விஜய் ஹசாரே டிராபி அரையிறுதியில் குஜராத்: ஆந்திரா ஏமாற்றம்

புதுடெல்லி: ஆந்திரா அணியுடனான கால் இறுதியில் 117 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற குஜராத் அணி, விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் தொடரின் அரை இறுதிக்கு முன்னேறியது. அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த குஜராத் அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 299 ரன் குவித்தது. கேப்டன் பிரியங்க் பாஞ்சால் அதிகபட்சமாக 134 ரன் (131 பந்து, 10 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினார். ராகுல் ஷா 36, ரிபல் படேல் 35, ஹேத் படேல் 28, துருவ் ராவல் 18, சிராக் காந்தி 15 ரன் எடுத்தனர். ஆந்திரா பந்துவீச்சில் ஹரிஷங்கர் ரெட்டி 3, சசிகாந்த், லலித் மோகன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து 50 ஓவரில் 300 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய ஆந்திரா அணி, அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து 41.2 ஓவரில் 182 ரன்னுக்கு சுருண்டது. ரிக்கி புயி அதிகபட்சமாக 67 ரன் (76 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்), நரேன் ரெட்டி 28, சோயிப் கான் 23, சசிகாந்த் 25 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். குஜராத் பந்துவீச்சில் அர்ஸன் நக்வஸ்வாலா 4, பியுஷ் சாவ்லா 3, சிந்தன் கஜா, ஹர்திக் படேல், கரண் படேல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். 117 ரன் வித்தியாசத்தில் வென்ற குஜராத் அணி அரை இறுதிக்கு முன்னேறியது.

* சமர்த், படிக்கல் அபார சதம் கேரளாவை வீழ்த்தி கர்நாடகா தகுதி

பாலம் ஏ ஸ்டேடியத்தில் நேற்று நடந்த 2வது கால் இறுதியில் கர்நாடகா - கேரளா அணிகள் மோதின. டாஸ் வென்ற கேரளா முதலில் பந்துவீச, கர்நாடகா தொடக்க வீரர்கள் கேப்டன் ரவிகுமார் சமர்த், தேவ்தத் படிக்கல் இருவரும் அபாரமாக விளையாடி சதம் விளாசினர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 42.4 ஓவரில் 249 ரன் சேர்த்து அசத்தியது. படிக்கல் 101 ரன் (119 பந்து, 10 பவுண்டரி, 2 சிக்சர்), சமர்த் 192 ரன் (158 பந்து, 22 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினர். கிருஷ்ணப்பா கவுதம் டக் அவுட்டானார்.

கர்நாடகா 50 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 338 ரன் குவித்தது. மணிஷ் பாண்டே 34 ரன், சித்தார்த் 4 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். கேரள பந்துவீச்சில் நெடுமண்குழி பாசில் 3 விக்கெட் கைப்பற்றினார். அடுத்து களமிறங்கிய கேரளா 43.4 ஓவரில் 258 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. விஷ்ணு வினோத் 28, வத்சல் கோவிந்த் 92 ரன் (96 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்), கேப்டன் சச்சின் பேபி 27, முகமது அசாருதீன் 52 ரன் (34 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்), ஜலஜ் சக்சேனா 24 ரன் எடுத்தனர். கர்நாடகா பந்துவீச்சில் ரோனித் மோர் 5, ஷ்ரேயாஸ் கோபால், கிருஷ்ணப்பா கவுதம் தலா 2, பிரசித் கிரிஷ்ணா 1 விக்கெட் வீழ்த்தினர். 80 ரன் வித்தியாசத்தில் வென்ற கர்நாடகா அரை இறுதிக்கு தகுதி பெற்றது.

Related Stories:

>