×

வெட்டுக்கிளிகள் அட்டகாசத்தால் பதராகும் நெல்மணிகள்!: சீர்காழியில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதம்..!!

மயிலாடுதுறை: காப்பான் பட பாணியில் விவசாயத்தை வெட்டுக்கிளிகள் அளித்து வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வெட்டுக்கிளிகளால் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். சீர்காழி அருகே கீரங்குடி சுற்றுவட்டார பகுதிகளில் அண்மையில் பெய்த மழையில் தப்பிய சம்பா பயிர்கள் தற்போது அறுவடைக்கு தயார் நிலையில் இருக்கிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே விவசாய நிலங்களில் வெட்டுக்கிளிகள் ஊடுருவி நெற்பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

இதனால் நெல் மணிகள் அனைத்தும் அறுவடைக்கு முன்னரே பதராகி வருகின்றன. தொடர்ந்து வெட்டுக்கிளிகள் அட்டகாசத்தால் பொருளாதார ரீதியில் துன்பப்படுவதாக விவசாயிகள் குமுறுகின்றனர். வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த வேளாண்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் பலனில்லை என்றும் விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். வெட்டுக்கிளிகள் அடுத்தடுத்த கிராமங்களுக்கும் பரவாமல் தடுக்க வேளாண் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். வெட்டுக்கிளிகளின் ஊடுருவலால் அடுத்தடுத்த பயிர் சாகுபடியும் கேள்விக்குறியாகியுள்ளது.


Tags : Sirkazhi , Sirkazhi, paddy crops, locusts, groundnuts
× RELATED சீர்காழி சட்டைநாதர்சுவாமி கோயிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றம்