வி.சேகர் உள்ளார். இவரை எதிர்த்து திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ்  கட்சி மாநில பொதுச் செயலாளர் கே.மகேந்திரன் போட்டியிட்டார். பட்டுக்கோட்டை தொகுதியில் முக்கியமான பிரச்னையாக சாக்கடை வசதி இல்லை. போக்குவரத்து நெரிசல் மிக்க பகுதியாக இருந்து வருகிறது. இந்த சாக்கடை பிரச்னைக்கு  பாதாள சாக்கடை திட்டமும், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த தஞ்சாவூர் சாலையையும், முத்துப்பேட்டை சாலையையும் இணைக்கும் அரை சுற்று வட்டப்பாதையை முழு சுற்று வட்டப்பாதையாக மாற்றும் திட்டமும் நிறைவேற்றப்படும்  என்று சிட்டிங் எம்எல்ஏ கொடுத்த வாக்குறுதிகள் 5 வருடங்கள் முடிவடையும் நிலையில் இன்னும் நிறைவேற்றப்பாடல் அப்படியே உள்ளது.

மக்களின் தீர்க்கப்படாத பிரச்னையாக பட்டுக்கோட்டை பேருந்து நிலையம் மிகவும் நெருக்கடியோடு இன்று வரை காணப்படுகிறது. பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தை விரிவுபடுத்தப்பட்ட பேருந்து நிலையமாக மாற்றப்படும் என சிட்டிங்  எம்.எல்.ஏ. கொடுத்த வாக்குறுதியும் இன்றளவிலும் நிறைவேற்றப்படாமல் உள்ளது. அதேபோல் பட்டுக்கோட்டை தொகுதியை பொருத்தவரையிலும் அதிராம்பட்டினம்  பேரூராட்சியில் தீயணைப்பு நிலையம், அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதி  முழுவதும் குடிநீர் பிரச்னைக்கு ஒரு நிரந்தர தீர்வு எட்ட வேண்டும் என்பதும் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கை. இவை நிறைவேற்றப்படவில்லை. மொத்தத்தில் பட்டுக்கோட்டை தொகுதியில் ஆளும் அதிமுக எம்.எல்.ஏவாக இருந்தும், 5  வருடத்தில் எந்தவிதமான  வளர்ச்சியும் அடையவில்லை. வெறும் நலத்திட்ட உதவிகள், அவருடைய தொகுதி நிதி ஒதுக்கீடு மட்டுமே சிட்டிங் எம்எல்ஏ செய்து முடித்துள்ளார் என்பதும் தொகுதி மக்களின் மிகுந்த வேதனையாக உள்ளது.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். அதுபோல் கடந்த 5 ஆண்டுகளாக  சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கே செல்லாமல் அந்த அலுவலகம் புதர் மண்டி,  செடி கொடிகள் படர்ந்து உள்ளன. பூட்டி இருக்கக்கூடிய பூட்டே  துருப்பிடிக்கும் அளவிற்கு இருக்கிறது என்றால் அது பட்டுக்கோட்டை சட்டமன்ற  உறுப்பினர் அலுவலகம்தான். இது ஒன்றே போதும். அவர் எந்த அளவிற்கு தொகுதி மக்களுக்கு  செய்துள்ளார் என்பதை தெரிந்து கொள்ளலாம். மொத்தத்தில்  இந்த பட்டுக்கோட்டை  தொகுதி மக்கள் நலனுக்காக, எந்த ஒரு தனித்துவமான திட்டத்தையும்  கொண்டுவரவில்லை. இதற்கு மாறாக தன் வளத்தை மட்டும், தன் குடும்ப  வளத்தை மட்டுமே பெருக்கிக் கொண்டார் என்பது மறுக்க முடியாத  உண்மை என்கின்றனர் தொகுதி மக்கள்.

கஜா புயலின் நிவாரண உதவியில் பயனடைந்தது அதிமுககாரர்கள்தான்
காங்கிரஸ் கட்சி மாநில பொதுச்செயலாளர் கே.மகேந்திரன் கூறுகையில், பாலம் போட்டதையும், ரோடு போட்டதையும் சாதனையாக சொல்வது நகைப்பூட்டுவதாக உள்ளது. ஆளும்கட்சி எம்எல்ஏவாக இருந்தாலும் சரி, அல்லது எதிர்க்கட்சி  எம்.எல்.ஏவாக இருந்தாலும் சரி அந்தந்த தொகுதிகளில் சாலை, குடிநீர், மின்சாரம், பாலங்கள் கட்டுவது என அடிப்படை வசதிகளை செய்வது வழக்கமாக  நடைபெறும் ஒன்றுதான். இதை சாதனையாக சொல்வது வேதனையாக உள்ளது. கடந்த 5  ஆண்டுகளில பட்டுக்கோட்டை தொகுதி மக்களுக்கு அவர் கொடுத்த எந்த ஒரு வாக்குறுதியையும் இதுவரை நிறைவேற்றவில்லை என்பதே உண்மை. மிகவும் நெருக்கடியோடு உள்ள பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தை வேறு இடத்திற்கு  மாற்றி தருவதாக வாக்குறுதி கொடுத்தார். இந்த  நிமிடம்வரை அதையும் செய்யவில்லை. கஜா புயலின் போது பாதிக்கப்பட்ட பயனாளிகளுக்கு, ₹183 கோடி நிவாரண உதவி செய்ததாக கூறுகிறார் எம்எல்ஏ, ஆனால், அதில் பயனடைந்த  முக்கால்வாசி பேர் அதிமுககாரர்கள்தான் என்றார்.

தொகுதிகளில் போடப்படாத சாலைகளும் போடப்பட்டுள்ளது
எம்.எல்.ஏ சி.வி.சேகர் கூறும்போது, பட்டுக்கோட்டை புறநகர் பகுதியில்  முழுவட்ட சுற்றுச்சாலை அமைக்க அனுமதி வாங்கி ஆய்வு நடந்து வருகிறது.  அதிராம்பட்டினம், கரையூர் தெரு, ஏரிப்புறக்கரை போன்ற பகுதிகளுக்கு மீன்பிடி  இறங்கு  தளம் அமைக்க 4 கோடியும், ராஜாமடம், கீழத்தோட்டம் மீன்பிடி  இறங்கு தளம் அமைக்க 8 கோடிக்கும் அனுமதி பெறப்பட்டுள்ளது. கஜா புயலில்  பாதிக்கப்பட்டபோது தமிழக முதல்வரை அழைத்து வந்து பாதிக்கப்பட்ட தென்னை   விவசாயிகளுக்கு 183 கோடியே 59 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.  பட்டுக்கோட்டையில் 2 கோடி மதிப்பிலும், மதுக்கூரில் 1 கோடி  மதிப்பிலும் சார்பதிவாளர் அலுவலகம் புதிதாக கட்டப்பட்டுள்ளது. நெடுஞ்சாலை  துறை மூலமாக  பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதிகளில் போடப்படாத அனைத்து  சாலைகளும் போடப்பட்டுள்ளது. அதிராம்பட்டினத்தில் 25 லட்சத்திற்கு  புதிதாக கால்நடை மருத்துவமனை, ஆலத்தூர் பள்ளியில் ரூ 48 லட்சத்திற்கு  ஆய்வுக் கூடம்  அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

Tags : Pattukottai , You said it! Cencara? .... only multiply the wealth of the family of 5-year MLA: MLA Pattukkottai block civicekar
× RELATED விஸ்வநாதசுவாமி கோயிலில் பிரதோஷ வழிபாடு