×

நாலா பக்கம்: புதுவை - கேரளா - மேற்கு வங்கம் - அசாம்

அசாமில் வெற்றியை தீர்மானிப்பது யார்?
அசாம் தேர்தலில் இந்த முறை வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கும் முக்கியப் பிரச்னையாக வேலையில்லாத் திண்டாட்டம் இருக்கும் என்று அரசியல் பார்வையாளர்கள் கணித்துள்ளனர். ‘சி வோட்டர்ஸ்’ வெளியிட்டிருக்கும் கருத்து கணிப்பு,  சுமார் 24.6 சதவிகித வாக்குகள் வேலையில்லா திண்டாட்டத்தின் அடிப்படையில் அமையும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. கொரோனா ஊரடங்கால் கடந்த 19 மாதங்களில் மட்டும் இந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்திருக்கிறது.
இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரத்தின்படி கடந்த 2020 டிசம்பரில் மட்டும் வேலை வாய்ப்பின்மை விகிதம் 7.6 என்ற விகிதத்துக்கு எகிறியுள்ளது. அரசு வேலைவாய்ப்புக்காக மட்டும் சுமார் 20  லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பதிவு செய்துவிட்டு காத்திருப்பதாக 2019ம் ஆண்டு ஆகஸ்ட்டிலேயே தொழில்துறை அமைச்சர் சந்திரமோகன் படோவரி சட்டசபையில் கூறினார். வேலையின்மையினால் ஏற்பட்டிருக்கும் அதிருப்தியும், கோபமும்  ஆளும் பாஜவுக்கு எதிராகத் திரும்புவதற்கான சாத்தியங்கள் அதிகம் இருப்பதாகவும் சி வோட்டர்ஸ் கூறியுள்ளது.

தொகுதி என்ன...குடும்ப சொத்தா?
கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ளது தரூர் சட்டப்பேரவைத் தொகுதி. இங்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த அமைச்சர் ஏகே. பாலன் தற்போதைய எம்எல்ஏவாக இருக்கிறார். இத்தொகுதியில் போட்டியிட சுகாதாரத்துறை  இயக்குனராக பணியாற்றி ஓய்வுபெற்ற அவரது மனைவி பிகே. ஜமீலாவின் பெயர் வேட்பாளர் பட்டியலில் இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கட்சியினர் அவருக்கு அரசியல் அனுபவம் கிடையாது. அமைச்சரின் மனைவி என்பதால் சீட்’  ஒதுக்கக் கூடாது. அவருக்கு கொடுப்பதற்கு தொகுதி என்ன குடும்ப சொத்தா? என்று அமைச்சருக்கும் அவரது மனைவிக்கும் கண்டனம் தெரிவித்து தரூர் தொகுதி முழுவதும் போஸ்டர்  அடித்து ஒட்டப்பட்டதாம். இதையடுத்து, ஜமீலாவின்  பெயர் வேட்பாளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

அப்ப... இவர் தானா சிஎம் கேன்டிடேட்?
மேற்கு வங்கத்தில் ஆட்சியை பிடிக்க துடிக்கும் பாஜவுக்கு அங்கு முதல்வர் பதவியில் அமர்த்த சரியான ஆள் இல்லை என்பதுதான் உண்மை. இதனால், கிரிக்கெட் வீரர் கங்குலியை வளைக்கப் பார்த்தனர். அது தோல்வியில் முடிந்தது. இந்த  நிலையில், பழம்பெரும் பாலிவுட் நட்சத்திரம் மிதுன் சக்கரவர்த்தி புதிதாக பாஜவில் இணைந்துள்ளார். கம்யூனிஸ்ட், திரிணாமுல் என இரு கட்சியிலும் முக்கிய தலைவராக இருந்த இவரது வரவு பாஜவின் வெற்றி வாய்ப்பை பிரகாசப்படுத்தும்  என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடியும் தனது பிரசார பொதுக்கூட்டத்தில் ‘மண்ணின் மைந்தன்’ என மிதுனை பாராட்டி உள்ளார். ஏற்கனவே மம்தா ‘மேற்கு வங்கத்தின் மகள் தான் ஆள வேண்டும்’ என தன்னைத் தானே கூறிக்  கொள்கிறார். அவருக்கு போட்டியாக மிதுனைத் தான் ‘மண்ணின் மைந்தனாக’ பாஜ கருதுவதாக அக்கட்சியின் மூத்த தலைவர்கள் கூறுகின்றனர். எனவே, முதல்வர் வேட்பாளராக மிதுன் அறிவிக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை  என்கின்றனர்.

ரங்கசாமிக்கு பச்சைகொடி
புதுவையில்  தேஜ கூட்டணிக்கு ரங்கசாமி கட்சிக்குள் எதிர்ப்பும்,  ஆதரவும் உள்ளன. குழப்பத்தில் உள்ள அக்கூட்டணியில் பாஜகவுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்ட  பாமக, ஒருபடி மேலே போய், ‘வேட்புமனு தாக்கலுக்கு நாள்  நெருங்கிட்டுப்பா...  ரங்கசாமியை கழற்றி விட்டுட்டு சட்புட்டுனு  கூட்டணியை முடிங்கப்பா...’ என  தங்களது நிலைப்பாட்டை கூறிவிட்டு  சென்றுள்ளது.  ரங்கசாமி தங்களது  அணியில் இல்லாவிடில் கூடுதல் தொகுதி  கிடைக்கும் என்ற  அரசியல் கணக்கில் பாமக  காயை நகர்த்தினாலும், பாஜகவில்  இடம்பெற்றுள்ள மற்றொரு கூட்டணி கட்சியான  அதிமுகவிலும் ரங்கசாமிக்கு  ஒருதரப்பு ஆதரவும், மற்றொரு தரப்பும் எதிர்ப்பு  தெரிவிக்கின்றன.  ரங்கசாமி தனித்து  களமிறங்கினால் அதிமுகவில் உள்ள சில  இலை தரப்பு  நிர்வாகிகளும் என்ஆர் காங்கிரசுக்கு தாவினாலும் ஆச்சியப்படுவதற்கில்லை என்கின்றனர் அக்கட்சி முக்கிய நிர்வாகிகள். இவையும் பாஜகவிடம் ரங்கசாமி பிடிகொடுக்காததற்கு மற் ெறாரு காரணமாக தகவல் அரசியல் வட்டாரத்தில் உலாவுகின்றன.



Tags : Nala ,New Delhi ,Kerala ,West Bengal ,Assam , This time the Assam election was won and lost
× RELATED வாணியம்பாடி அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீர் புகை: பயணிகள் அதிர்ச்சி