×

வால்பாறையில் முதியோர்கள் தபால் வாக்களிக்க படிவம் 12டி வினியோகம் துவக்கம்

வால்பாறை : வால்பாறை சட்டமன்ற தொகுதியில் நேரில் சென்று வாக்களிக்க இயலாத 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வருவாய் துறை பட்டியலில் இடம் பெற்றவர்கள் மட்டும் தங்களின் வாக்கை தபால் ஓட்டு மூலம் செலுத்தலாம் என தேர்தல் நடத்தும் அலுவலர் துரைசாமி அறிவித்துள்ளார்.

வால்பாறை தாசில்தார் அலுவலகத்தில் வால்பாறை தாலுகாவிற்கு உட்பட்ட வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் மற்றும் மண்டல அலுவலர்கள் பங்கேற்ற தேர்தல் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. வால்பாறை வாக்குப்பதிவு அலுவலர் துரைசாமி, உதவி வாக்குபதிவு அலுவலர் ராஜா ஆகியோர் பங்கேற்று, படிவம் 12டி பயன்படுத்துவது குறித்து விளக்கினர். வால்பாறை சட்டமன்ற தொகுதியில் 4,697 பேர் 12டி படிவம் பயன்படுத்த தகுதியானவர்கள் என்றும், வால்பாறை தாலுக்காவில் மட்டும் 537 முதியவர்களும், 390 மாற்றுத்திறனாளிகளும் இப்படிவத்தை பயன்படுத்தலாம் என தெரிவித்து பட்டியலையும் வெளியிட்டனர்.  

பாகம் வாரியான  முதவியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பெயர் பட்டியல் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களிடம் வழங்கினர். இன்று(8ம்தேதி) முதல் அவர்கள் பணியை துவக்கி வரும் 14ம் தேதிக்குள் முடிக்கவேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். படிவங்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர் மூலம் மட்டுமே அந்தந்த பகுதி வாக்காளர்களுக்கு நேரில் சென்று வழங்கி அதற்கான ஒப்புதலைப் பெறவேண்டும் என்றும், அரசியல் கட்சியினரை அழைத்து செல்லகூடாது என்றும், வாக்குச்சாவடி நிலைய அலுவலர் சம்பந்தப்பட்ட வாக்காளர்களின் வீடுகளுக்குச் செல்லும்போது அவர்கள் அங்கு இல்லாவிட்டால் சில தினங்களுக்குள் இரு முறை சென்று படிவங்கள் பெறவேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

சம்பந்தப்பட்ட வாக்காளர்கள் தபால் ஓட்டு அளிக்க விருப்பமில்லை எனில் நேரில் வாக்குச்சாவடி மையத்திற்குச் சென்று வாக்கு அளிக்கலாம். 12டி பயனாளிகளின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் அவர்களின் பெயர்களுக்கு எதிரே பிபீ (PB)குறியிடப்படும் என்றும், அதன் விபரங்கள் வேட்பாளருக்கு வழங்கப்படும் என தெரிவித்தார். வாக்குச்சீட்டு வழங்கி தபால் வாக்கு பெறும் நாட்களில், மண்டல அலுவலர், காவல்துறை மற்றும் தேர்தல் அலுவலர்கள் என சிறப்பு குழு அடங்கியவர்கள் தபால் வாக்குகளை பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Tags : Valparai , Valparai: Voters and persons with disabilities over 80 years of age who are unable to go and vote in person in Valparai Assembly constituency
× RELATED திருச்சியில் நவீன வசதிகளுடன் புதிய...