×

சேதமடைந்து காணப்படுகிறது காவு வாங்க காத்திருக்கும் பாலங்கள்-சோழவந்தான் அருகே மக்கள் அச்சம்

சோழவந்தான் : சோழவந்தான் அருகே பல கோடி மதிப்பீட்டில் சாலை போட்டவர்கள், ஆபத்தான பாலங்களை புதுப்பிக்காததால் பொதுமக்கள் தொடர் அச்சத்தில் உள்ளனர்.சோழவந்தானில் இருந்து நகரி நான்கு வழிச்சாலை வரை செல்லும் சுமார் 6 கி.மீ சாலை இப்பகுதியில் முக்கியமான சாலையாகும். இதில் ஆலங்கொட்டாரம், ரிஷபம், திருமால் நத்தம், ராயபுரம், கல்லுப்பட்டி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இவ்வழியே நகரி மற்றும் மதுரை பகுதிக்கு அரசு பேருந்துகள், பள்ளி, கல்லூரி, தொழிற்சாலை வாகனங்கள் சென்று வருகின்றன.

மேலும் மதுரை-திண்டுக்கல் நான்குவழிச் சாலையில் விபத்து ஏற்படும் நேரங்களில், இது முக்கிய மாற்றுப் பாதையாகவும் உள்ளது. இச்சாலையில் ரிஷபம் மயானம் அருகில் ஒரு குறுகிய பாலமும், கல்லுப்பட்டி பிரிவு அருகே ஒரு குறுகிய பாலமும் மிகவும் பழுதடைந்த நிலையில் நீண்ட காலமாக உள்ளது. ஆபத்தான இந்த இரண்டு பாலங்களையும் புதுப்பித்து தருமாறு இப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் பல முறை முறையிட்டும் கண்டுகொள்ளவில்லை.

இந்நிலையில் இரண்டு வருடங்களுக்கு முன் இவ்வழித்தடத்தில் உள்ள சில பாலங்களை விரிவு படுத்தி புதிய தார்ச்சாலை போடும் பணிகள் பல கோடி மதிப்பீட்டில் நடைபெற்றது. அப்போதும் இந்த இரு பாலங்களை மட்டும் அப்படியே விட்டுவிட்டனர். பாலம் எப்போது இடிந்து விழுமோ என வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், “இந்த சாலை புதிதாக போடப்பட்டதன் காரணமே பழுதடைந்த பாலங்களை விரிவுபடுத்தி, அதன்பின் புதிய தார்ச்சாலை போடுவது தான். ஆனால் முறைப்படி இப்பணிகள் நடைபெறவில்லை. இதனால் இதுவரையும், ரிஷபம் மயானம் அருகில் நூற்றாண்டை கடந்த குறுகிய கல்பாலம் இருபுற சுவர்கள் உடைந்தும் தூண் பகுதி சிதைந்தும் ஆபத்தான நிலையில் உள்ளது.

இதேபோல் கல்லுப்பட்டி பிரிவு அருகே உள்ள குறுகிய பாலமும் சுவர்களும், அடிப்பகுதியும் சிதைந்த நிலையில் ஆபத்தாக உள்ளது. இவ்விரு இடங்களிலும் அடிக்கடி விபத்து நடக்கிறது. இதை புதிப்பித்து விரிவுபடுத்தாமல், சாலை போட்டதன் மர்மம் புரியவில்லை. தற்போது தேர்தல் அறிவித்து விட்டதால், இதையே காரணமாக கூறி பழுதடைந்த பாலத்தை புதுப்பிக்க மாட்டார்கள். எனவே மாவட்ட கலெக்டர் தேர்தலுக்கு பிறகு ஆய்வு செய்து ஆபத்தான இரு பாலங்களையும் புதுப்பிக்க வேண்டும்” என்றனர்.

Tags : Kavu ,Cholavanthan , Cholavanthan: The multi-crore road builders near Cholavanthan did not renovate the dangerous bridges.
× RELATED தேர்தல் பிரசாரம் விறுவிறு: டீக்கடைக்காரர்கள் `குஷி’